பனங்காட்டீஸ்வரரை வணங்கும் பகலவன்
கருவறையில் மூலவர் வட்ட வடிவ ஆவுடையாரில் கிழக்கு முகமாக லிங்கத் திருமேனியில் காட்சி தருகிறார்.
தேவாரப் பாடல்பெற்ற நடுநாட்டுத் தலம், தக்கன் பேறு பெற்ற ஆலயம், சிபி சக்கரவர்த்தி முக்தி பெற்ற தலம், இறைவனையும், இறைவியையும் சூரியன் ஏழுநாட்கள் ஒருசேர வழிபடும் சிறப்பு தலம், கண் கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம் என பல்வேறு சிறப்பு கொண்டதாக திகழ்கிறது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருத்தலம்.
சூரியன் பேறுபெற்ற தலம்
சிவபெருமானை மதிக்காமல் யாகம் வளர்த்தான் தக்கன். அந்த யாகம் தோல்வியில் முடிந்தது. இந்த பழி பாவம் நீங்குவதற்காக பல சிவ தலங்களுக்குச் சென்று வழிபட்டான் தக்கன். அவன் வழிபட்ட தலங்களில் ஒன்று பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில். இதற்குச் சான்றாக ராஜகோபுரம் உள்ளே வடக்கு முகமாக ஆட்டுத் தலையுடன் தக்கன் வழிபடும் சிலை, புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.
தக்கனின் யாகத்தில் கலந்து கொண்ட சூரியன், வீரபத்திரரால் தாக்கப்பட்டு, பற்களையும், தன் பலத்தையும் இழந்தான். அந்த சாபம் நீங்கி பழைய நிலையை அடைய, இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றான் என்கிறது தலபுராணம். இதனை உறுதிப் படுத்தும் வகையில், இத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரையில், ஏழு நாட்கள் சூரிய பூஜை நடைபெறுகிறது. இந்த நாட்களில் இறைவனின் மீது சூரியன் ஒளி விழுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
இத்தல இறைவனுக்கு ‘நேத்ரோதார சுவாமி’ என்ற பெயரும் உண்டு. இதன் பொருள் ‘கண் கொடுத்த கடவுள்’ என்பதாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள், இங்குள்ள இறைவனிடம் தஞ்சம் புகுந்தால், அவர்களது குறை நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.
ஆலய அமைப்பு
இந்தக் கோவில் 73 சென்ட் நிலப்பரப்பில் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் கருவறைச் சிற்பங்கள் முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தவை. இதற்கு தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை திருமேனிகள் சாட்சி கூறுகின்றன. ராஜகோபுரம் அறுபது அடி உயரத்தில் நான்கு நிலைகளைக் கொண்டு நிமிர்ந்து நிற்கின்றது. இதுவும், இதன் அருகே உள்ள சிங்கமுகத் தூண்களும் விஜயநகர காலத்தவை ஆகும்.
கருவறையில் மூலவர் வட்ட வடிவ ஆவுடையாரில் கிழக்கு முகமாக லிங்கத் திருமேனியில் காட்சி தருகிறார். இவரின் வடிவம் எளிமையாக, அதே நேரத்தில் ஒளி பொருந்தியதாக அமைந்துள்ளது. இத்தல இறைவனை திருஞான சம்பந்தர், ‘புறவார் பனங்காட்டீசன்’ என்று அழைக்கிறார். இருப்பினும் இங்குள்ள கல்வெட்டு களில் இறைவனின் திருநாமம் ‘கண்ணமர்ந்த நாயனார், பரவை ஈஸ்வரமுடைய மகாதேவன், திருப் பனங்காட்டுடைய மகாதேவர்’ என பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவனின் இடப்புறத்தில் சற்றுத் தொலைவில் அம்பாள் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். இறைவியின் திருநாமம் மெய்யாம்பிகை என்பதாகும். அம்மனுக்கு புறவம்மை, சத்தியாம்பிகை என்ற பெயர்களும் வழக்கில் உள்ளன. அன்னையும் கிழக்கு முகமாய் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடனும் அம்மன் அருள்பாலிக் கிறாள்.
கொடிமரம் அருகே பல்லவர் கால கற்பலகை விநாயகர், வள்ளி தெய்வ£னையுடன் ஆறுமுகர் சன்னிதி, 63 நாயன்மார்கள் சிலைகள் மற்றும் திருநீலகண்டர் தன் துணைவியுடன் கோல் தாங்கி நிற்கும் அரிய கோலம், ராஜகோபுரம் உள்புறம் விநாயகரைத் தொழும் தக்கனின் கோலம் ஆகியவை அமைந்துள்ளன. இவற்றிற்கெல்லாம் மகுடமாக இது சூரியத் தலமாக விளங்குவதால், சிவனின் சன்னிதி வளாகத்திற்குள், சூரியன் தனித்து நின்று காட்சி தருகிறார்.
ஊர் பஞ்சாயத்து
இவ்வூரில் தீராத பஞ்சாயத்து வழக்குகளில், அன்னை மெய்யாம்பிகை மீது சத்தியம் செய்யச் சொல்வது வழக்கம். தவறாக பொய் சத்தியம் செய்பவர், அடுத்து எட்டு நாட்களுக்குள் தண்டனை பெறுவது உறுதி என்பது இந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இத்தலத்தின் தலமரமாகப் பனை மரமும், தலத் தீர்த்தமாக பத்ம தீர்த்தமும் அமைந்துள்ளன. தலமரமான பனைமரம் ஆண் பனை உயரமாகவும், பெண்பனை குள்ளமாகவும் காலம் காலமாக காட்சி தருவது வியப்பான ஒன்றாகும். பெண் பனையிலிருந்து விழும் பழத்தை உண்பவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சூரிய உதயத்தின் போது, சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக் கதிர்களால், கருவறையில் உள்ள ஈசனை வணங்குவது சிறப்புக்குரியதாகும். அந்த 7 நாட்களும் பனங்காட்டீஸ்வரர் மீது சூரியன் ஒளி விழும். ஈசனின் தலையில் தொடங்கி பாதத்தைத் தொடும் சூரியக் கதிர், பின்னர் அம்பாளின் சிரசில் இருந்து பாதம் வரை வருகிறது. அத்துடன் அன்றைய சூரிய பூஜை நிறைவடையும். இப்படியே தொடர்ச்சியாக 7 நாட்கள் சூரிய வழிபாடு நடக்கிறது. சூரியன் வழிபட்ட தலம் என்பதால், சூரியக் கதிர் விழும் வகையில் இந்த ஆலயத்தின் கட்டிடம் வடிவமைக்கப்பட்டிருப்பது, நமது முன்னோர்களின் புத்திக்கூர்மைக்கும், ஆற்றலுக்கும் ஓர் எடுத்துக்காட்டாகும்.
இந்த ஆண்டுக்கான சூரிய வழிபாடு கடந்த 14–ந் தேதி தொடங்கியது. இந்த நிகழ்வு வருகிற 20–ந் தேதி (வியாழக்கிழமை) வரை நடக்கிறது.
அமைவிடம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் அமைந்துள்ளது பனையபுரம். விழுப்புரத்திலிருந்து வடகிழக்கே 10 கி.மீ. தொலைவில், விக்கிரவாண்டி– தஞ்சாவூர், விழுப்புரம் – வழுதாவூர் சாலைகளின் சந்திப்பில் இந்த ஊர் இருக்கிறது. விழுப்புரத்திலிருந்து ஏராளமான பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்கின்றன.
இவ்வூரின் கிழக்கே 10 கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற திருவக்கரை வக்ர காளியம்மன் ஆலயமும், அருகே தொல்லியல் சிறப்பு வாய்ந்த அரிய கல் மரங்களும், மேற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் தேவாரத் தலமான திருவாமாத்தூரும், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கவுமார மடமும் உள்ளன.
Next Story