பிரார்த்தனையும் பண்பாட்டின் ஓர் அங்கமே!


பிரார்த்தனையும் பண்பாட்டின் ஓர் அங்கமே!
x
தினத்தந்தி 20 April 2017 9:30 PM GMT (Updated: 19 April 2017 8:22 AM GMT)

‘அல்லாஹ்வின் தூதரே, நாம் பகிரங்கமாக மக்களுக்கு மத்தியில் சென்று இறைச் செய்தியை எடுத்துக் கூறலாமே’ என்று சொன்னார்.

‘பிரார்த்தனை’ என்று சொன்னால், ‘துஆ’வின் மகத்துவம் குறித்தோ, அதன் சிறப்புகள் குறித்தோ அல்லது பிரார்த்தனையின் நிபந்தனைகள் மற்றும் ஒழுக்கங்கள் குறித்தோ இங்கே நாம் கூறப்போவதில்லை. மாறாக உள்ளங்களை வெல்வதற்கு பிரார்த்தனையை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பது குறித்து மட்டுமே பார்க்க இருக்கின்றோம்.

பொதுவாகவே, தங்களுக்காக அடுத்தவர் ‘துஆ’ கேட்பதை மக்கள் விரும்புவார்கள். ஒருவர் நம்மிடம் அவருடைய பிரச்சினையைச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்... உடனே நாம், ‘ஆண்டவன் இருக்கான்...’ என்று ஒற்றை வார்த்தையில் சொன்னால் நன்றாக இருக்குமா? அதனை அவர் விரும்பவும் மாட்டார். பட்டும் படாமலும் தப்பிச் செல்லும் ஒரு கைங்கர்யம்தான் இந்த ‘ஆண்டவன் இருக்கான்’ என்ற வார்த்தை.

மாறாக, ‘‘இறைவன் உதவி செய்வான்.. இறைவன் லேசாக்குவான்... ஒன்றும் கவலைப்படாதீர்கள். உங்களுக்காக நான் கண்டிப்பாக பிரார்த்தனை செய்கிறேன்’’ என்று கூறிப்பாருங்கள்.

வாய்ப்பு இருந்தால், அவர் காதுபடவே... ‘இறைவா! இவருடைய பிரச்சினையை தீர்த்து வைப்பாயாக. இவருடைய தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பாயாக’ என்று அவர் காதுபடவே பிரார்த்தனை செய்யுங்கள்.

அது அவரது மனதிற்கு இதமாக அமையும். ஒருபோதும் அதனை அவர் மறக்க மாட்டார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களுடன் அமர்ந்திருக்கும் சபையில் அனைவருக்கும் முன்பாக ஒருவர் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு விபசாரத்திற்கு அனுமதி தாருங்கள்’ என்று கேட்கிறார்.

மிகத்தெளிவாக இதனை அவர் கேட்கிறார். அண்ணலாரின் காதுகளுக்கு அருகே வந்து ரகசியமாகவோ.. அல்லது பெருமானார் (ஸல்) அவர்கள் மட்டும் அமர்ந்து இருக்கும்போதோ அல்ல. மாறாக அனைவரும் இருக்கும் சபையில் மிகத்தெளிவாகவும் பகிரங்கமாகவும் கேட்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் அந்த இளைஞரை அழைத்து அவருக்கு உபதேசம் செய்கின்றார்கள். ‘உனது தாய் விபசாரம் செய்வது உனக்கு விருப்பமா?, சகோதரி..? தாயின் சகோதரி..?’ என்று தொடர்ந்து கேட்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

செய்த தவறை உணரத் தொடங்குகிறார் அந்த இளம் நபித்தோழர். இறுதியில் பணிவுடன், ‘அல்லாஹ்வின் தூதரே! எனது இதயம் தூய்மை பெற இறைவனிடன் எனக்காக துஆ செய்யுங்கள்’ என்று கேட்கிறார்.

அவரை அழைத்து தன் அருகில் அமர வைத்து அவரது நெஞ்சத்தில் கை வைத்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்: ‘இறைவா... இவரின் உள்ளத்தை தூய்மைப்படுத்துவாயாக. இவரின் பாவங்களை மன்னிப்பாயாக, இறைவா... இவரின் கற்பைப் பாதுகாப்பாயாக’.

அந்த இளைஞர் இவ்வாறு கூறியவராக அந்த சபையில் இருந்து எழுந்து சென்றார்: ‘இந்தச் சபையில் நுழையும்போது விபசாரமே நான் அதிகம் விரும்பும் ஒரு செயலாக இருந்தது. ஆனால், இப்போது நான் அதிகம் வெறுக்கும் வி‌ஷயமாக அந்த விபசாரமே மாறிவிட்டது’ (அஹ்மத், தபரானி).

மக்காவின் ஆரம்ப நாட்கள். மொத்த முஸ்லிம்களே 38 நபர்கள் தான். அபூபக்கர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே, நாம் பகிரங்கமாக மக்களுக்கு மத்தியில் சென்று இறைச் செய்தியை எடுத்துக் கூறலாமே’ என்று சொன்னார்.

நபி (ஸல்) அவர்களோ, ‘அபூபக்கரே! நாம் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருக்கின்றோமே’ என்று கூறினார்கள்.

ஆனாலும் அபூபக்கர் (ரலி) அவர்கள் கேட்கவில்லை. நபிகளாரை அழைத்துக்கொண்டு கஅபாவிற்கு அருகே சென்று அபூபக்கர் (ரலி) அவர்களே இஸ்லாத்தின் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.

கோபம் கொண்ட குறைஷிகள் அபூபக்கர் (ரலி) அவர்களை மூர்க்கத்தனமாகத் தாக்கத் தொடங்கினர். குறிப்பாக அபூபக்கர் (ரலி) அவர்களை உத்பா பின் ரபீஆ என்பவன் மிகக்கொடூரமாகத் தாக்கினான். அவனது காலணிகளால் அபூபக்கரின் முகத்தில் கடுமையாக உதைத்தான்.

அபூபக்கர் (ரலி) அவர்களுடைய முகத்தில் மூக்கு எது வாய் எது என்று தெரியாத அளவுக்கு காயமும் ரத்தமும். காயத்தின் காரணத்தால் அங்கேயே மயக்கமுற்றார்கள் அபூபக்கர் (ரலி).

மயக்கமுற்ற அபூபக்கரை இறந்துவிட்டார் என்று கருதி ஒருபோர்வையால் சுற்றி அவருடைய வீட்டுக்குள் வீசிச் சென்றனர். ‘உயிரோடு இருந்தால் தண்ணீர் கொடுங்கள்’ என்று கிண்டல் வேறு.

அருகில் அபூபக்கர் (ரலி) அவர்களின் தாயார் அழுத வண்ணம் நின்றுகொண்டு இருக்கின்றார். கண் விழிக்கிறார் அபூபக்கர் (ரலி).

கண் விழித்ததும் அவர்கள் கேட்ட முதல் கேள்வி: ‘அல்லாஹ்வின் தூதர் எங்கே..? அவர்களுக்கு என்னவாயிற்று?’ என்பதுதான்.

இறைத்தூதருக்கு ஒன்றும் சம்பவிக்கவில்லை, நலமாக உள்ளார் என்ற செய்தியை அறிந்து... அந்த நிலையிலும் தாயின் கைத்தாங்கலுடன் பெருமானார் (ஸல்) அவர்களைப் பார்க்கச் செல்கின்றார்.

நபிகளாரைக் காண்கிறார். பசி ஒருபக்கம்... தாகம் ஒருபக்கம்... வலி மறுபக்கம். ஆயினும் அபூபக்கர் (ரலி) அவர்களுடைய குறிக்கோள் எல்லாம் தமது தாயை எப்படியாவது இஸ்லாத்தில் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதாகவே இருந்தது. அவர் கூறினார்: ‘அல்லாஹ்வின் தூதரே! இதோ எனது தாய். இவரை இஸ்லாத்தைபால் அழையுங்கள். இவர்களுக்காக துஆ செய்யுங்கள்’.

அந்த இடத்திலேயே நபி (ஸல்) அவர்கள் அந்த அம்மையாருக்காக துஆ செய்தார்கள். அவரும் இஸ்லாத்தை ஏற்றார். (இப்னு ஹிஷாம்)

அபூஹுரைரா (ரலி) அவர்களின் தாயாருக்காக அவருக்கு அருகில் வைத்தே நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனையை வரலாறு பதிவு செய்துவைத்துள்ளது. (முஸ்லிம்)

துஃபைல் (ரலி) அவர்கள் தம்முடைய மக்களுக்காக துஆ செய்யுமாறு பெருமானார் (ஸல்) அவர்களிடம் கூறியபோது, ‘யா அல்லாஹ்! தவ்ஸ் கோத்திரத்தினருக்கு நேர்வழி காட்டுவாயாக!’ என்று இருமுறை அந்த இடத்தில் வைத்தே நபி (ஸல்) அவர்கள் துஆ செய்துள்ளார்கள்.

மூஸா (அலை) அவர்களுக்கு பெரும் உறு துணையாக விளங்கியது யார்..? அவருடைய சகோதரர் ஹாரூன் (அலை) அவர்கள்தானே. யாரை இறைத்தூதராக தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் உரிமை அல்லாஹ்வைச் சார்ந்தது. இவர் தான் நபியாக வரவேண்டும் என்றோ, இவரை உனது தூதராக அனுப்பு என்றோ அல்லாஹ்விடம் யாரும் விண்ணப்பிக்க முடியாது.

ஆயினும் மனித இன வரலாற்றிலேயே ஒருவருடைய பிரார்த்தனை மூலம் இன்னொருவர் நபியாக அனுப்பப்பட்டார் என்றால் அது ஹாரூன் (அலை) அவர்கள் மட்டுமே. தமது சகோதரருக்காக மூஸா (அலை) அவர்கள் இவ்வாறு துஆ செய்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது: ‘மேலும், என்னுடைய சகோதரர் ஹாரூன் என்னைவிட அதிகமாக நாவன்மை உடையவர். அவரை உதவியாளர் எனும் முறையில் என்னுடன் அனுப்பி வைப்பாயாக! அவர் எனக்குத் துணையிருப்பார்’ (28:34)

அடுத்தவருக்காக நாம் செய்யும் பிரார்த்தனைகள் அவர்களுடைய உள்ளங்களை வெல்லும் என்பதற்காகத்தானோ என்னவோ, உம்ரா செய்வதற்காக உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரியபோது, பெருமானார் (ஸல்) அவர்கள் உமரிடம் வைத்த ஒரேயொரு கோரிக்கை, ‘என் சகோதரரே! உமது பிரார்த்தனையில் எம்மை மறந்துவிடாதீர்’. (திர்மிதி)

மவுலவி நூஹ் மஹ்ளரி, குளச்சல்.

Next Story