கலைநயம் மிகுந்த கயிலாசநாதர் ஆலயம்


கலைநயம் மிகுந்த கயிலாசநாதர் ஆலயம்
x
தினத்தந்தி 25 April 2017 2:15 AM GMT (Updated: 24 April 2017 2:04 PM GMT)

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோரா, குகை சிற்பங்களுக்கு பெயர் பெற்றது. இந்த எல்லோரா மலையைக் குடைந்து பல குகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

காராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோரா, குகை சிற்பங்களுக்கு பெயர் பெற்றது. இந்த எல்லோரா மலையைக் குடைந்து பல குகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் எண்கள் இடப்பட்டது 34 குகைகள், எண்கள் இடப்படாதவை 7 குகைகள். இங்குள்ள குகைகள் அனைத்தும் இந்து மதம், பவுத்த மதம், ஜைன மதங்களின் நம்பிக்கையை உணர்த்துவதாக உள்ளன. எண்கள் இடப்பட்ட குகைகளில் 1 முதல் 12 வரையான குகைகள் பவுத்த மதத்தவரின் நினைவாலயங்களாக இருக்கின்றன. 13 முதல் 29 வரையிலான குகைகள் அனைத்தும் இந்து மத சாயல் கொண்டவை. 30 முதல் 34 வரையானது ஜைனர்களின் மதக்கோட்பாடுகளோடு ஒத்துபோகின்றன.

இங்கு நாம் காண இருப்பது இந்தப் பகுதியில் அமைந்துள்ள 16–ம் எண் கொண்ட குகை. அப்படியென்ன சிறப்பு இதில் இருக்கிறது என்கிறீர்களா?..

இங்கு வடிக்கப்பட்டிருப்பது 100 அடி உயரம் கொண்ட சிவ ஆலயம். இதனை கயிலாசநாதர் ஆலயம் என்று அழைக்கிறார்கள். மலை உச்சி யில் இருந்து கீழ் நோக்கி செங்குத்தாக செதுக்கப்பட்டிருக்கிறது இந்த ஆலயம். இதில் குறிப்பிடத்தகுந்த வி‌ஷயம் என்னவென்றால், மலையைக் குடைந்து, அதிலிருந்து பெரும் பாறையைத் தனியாக வெட்டி எடுத்து, மீதமுள்ள பாறைகளை சிறு சிறு பிரிவுகளாகப் பிரித்து, தனித் தனிச் சன்னிதிகளாகவும், யானைகளாகவும், கீர்த்தி ஸ்தம்பங்களாகவும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த கயிலாசநாதர் ஆலயத்தைக் கட்ட வெளியில் இருந்து சிறு கல்லைக்கூட எடுத்து வரவில்லை. கோவில் அனைத்தும் இதே மலையின் கற்களாலேயே உருவானவை என்பதுதான் இதன் விசே‌ஷம்.

விமானத்துடன் கூடிய இந்த ஆலயத்தை ராஷ்டிரக்கூட வம்சத்தைச் சேர்ந்த முதலாம் கிருஷ்ணர் என்ற மன்னன் (கி.பி.757–கி.பி.773) காலத்தில் கட்டத் தொடங்கியதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் ஆலயம் எப்போது கட்டி முடிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. இது ஒரு ஒற்றைக்கல் முறையிலான ஆலயம் ஆகும். இந்தக் கோவிலை உருவாக்க நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றும், கிட்டத்தட்ட 4 லட்சம் டன் எடை கொண்ட பாறைகள் குடைந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆலயத்தை அமைக்க மூன்று விதமான உளிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கருத்து கூறியுள்ளனர். திராவிடக் கலைப்பாணிக்குரிய பண்புகளையும், ராஷ்டிரக்கூட கலைப்பாணியின் அம்சங்களும் கலந்து இந்த ஆலயம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

250 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பில், அதாவது அந்த அளவிலான மலைப்பகுதியைக் குடைந்து இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆலயம் 148 அடி நீளமும், 62அடி அகலமும், 100அடி உயரமும் கொண்டிருக்கிறது.

ஆலயத்தின் கோபுரம் இரட்டை அடுக்கு கொண்டு அமைந்திருக்கிறது. நந்தி மண்டபம், கோபுரம் இரண்டும், இரண்டு அழகிய கல் தூண்களால் இணைக்கப்பட்டுள்ளன. ஆலய விமானம் 3 அடுக்கு கொண்டது. இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் கயிலாசநாதர் மேற்கு திசை பார்த்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஆலயம் முழுவதையும் தங்களின் தோளில் தாங்குவதுபோன்ற தோற்றத்தில், மிகப்பெரிய யானைச் சிற்பங்கள், அடி பீடத்தில் வரிசையாக வடிக்கப்பட்டிருக்கின்றன. இது பார்ப்பதற்கு கலையம்சம் பொருந்தியதாக இருக்கிறது. ஆலயத்தின் வட பகுதியில் உள்ள சிற்பங்களில் ராவணனின் சிற்பம் சற்று வித்தியாசமாக அமைந்திருக்கிறது. தன்னுடைய 10 தலைகளில் 9 தலைகளை ஈசனுக்கு காணிக்கையாக தருவது போன்றும், அந்த 9 தலைகளையும், சிவபெருமான்   மாலையாக கோர்த்து அணிந்திருப்பது போன்றும் இந்த சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர சிவ– பார்வதி திருக்கல்யாண சிற்பமும், அதன் அருகிலேயே திரிபுரம் எரித்த திரிபுராந்தகர் சிற்பமும் அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தேரில் சிவபெருமான் தன்னுடைய கால்களை அகலவிரித்து நின்றபடி, வில்லில் அம்பைப் பூட்டி 3 அசுரர்களின் தலைகளுக்கும் குறி வைப்பது போல் இந்த திரிபுராந்தகர் சிலை அமைந்துள்ளது. தேரின் சாரதியாக பிரம்மதேவன் இருக்கிறார். 4 வேதங்களும் தேரின் சக்கரங்களாக உள்ளன.

உலக அதிசயங்களில் ஒன்றாக சேர்க்கும் அளவுக்கு உயர்ந்த கலையம்சத்துடன் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தைப் பார்க்கும் போது, மதத்தை வளர்ப்பதற்காக கோவில் அமைக்கப்பட்டதா? அல்லது கலையை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டதா? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனெனில் பக்தியைக் காட்டிலும், கலையுணர்வே மிகுதியாக எழுந்துநிற்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எல்லோரா கயிலாசநாதர் திருக்கோவில்.

Next Story