ஆன்மிகம்

75. விந்தை புரிபவன் இறைவன் + "||" + Lord of the Sun is Lord

75. விந்தை புரிபவன் இறைவன்

75. விந்தை புரிபவன் இறைவன்
தாயின் வயிற்றில் வளர்ந்து வரும் கருவில் முதலில் உருவாவது செவிப்புலனே ஆகும். கருக்குழந்தை 6–வது மாதத்தில் ஒலிகளைக் கேட்கத் தொடங்குகிறது.
அறிவோம் இஸ்லாம்

- பாத்திமா மைந்தன்

தாயின் வயிற்றில் வளர்ந்து வரும் கருவில் முதலில் உருவாவது செவிப்புலனே ஆகும். கருக்குழந்தை 6–வது மாதத்தில் ஒலிகளைக் கேட்கத் தொடங்குகிறது. இந்த மாதத்தில், ‘குழந்தைகளின் திறமைகள் கூடும். வெளிச்சத்தம் கேட்டால் உள்ளே குழந்தை குதிக்கும்’ என்று மருத்துவ உலகம் உரைக்கிறது. ஆனால் 8–வது மாதத்தில்தான் கண்ணின் விழித்திரை வெளிச்சத்தை உணரும் தன்மையைப் பெறுகிறது. இந்த மாதத்தில், ‘குழந்தையின் நீளமும் எடையும் கூடும். மூளையின் நரம்பு மண்டலமும் நன்கு வளரும். கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியும்’ என்று கூறப்பட்டுள்ளது.


கருவில் உருவாகும் குழந்தையின் புலன் உணர்வுகளை கூறும் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களைப் படித்துப் பாருங்கள்.

‘‘இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இதயங்களையும் அமைத்தான்’’ (32:9) என்றும்,

‘‘(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியில் இருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம். அவனைச் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்’’ (76:2) என்றும்,

‘‘இன்னும் அவனே உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் படைத்தான். மிகக் குறைவாகவே அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்’’ (23:78) என்றும் திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.

மேற்கண்ட அனைத்து வசனங்களிலும் பார்வைப் புலனுக்கு முன்பாக செவிப்புலன் இடம் பெற்று இருப்பதைக் காணலாம். கருவில் இருக்கும் குழந்தைக்கு முதலில் செவிப்புலனும், அதைத் தொடர்ந்து பார்வைப்புலனும் கிடைக்கிறது என்ற நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பு, குர்ஆனின் குரலோடு பொருந்திப்போவதை அறியலாம்.

மனித உருவை உண்டாக்குவது கரு. ஆணின் விந்தணு, பெண்ணின் கரு முட்டையுடன் சேர்ந்து கரு உண்டாகிறது. கரு முதிர்ச்சி அடைந்து உருவும், உருவமும், உயிரும் தோன்று
கிறது.

இதைத் திருக்குர்ஆனின் பல வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

‘‘(கர்ப்பக் கோளறைக்குள் சொட்டு சொட்டாய்) ஊற்றப்படும் இந்திரியத் துளியாக அவன் இருக்கவில்லையா? பின்னர் ரத்தக் கட்டியாக (அட்டை போன்று ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையில்) இருந்தான். அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான். பின்னர் அவனில் இருந்து ஆண் பெண் என்ற ஜோடிகளை உண்டாக்கினான்’’ (75:37).

மேற்கண்ட குர்ஆன் வசனம், ஆணிடம் இருந்து வெளிப்படும் விந்துதான் கருக்குழந்தையின் பாலினத்தைத் தீர்மானித்திட காரணமாக அமைந்துள்ளது என்ற கருத்தை எடுத்துரைக்
கிறது.

சாதாரணமாக மனித உடம்பில் ஒரு செல்லில் 23 ஜோடி (நாற்பத்தாறு)  குரோமோசோம்கள் இருக்கும். ஆனால் உயிரணுவிலும், சினை முட்டையிலும் மட்டும் தலா 23 குரோமோசோம்கள்தான். இவற்றில் இருபத்து மூன்றாவது குரோமோசோம் மட்டும் அந்தக் கரு ஆணா பெண்ணா என்று தீர்மானிக்கும் குரோமோசோம்.

இனப்பெருக்கத்தில் சினை முட்டைகள்  பெண்ணின் சினைப் பையில் (ஓவரி) உற்பத்தி ஆகின்றன. இவற்றில் ‘எக்ஸ் எக்ஸ்’ குரோமோசோம்கள் இருக்கும். ஆணின் விந்தகத்தில் விந்தணுக்கள் உற்பத்தி ஆகின்றன. இவற்றில் ‘எக்ஸ் ஒய்’ குரோமோசோம்கள் இருக்கின்றன. இவை இணைகிறபோது பெண்ணின் சினை முட்டையில் உள்ள எக்ஸ் குரோமோசோமும், ஆணின் விந்தணுவில் உள்ள எக்ஸ் குரோமோசோமும் இணைந்தால் பெண் குழந்தை உருவாகும். பெண்ணின் சினை முட்டையில் உள்ள எக்ஸ் குரோமோசோம், ஆணின் விந்தணுவில் உள்ள ஒய் குரோமோசோமுடன் இணைந்தால் ஆண் குழந்தை பிறக்கும். பெண்ணுடைய சினை முட்டையில் ஒய் குரோமோசோம் இல்லை. இதனால் உருவாகும் குழந்தை ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பதில் பெண்ணுக்கு எந்தவித பங்கும் இல்லை. ஆணிடம்தான் அதற்கான தன்மை உள்ளது என்று இன்றைய மரபியல் கூறும் உண்மையைத் திருக்குர்ஆன் அன்றே எடுத்துக் கூறி உள்ளது.

‘‘மனிதனை ஒரு துளி இந்திரியத்தில் இருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா?’’ (36:77) என்றும்,

‘‘மனிதன் எதில் இருந்து படைக்கப்பட்டான் என்பதை அவன் கவனிக்கட்டும். குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் அவன் படைக்கப்பட்டான்’’ (86:5) என்றும்,

‘‘அவன் மனிதனை ஒரு துளி விந்தில் இருந்து படைத்தான்’’ (16:4) என்றும் குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.

கரு எவ்வாறு உருவாகிறது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுவதைக் கவனித்தால், திருக்குர்ஆன் கூற்று, உண்மை என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

‘‘ஆண்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உயிரணுவும் ஓர் அதிசயம். சுமார் 0.05 மில்லி மீட்டர். அதற்கும் தலை, நடுப்பகுதி, வால் பகுதி உண்டு. உடலுறவின்போது ஒருமுறை வெளிப்படும் ஒரு டீ ஸ்பூன் விந்தில் இருக்கும் உயிரணுக்களின் எண்ணிக்கை முன்னூறு மில்லியன்– அதாவது முப்பது கோடி. அந்த கோடிக்கணக்கான உயிரணுக்கள் எப்படியும் சினை முட்டையை அடைந்தே தீருவது என்ற முனைப்போடு முன்னேறிச் செல்கின்றன. நீந்திச் செல்லும் அந்த உயிரணுக்களில் ஒரே ஒரு உயிரணு மட்டும் கருக்குழாயில் இருக்கும் சினை முட்டையுடன் இணைந்து கரு உருவாகும் அதிசயம் நடக்கிறது. ஆணின் உயிரணும், பெண்ணின் சினை முட்டையும் இணைந்து ஒன்றாக உருவெடுத்த கரு, ஒரே ஒரு ‘செல்’லாக கடுகு வடிவத்தில் இருக்கும். இதன் பிறகு இந்தக் கரு, கருப்பையில் தங்கி வளரத் தொடங்குகிறது’’

இது மகப்பேறு மருத்துவர்களின் கருத்து. ‘ஒரு துளி விந்து’– ‘குதித்து வெளிப்படும் ஒரு துளி நீர்’–‘பீறிட்டு பாயும் விந்து’ என்ற குர்ஆனின் சொற்றொடரோடு மருத்துவர்களின் கருத்து நூற்றுக்கு நூறு பொருந்திப் போவதைப் பார்க்கலாம். இதன் மூலம் விந்தைக்கொண்டு விந்தை புரிபவன் இறைவன் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

(தொடரும்)

ஆசிரியரின் தேர்வுகள்...