வெற்றியை வழங்கும் வல்லம் ஏகவுரி அம்மன்


வெற்றியை வழங்கும் வல்லம் ஏகவுரி அம்மன்
x
தினத்தந்தி 25 April 2017 3:30 AM GMT (Updated: 24 April 2017 2:27 PM GMT)

சோழ மன்னர்களின் வழிபாட்டு தெய்வமாகவும், குலதெய்வமாகவும், அவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கும் காளியாகவும் விளங்கியவள் ஏகவுரி அம்மன்.

சோழ மன்னர்களின் வழிபாட்டு தெய்வமாகவும், குலதெய்வமாகவும், அவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கும் காளியாகவும் விளங்கியவள் ஏகவுரி அம்மன். வல்லப சோழன், கரிகாற்சோழன், ராஜராஜ சோழன் ஆகியோரால் வழிபடப்பட்டு வந்தவள். இவர்கள் போர்க்களம் செல்லும் போது வெற்றிவாகை சூட இத்தேவியிடம் அருள் வாக்கு கேட்டு உத்தரவு பெற்ற பின்னரே செல்வது வழக்கம்.

தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வல்லம் என்ற ஊர். இங்குள்ள ஏகவுரி அம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. எட்டு திருக்கரங்களுடன் தேவி, பத்மபீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த தேவி ஒன்றன்மீது ஒன்றாக அமைந்த இரண்டு திருமுகங்களுடன் காட்சிதருகிறாள். தீயவர்களை அழிக்க உக்கிரமுடன் ஒரு முகம், வழிபடும் அடியவர்களின் துயர் நீக்க சாந்தமுடன் மற்றொரு முகத்துடனும் காட்சிஅளிக்கிறாள். அம்மன் பாதத்தில் சக்திவாய்ந்த ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் சக்தியானது வழிபடும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவுகிறது.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் தஞ்சன் என்ற அரக்கன் சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான். அவனது தவத்திற்கு மகிழ்ந்த இறைவன் அவன் முன்பு  தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். மகிழ்ந்து போன தஞ்சன், பெண்களைத்தவிர வேறு எவரும் என்னை வெல்ல முடியாத வரம் வேண்டும் என்றான். இறைவனும், ஒரு பெண்ணை தவிர யாராலும் உன்னை வெல்ல முடியாது என்ற வரத்தை வழங்கினார்.

இறைவனிடம் வரம் பெற்ற ஆணவத்தால் தஞ்சன் முனிவர்களையும், தேவர்களையும் மிகவும் கொடுமைப்படுத்தினான். தேவர்கள் சிவபெருமானை சரண் அடைந்து அரக்கனின் கொடுமைகள் குறித்து முறையிட்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய சிவபெருமான், அரக்கன் அழியும் நேரம் நெருங்கிவிட்டது என்று கூறி, பார்வதி தேவியை அழைத்து அரக்கனை அழிக்க ஆணையிட்டார். ஈசனின்ஆணையை ஏற்ற கவுரி சிம்ம வாகன மேறி எட்டுக்கரங்களிலும் ஆயுதம் ஏந்தி  புறப்பட்டாள். அளவுகடந்த கோபத்தோடு வந்த தேவியைப் பார்த்த அரக்கன் போருக்கு தயாரானான். தேவிக்கும், அரக்கனுக்கும் கடும்போர் ஏற்பட்டது. தஞ்சன் வெறியுடன் தன்வில்லை வளைத்து பாணங்களைத் தொடுத்து தேவியின் மீது சரமாரியாக எய்தினான்.

தேவி அவற்றை எல்லாம் தடுத்துத் தள்ளி பெரும் போர் புரிந்தாள். கதாயுதத்தால் தஞ்சன் மார்பு மீது தாக்கினாள். இறுதியாக அரக்கன் எருமைக் கடாவாக மாறி தேவியைத் தாக்கினான். சிம்ம வாகனத்தில் சீற்றமுடன் வந்த தேவி எருமைக்கடாவாக வந்த அரக்கனை வாளால் தலைவேறு, உடல் வேறு என இரண்டு துண்டாக்கினாள். உயிர் பிரியும் நேரத்தில் அரக்கனுக்கு அறிவு வந்து தேவியைப் பணிந்து, இந்த பகுதி எனது பெயரால் தஞ்சாபுரி என்று அழைக்கப்படவேண்டும் என்று வேண்டினான். அவன் கேட்ட வரத்தை வழங்கினாள் தேவி. அரக்கனை வதைத்த பின்னும், அம்மனின் ஆக்ரோ‌ஷம் அடங்கவில்லை. அதே உக்கிரத்துடன் வல்லத்தில் அலைந்து திரிந்தாள். இதனால் நாடெங்கும் வறட்சி உண்டாயிற்று. நீர் நிலைகள் அனைத்தும் வற்றிப்
போயின.

நாடெங்கும் பஞ்சம், பசி, பட்டினி என மக்கள் தவித்தனர். நிலைமையை உணர்ந்த சிவபெருமான் பார்வதியை நோக்கி விரைந்தார். ‘‘ஏ கவுரி’’ சாந்தம் கொள் என்று கேட்டுக்கொண்டார். அம்மையின் கோபம் சற்று தணிந்தது. நெல்லிப்பள்ளம் என்ற குளத்தில் மூழ்கினாள். அப்போது பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து அங்கேயே எழுந்தருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு ஏகவுரி அம்மனாக வடக்கு நோக்கி அமர்ந்து அருள்புரிந்து வருகிறாள்.

அம்மன்  அரக்கனை வதம் செய்தது ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். எனவே அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து, தீ மிதித்து அம்மனை சாந்தப்படுத்துகின்றனர்.

அம்மன் எழுந்தருளிய இடத்தில் சுதை வடிவத்தில் அம்மன் சிலை எழுப்பப்பட்டது. அந்த சுதை வடிவம் இன்றளவும் மாற்றப்படாமல் வழிபடப்பட்டு வருகிறது.

கோவில் கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் விநாயகர், முருகன், காத்தவராயன், சண்டிகேசுவரர், வராகி, பிரத்தியங்கரா தேவி, நாகர் ஆகியோரை தரிசனம் செய்யலாம். வெளிப்பிரகாரத்தில் மதுரை வீரன் தன் துணைவியர்களான வெள்ளையம்மாள், பொம்மியுடன் காட்சி தருகிறார். கருப்பசாமி, லாட சன்னியாசி, காத்தான் ஆகிய கிராம தேவதைகளையும் அங்கே பார்க்கலாம். ஏகவுரி அம்மன் ஆலயத்தில் பகல் முழுவதும் கோவில் நடை திறந்
திருக்கும்.

தடைப்பட்ட திருமணம் நடைபெற மற்றும் குழந்தை பாக்கியம் முதலியவைக்கு மிகச்சிறந்த பரிகார தலமாக உள்ளது. திருமண தடை உள்ள பெண்கள் இங்கே வந்து அம்மனுக்கு புடவை சாத்தி, அம்மனின் திருப்பாதத்தில்  மஞ்சள் வைத்து வணங்குகின்றனர். அதில் இருந்து ஒரேயொரு மஞ்சளை எடுத்து வந்து தினமும் குளிக்கும்போது பூசிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு அம்மனை வழிபட துன்பங்கள் நீங்கி சந்தோ‌ஷம் நிலைக்கும் என்கின்றனர். ஏவல், பில்லி, சூனியம், கிரகக்கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து அம்மனை வழிபட்டு பலன் பெறுகின்றனர்.

ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி அன்று தேவிக்கு மகா சண்டி ஹோமம், திருவிளக்கு பூஜை, சித்ராபவுர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறும். சண்டிஹோமம் செய்வதால் பராசக்தியின் வடிவங்களாகிய துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகள் மகிழ்ந்து துயர்களை நீக்கி வாழ்வில் அனைத்து நலன்களையும் பக்தர்களுக்கு அருள்வதாக நம்புகின்றனர்.

–உவரிலிங்கம்.


ராகு, கேது தோ‌ஷம்  நீங்கும்

கோவில் கருவறையில் ஏகவுரி அம்மனைச் சுற்றியபடி இரண்டு நாகங்கள் இருப்பதை காணலாம். ராகுவும், கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது. ராகு, கேது தோ‌ஷம் நீங்கும் தலம். இந்த தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்தால் நாகதோ‌ஷம், கால சர்ப்பதோ‌ஷம்,  களத்திரதோ‌ஷம், முதலான அனைத்து தோ‌ஷங்களும்   நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

எருமைக்கன்று காணிக்கை

ஏகவுரி அம்மன் கோவில் ஒரு பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. மிகவும் உடல் நலமில்லாமல் இருப்பவர்கள் தாங்கள் உடல் நலம் பெற்றால் அம்மனுக்கு எருமைக்கன்றை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக்கொள்கிறார் கள். அவ்வாறு பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் தாங்கள் உடல் நலம் பெற்றவுடன் அந்த வருடம் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை திருவிழா அன்று எருமைக்கன்றை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி வழிபட்டுச்செல்கின்றனர்.

பிராது கட்டும் வழக்கம்

ஏகவுரி அம்மன் கோவிலில் பிராது கட்டும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. சொத்தை பறிகொடுப்பது, திருட்டு போன்ற சம்பவங்களுக்கு அம்மனிடம் பிராது கொடுப்பதால் நியாயம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நடந்த சம்பவங்களை கோவில் பூசாரியிடம் ஒரு வரிவிடாமல் கூறுவார்கள். அதற்கு பூசாரி அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து முறையிடுவார். இதைக்கேட்டு ஏகவுரி அம்மன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச்செய்கிறாள் என்பது ஐதீகம்.


Next Story