'மென்மையை இழப்பவன் நன்மையை இழப்பான்'


மென்மையை இழப்பவன் நன்மையை  இழப்பான்
x
தினத்தந்தி 11 May 2017 10:30 PM GMT (Updated: 11 May 2017 12:31 PM GMT)

மென்மை என்பது ஒரு நன்மையாகும். மென்மையான எந்த காரியமும் தீமையில் முடிவதில்லை.

தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களில் ஒன்று கோபம். கோபம் என்பது தீமைகளில், ஒன்று வெளிப்படையாக இருக்கலாம் அல்லது மறைமுகமாக இருக்கலாம்.

கோபத்தின் விளைவுகள் குறித்து எச்சரிக்காத எந்த ஒரு மதமும் இருக்க முடியாது; எந்த ஒரு சமூகமும் இருக்க முடியாது.

கோபம் தேவைதான். கோபத்திலும் நிதானம் மிகவும் அவசியம். நிதானத்துடன் வெளிப்படும் கோபம் எச்சரிக்கையாக அமையும், அல்லது கோப நடவடிக்கையாக இருக்கும். இப்  படிப்பட்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதனால் சமூக மேம்பாடும், சமூக சீர்திருத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

கோபம் மட்டும் வெளிப்படக்கூடிய எந்த ஒரு செயலாலும் பலன் ஏற்படப்போவதில்லை. இதனால், சமூக நல்லிணக்கம் சீர்கெடுகிறது; குடும்ப உறவு சீர்குலைகிறது; நட்பு வட்டாரத்தில் விரிசல் ஏற்படுகிறது. இறுதியில் அடிதடி, ஆள் கடத்தல், சொத்து சூறையாடல், கொலை செய்தல் போன்ற கொடூர செயல்களில் போய்முடிகிறது.

தேவையான நேரத்தில், தேவையான இடத்தில், தேவையான நபரிடத்தில் கோபப்படாமல் மவுனமாக இருப்பதும் ஒருவகையான குற்றமே!
அதற்காக, எதற்கெடுத்தாலும் கோபப்பட்டுக் கொண்டே இருப்பது சிறந்த செயல்பாடு அல்ல!

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கிவிடும். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 55 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கு இந்த ஆபத்து 6 மடங்கு அதிகமாக உள்ளதாக அச்சமூட்டுகிறார்கள்.

கோபத்தின் பாதிப்பு மூன்று வகையாகும். அது: 1) கோபம் அறிவை பாதிக்கக் கூடியது, 2) கோபம் உடலை பாதிக்கக் கூடியது, 3) கோபம் நடத்தையை பாதிக்கக் கூடியது.

அதிகம் கோபப்படக்கூடிய நபர்கள், இம்மூன்று வகையான பாதிப்புகளிலிருந்து தப்பிக்க முடியாது. இம்மூன்று வகையான பாதிப்புகளும் ஒருமனிதனை மனநலம் குன்றியவனாக மாற்றி விடுகிறது. இத்தகைய மனிதனால், சமூகத்துக்கு என்ன பயன் வந்துவிடப்போகிறது? அல்லது அவனுக்கே என்ன பயன் கிடைத்து விடப் போகிறது? தமக்கும், பிறருக்கும் பயன்தராதவரின் வாழ்வு ஒரு நடமாடும் பிணம் தான். அல்லது ஒரு நடமாடும் பைத்தியம் தான்.

'கோபம் என்பது ஒரு அரைப் பைத்தியம்' என்று ஒரு ஆங்கில பழமொழியும், 'கோபத்தின் ஆரம்பம் பைத்தியம், அதன் முடிவு வருத்தம்' என்று ஒரு அரபிப் பழமொழியும், 'கோபத்தோடும் எழுந்தவன் நஷ்டத்தோடு உட்காருவான்' என்று ஒரு தமிழ் பழமொழியும் கூறுகிறது. அது போல 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற தமிழ் பழமொழி அனைவரும் அறிந்ததே.

இத்தகைய பழமொழிகள் உணர்த்துவதெல்லாம், மிதமிஞ்சிய கோபம் மனிதனை பாழாக்கிவிடும் என்பதே!

கோபம் என்பது இருமுனைக் கத்தி போன்றது. கோபம் கொண்டவரையும் பாதிக்கும், மறுதரப்பினரையும் பாதிக்கும். இத்தகைய கோபத்தின் வெளிப்பாடு சில தன்மைகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

கோபம் வரும்போது சிலர் அழுவார்கள்; சிலர் முறைத்துப் பார்ப்பார்கள்; சிலர் மீசையை முறுக்குவார்கள்; சிலர் பல்லைக்கடிப்பார்கள்; சிலர் கையை பிசைவார்கள்; சிலர் கையை ஓங்கிக்குத்துவார்கள்; சிலர் காச் ... மூச் ... என கூச்சல் போடுவார்கள்; சிலர் கிடைத்ததையெல்லாம் உடைப்பார்கள்; சிலர் கண்டபடி வசைபாடுவார்கள். இதுபோல கோபத்தின் அறிகுறிகள் நீண்டுகொண்டே செல்கிறது.

மேற்கூறப்பட்ட வகையினரில் நாம் சேர்வதா? அல்லது அல்லாஹ் கூறும் வகையினரில் நாம் சேர்வதா? என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். கோபம் வரும்போது அதை வெளிப்படுத்துபவன் பலசாலியாக ஆகிவிட முடியாது. கோபம் வரும்போது அதை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்பவரே உண்மையான பலசாலி என நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

'இறையச்சமுடையோர் எத்தகையோர் என்றால் அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர, கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்; மனிதர் (கள் செய்யும் பிழை)களை மன்னித்து விடுவார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்' (திருக்குர்ஆன் 3:134)

கோபம் கொள்பவன் வீரன் அல்ல. உண்மையான வீரன் என்பவன் கோபம் வரும்போது தமது மனதை கட்டுப்படுத்துபவனே. வீரனுக்கு அழகு கோபத்தில் இல்லை, வேகத்தில் இல்லை. விவேகத்திலும், மென்மையிலும்தான் உள்ளது. கோபத்தை அடக்குபவனே தலைச்சிறந்த வீரன்.

Next Story