புராணத்துடன் இணைந்த கலைநயம்


புராணத்துடன் இணைந்த கலைநயம்
x
தினத்தந்தி 16 May 2017 10:21 AM GMT (Updated: 16 May 2017 10:21 AM GMT)

விஜய நகர மன்னர்களின் கலை பொக்கிஷமாக விளங்கும் லே-பட்சியில், சிவன், விஷ்ணு மற்றும் வீரபத்திர சுவாமி ஆகியோருக்கு பிரத்தியேக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

ந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ளது ‘லே பட்சி’ என்கிற சிறிய கிராமம். பெங்களூரிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் இருந்தாலும், இந்தப் பகுதியில் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஏனெனில் லே-பட்சி பகுதியில் அமைந்திருக்கும் கோவில்களில், எத்தனையோ அதிசயங்கள் பொதிந்து கிடக்கின்றன. அகஸ்திய முனிவரால் கட்டப்பட்டது என சொல்லப்படும் இங்குள்ள கோவில்களுக்கும், புராண கதைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறுகிறார்கள். குறிப்பாக ராமாயண இதிகாசத்திற்கும், லே-பட்சி பகுதிக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

ராமனும், சீதையும் வனவாசம் அனுபவித்து கொண்டிருந்தபோது, சீதையை தூக்கிச் சென்றான் ராவணன். ராமனையும், லட்சுமணனையும் திசைமாற்றி விட்டு, சீதையை பறக்கும் விமானத்தில் ஏற்றிக்கொண்டு இலங்கை நோக்கி புறப்பட்டான். அந்த சமயத்தில் ராமனுக்காக ஜடாயு என்ற பருந்து, ராவணனிடம் சண்டையிட்டது. அதில் ஜடாயுவிற்கு காயம் ஏற்பட, தரையில் விழுந்தது. அது இறக்கும் தருணத்தில் ராமனும், லட்சுமணனும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் ஜடாயு பறவை மோட்சத்தை வேண்டியது.

ராமனோ ‘எழுந்திரு பறவையே’ என்றார். இத்தகைய புராண நிகழ்ச்சி இந்த ஊரில் நடந்ததாலேயே, ‘லே பட்சி’ என்ற பெயர் வந்ததாக செவி வழிக் கதைகள் கூறுகின்றன. தெலுங்கு மொழியில் ‘லே பட்சி’ என்பதற்கு ‘எழுந்திரு பறவையே’ என்று பொருள்.

விஜய நகர மன்னர்களின் கலை பொக்கிஷமாக விளங்கும் லே-பட்சியில், சிவன், விஷ்ணு மற்றும் வீரபத்திர சுவாமி ஆகியோருக்கு பிரத்தியேக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் வீரபத்திர சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் சிற்ப வேலைபாடுகளுக்கும், சுவர் ஓவியங்களுக்கும் பஞ்ச மில்லை. திரும்பிய திசையெல்லாம், நுணுக்கமான சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன.

வீரபத்திர கோவில் கிரானைட் பாறையால் கட்டப்பட்டுள்ளது. சுவர்கள் முழுக்க அக்காலத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள், தூண்களில் புராணத்தை குறிக்கும் செதுக்கல்களும் நிறைந்துள்ளன. இக்கோவில் மூன்று பகுதிகளாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. பல தூண்களுடன் நாட்டிய மண்டபமும், கர்ப்பக்கிரகமும் அமைந்துள்ளது. நாட்டிய மண்டபத்தில் தேவலோக கன்னியர்களான ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோரின் நாட்டியம் இடம் பெற்றுள்ளது.

இன்னொரு முக்கிய ஈர்ப்பாக ஏழு தலை நாகத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கும் சிவலிங்கமும், இக் கோவிலின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிற்பி, தன் தாய் மதிய உணவை சமைத்து முடிப்பதற்குள் இந்த நாகத்தை செதுக்கி முடித்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பம் என்பது கூடுதல் சிறப்பு.

இதன் அருகில் அமைந்துள்ள கல்யாண மண்டபம், முடிந்தும்-முடியாமலுமாக பாதியிலேயே நிற்கிறது. ஜடாயு விழுந்து கிடந்த இடத்தையும், சீதாதேவியின் பாதம் பதிந்த இடத்தையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னெவென்றால், சீதாதேவியின் கால்பட்ட இடத்தில் எப்போது வற்றாமல் நீர் சுரக்கிறது. மேலும், சிவன்-பார்வதி திருக்கல்யாணம், ராமாயண காட்சிகள் ஆகியவற்றை குறிக்கும் வகையில் சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் 16-ம் நூற்றாண்டில் வரையப்பட்டவை.

ஆமை வடிவ மலையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் வீரபத்திர சுவாமி கோவிலில், பிரம்மாண்ட நந்தி சிலையும் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவிலுள்ள மிகப்பெரிய நந்திகளில் இதுவும் ஒன்று. தஞ்சை பெரியகோவில் நந்தியை போன்றே கோவிலின் முன்பு ஆஜானுபாகுவாக வீற்றிருக்கிறது இந்த நந்தி. 4 மீட்டர் உயரமும், 8 மீட்டர் நீளமும் கொண்ட இந்த நந்தி சிலை, கோவிலுக்கு வெளியே இருந்தாலும், அது சிவனைப் பார்ப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர பத்திரகாளி மற்றும் லட்சுமிக்கான சன்னிதி களும் மலையை சுற்றி அருகருகே அமைந்துள்ளன. ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், பாறையிலேயே செதுக்கப்பட்ட சங்கிலி கண்ணிகள் என கடவுள் வழிபாட்டுடன், கலைநயத்தையும் புகுத்தியுள்ளனர். ராமாயணம், மகாபாரத கதைகளை ஓவியங்களாக பார்க்க நினைப்பவர்கள், லே-பட்சி கோவிலுக்குத் தான் செல்ல வேண்டும். சிவபெருமானின் 14 வடிவங்களை இங்கு காணலாம்.

ஆன்மிக தலமா, ஆச்சரிய தலமா? என்னும் வகையில் கலைநயத்துடன் ஜொலிக்கிறது லே-பட்சி பகுதி.

Next Story