ஆன்மிகம்

13. உப்பும் – ஒளியும் + "||" + 13. Salt and light

13. உப்பும் – ஒளியும்

13. உப்பும் – ஒளியும்
இயேசு பிரான் மலை மீது ஏறி நின்று, ஒரு புதிய சட்டத்தை மக்களுக்கு அறிவிக்கிறார்.
நற்செய்தி சிந்தனை

-செம்பை சேவியர்

யேசு பிரான் மலை மீது ஏறி நின்று, ஒரு புதிய சட்டத்தை மக்களுக்கு அறிவிக்கிறார். அவர் போதிக்கத் தொடங்கிய காலத்தில், அவரது கருத்தை ஏற்றுக் கொள்வோர் மிகுதியாக இல்லை. ‘கல் மனம்’ கொண்டவர்களாகத் தான் இருந்தார்கள்.

‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்பதைப் போல, தன் கருத்தை, அழுத்தமாகவும், அச்சமின்றியும், ஆழமாகவும்  மக்களுக்கு எடுத்துரைத்தார். நாளடைவில் மக்கள் பெருந்திரளாகக் கூடினார்கள். மக்களைத் தன் போதனையால் திரட்டிய அப்பெருமகன், உயர்ந்த மலையைத் தன் போதனைக்கு இருப்பிடமாகக் கொண்டார். மக்கள் அவரைப் பார்ப்பதற்கும், அவர் மக்களைப் பார்ப்பதற்கும், மலை அவருக்கு வசதியாக இருந்தது. இதைத்தான் ‘மலைப்பொழிவு’ என்று நற்செய்தி கூறுகிறது.

வழக்கம்போல், அவர் மலையின் மீது அமர்ந்தார். சீடர்களை நோக்கி, அவர் முதலில் கூறுகிறார். சீடர்கள் வழிகாட்டியாக இருந்தால்தான், மக்களுக்கு நற்செய்தியைப் போதிக்க முடியும். ஆகவே அவர் சீடர்களை நோக்கி, ‘‘நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாக இருக்கிறீர்கள். உப்பு, உவர்ப்பற்றுப் போனால், எதைக் கொண்டு அதை உவர்ப்பு உள்ளதாக ஆக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு, மனிதரால் மிதிபடும். வேறு எதற்கும் உதவாது. நீங்கள், உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள். மலை மேல் உள்ள நகர் மறைவாக இருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை. மாறாக, விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான், அது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி, மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள், உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்’’.

‘உப்பு’ எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தத்தான், ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்ற வாசகத்தைப் பயன் படுத்துகிறோம். உப்பு, எல்லாப் பொருளையும் பாதுகாக்கக் கூடியது. அந்த உப்பானது, சாரம் இல்லாமல் போய் விட்டால், வேறு எதைக் கொண்டு அதைச் சரிசெய்ய முடியும்?

ஆகவே, அவர் சீடர்களைப் பார்த்து, நீங்கள் உப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் போதிக்கிறார். உப்பு, சாரமற்றுப் போனால் அது, வெளியில் கொட்டப்பட்டு, எப்படி மனிதர் களால் மிதிபடுகிறதோ, அந்த நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டு விடுவீர்கள். ஆகவே உப்பாக இருங்கள்; உவர்ப்பாக இருங்கள் என்கிறார்.

இது மட்டுமா?, நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள் என்கிறார். மலை மேல் இருக்கும் நகர், மறைவாக இருக்க முடியாது என்கிறார். மலை மேல் இருக்கும் நகரை அனைவரும் பார்க்க முடியும். அதைப் போல, ஒளி கொடுக்கும் உங்களை அனைவரும் காண்பார்கள். விளக்கை ஏற்றுபவர்கள் விளக்கை ஏற்றி, மரக்காலுக்கு அடியில் வைக்க மாட்டார்கள். விளக்குத் தண்டின் மீதுதான் வைப்பார்கள். அப்படி வைத்தால்தான் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி கிடைக்கும். ஆகவே உங்கள் ஒளியானது, மனிதர்களின் முன் ஒளிர வேண்டும். உங்களின் நல்ல செயல்களைப் பார்த்து விண்ணகத்தில் உள்ள தந்தையும் மகிழ்ச்சி அடைவார் என்கிறார். இயேசு பிரானின் போதனை, இவ்வுலகத்தை மட்டும் சார்ந்தது அல்ல. மறு உலகத்தையும் சார்ந்தது. ஆகவே முதலில் சீடர்களை நெறிப்படுத்துகிறார். எளிமையாக நாம் பயன்படுத்தும் ‘உப்பு’, ‘விளக்கு’ போன்றவற்றைக் காட்டி அதன் பயன்பாட்டை விளக்கி, நமக்குப் போதிக்கிறார்.

என்னே அருமையான உவமை என்று கூறிவிட்டு, நாமும் வீணே காலம் கழிக்காமல், இப்போதனையைக் கேட்கும் ஒவ்வொருவரும், உப்பாகவும், விளக்காகவும் இருக்க வேண்டும். விண்ணகத் தந்தை மகிழ்ச்சி அடைவார் என்று, இறுதியாகத்தான் கூறுகிறார். இவ்வுலகில் பிறந்த மனித சமூகத்தை நெறிப்படுத்த வேண்டுமானால், சீடர்கள் மட்டுமல்ல, ஒவ்வொருவரும், உப்பாகவும், விளக்காகவும் செயல்பட வேண்டும். இவ்விதம் செயல்பட்டால், உண்மையான அமைதியையும், மகிழ்ச்சியையும் இவ்வுலகில் கொண்டு வர முடியும். அன்பு, அமைதி, சமாதானம் இம்மூன்றும்தான், மனித சமுதாயத்தை வாழ வைக்கும் கேடயம் என்றால் மிகையாகாது.

மீண்டும் ஒருமுறை இந்நற்செய்தியை, நினைவிற்குக் கொண்டு வருவோம். பெருந்திரளாக மக்கள் கூடியிருந்தாலும், முதன் முதலில் சீடர்களுக்குத்தான் இவ்விதம் கூறுகிறார்.

காரணம் என்ன? என்பதை எண்ணிப் பாருங்கள். போதிக் கிறவர்கள் முதலில் சரியானவர்களாக இருக்க வேண்டும் என்பதே, இயேசு பிரானின் கோட்பாடு. தன்னைப் பின்பற்றும் சீடர்கள், பிறருக்கு முன்மாதிரியாக வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.  அதனால்தான் முதலில் சீடர்களுக்குப் போதிக்கிறார்.

முதலில் ‘உப்பு’ என்ற பொருளைப் பற்றி பேசுகிறார். மிகவும் அருமையான சிந்தையாக இருப்பதை எண்ணிப்பார்ப்போம். உப்பின் தன்மை உவர்ப்பு ஆகும். உவர்ப்புத் தன்மைதான் அனைத்தையும் கெட்டுப்போகாமல் பாதுகாக்கின்றது. ஏனைய பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கு, உப்பானது உதவுகிறது. அந்த உப்பே சாரமற்றுப் போனால் அந்த உப்பை எப்படி, சாரமுள்ளதாக மாற்ற முடியும்? என்ற கேள்வியைக் கேட்கிறார்.

ஆகவே நீங்கள்தான் ‘உப்பு’. உப்பைப் போல் பயன் தரவேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் வெளியே தூக்கி எறியப்படுவீர்கள் என்ற கருத்தை வலியுறுத்தவே முதன் முதலில் உப்பைப் பற்றி பேசுகிறார்.

அடுத்ததாக, ‘ஒளி’யைப்பற்றிப் பேசுகிறார். நீங்கள், உலகிற்கு ‘ஒளி’ என்கிறார். அதற்கு மலையை எடுத்துக் காட்டி விளக்குகிறார். ஒரு ‘நகர்’ மலை மேல் இருக்குமானால், மறைவாக இருக்க முடியாது. எல்லோருக்கும் தெரிய வரும் அல்லவா? அதைப்போல, உங்களை அனைவரும் பார்க்க வேண்டுமானால், நீங்கள் ஒளி தர வேண்டும்.

இப்படிப்பட்ட நல்ல செயல்களை நீங்கள் செய்ய வேண்டும். அப்படி செய்தால் வானகத்தில் உள்ள என் தந்தை மகிழ்வுறுவார் என்கிறார்.

பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்வதற்கு நாம் முயலுவோமேயானால், இவ்வுலகத்தில் உள்ளோரை நல்வழிப்படுத்த முடியும் என்பதை உணர்வோம். முதலில் நாம் நடந்து காட்டுவோம். பிறரையும் நல்வழிபடுத்த முயலுவோம்.

(தொடரும்)