ஈசனின் உக்கிரத்தை போக்கிய சிவதலம்


ஈசனின் உக்கிரத்தை போக்கிய சிவதலம்
x
தினத்தந்தி 23 May 2017 12:30 PM IST (Updated: 23 May 2017 12:30 PM IST)
t-max-icont-min-icon

திருநெல்வேலியில் குறுக் குத்துறை அருகே கருப்பூந்துறை என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது அழியாபதி ஈசன் சமேத சிவகாமி அம்பாள் ஆலயம்.

திருநெல்வேலியில் குறுக் குத்துறை அருகே கருப்பூந்துறை என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது அழியாபதி ஈசன் சமேத சிவகாமி அம்பாள் ஆலயம். கோரக்க மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த ஆலய இறைவனுக்கு, சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு வீரபாண்டிய மன்னனால் ஆலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

கற்கோட்டையாக விமானத்துடன் கூடிய கருவறையும், அர்த்த மண்டபம், மகா மண்ட பம், வசந்த மண்டபம், மணி மண்டபம், உள்பிரகார சுற்று, வெளிப்பிரகார சுற்று என பெரிய ஆலயமாக திகழ்கிறது. ஆலயத்தின் முகப்பில் ‘காருண்ய தீர்த்தகுளம்’ இருந்ததாகவும், அதில் இருந்துதான் இறைவனின் அபிஷேகத்திற்கு தீர்த்தம் எடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். காலப்போக்கில் வெளிப் பிரகாரங்களும், காருண்ய குளமும் அழிந்து விட்டாலும், கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகியவை மட்டும் எஞ்சியபடி இருக்கின்றன.

இந்த ஆலயத்தை சுற்றிலும் எங்கு பார்த்தாலும் வில்வ மரங்களும், வயல்வெளிகளும் சூழப்பட்டு பசுமையாக காட்சி அளிக்கிறது. பிரம்ம மரமான அத்தி மரமே ஆலயத்தின் தல விருட்சமாக அமைந்துள்ளது. வீரபாண்டிய மன்னனுக்கு பின்னர் இந்த ஆலயம் சுமார் 80 வருடங்களுக்கு முன்பு அமாவாசை சித்தர் என்பவரால் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனால் அவரது சமாதியும் ஆலயத்தின் அருகிலேயே அமைந்துள்ளது.

இத்தல இறைவனான அழியாபதி ஈசன், கோபுர விமானத்துடன் கூடிய கருவறையில் அமர்ந்துள்ளார். மகா மண்டபத்தில் சிவகாம சுந்தரி அம்பாள் தனி கோபுர விமானத்துடன் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அழகுக்கு அழகு சேர்ப்பது போல் இருப்பதால், ‘சவுந்தரி’ என்ற பெயரும் அம்பிகைக்கு உண்டு.  தென்மேற்கு திசை நோக்கி ஈசனை தரிசித்த வண்ணம் கொடியிடை வளைத்து நின்ற கோலத்தில் அன்னை தரிசனம் தருகிறாள். அன்னையின் கடைக்கண் பார்வை ஈசனுக்காக ஏங்குகிறதா அல்லது ஈசனது பார்வை சிவகாமியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்குகிறதா என்பது போன்ற அற்புதமான காட்சியை இங்குதான் காண இயலும்.

ஈசனின் கருவறையின் முகப்பில் இருபுறமும் விநாயக பெருமானும், முருகப்பெருமானும் அருள்பாலிக் கின்றனர். மணி மண்டபத்தின் முகப்பில் துவார பாலகர்களும், வெளிப்பிரகாரத்தில் சுவாமிக்கு வலப்பக்கத்தில் தென்திசையில் தட்சிணாமூர்த்தியும், பின்புறத்தில் கன்னிமூல விநாயகர், வள்ளி– தெய்வானை சமேத சுப்பிரமணியர், பூதநாத சாஸ்தா, பகவதி அம்பாள் அனைவரும் விமானத்துடன் கூடிய தனித்தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றனர். நாக தெய்வங்களுக்கு தனிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு இடப்புறமாக சண்டிகேஸ்வரரும், பைரவரும் தனித்தனி விமானத்துடன் கூடிய சன்னிதியில் இருந்து அருள்புரிகின்றனர்.

தட்சன், தான் நடத்திய யாகத்தின்போது ஈசனை அழைக்காமலும், அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகம் கொடுக்காமலும் அவமதித்தான். இதனால் கோபம் கொண்டு வெகுண்டெழுந்த ஈசன், பைரவராக மாறி தட்சனின் தலையை கொய்து விட்டு  தாமிரபரணி கரையோரம் உள்ள மேலநத்தம் என்ற இடத்தில் உக்கிரமாக தவம் மேற்கொண்டார். அவருடைய உக்கிரமான தவத்தின் காரணமாக நத்தம் பகுதிக்கு அருகே உள்ள கருப்பூந்துறை, கரிக்காதோப்பு, கருங்காடு, கரிசூழ்ந்தமங்கலம் வரையான வயல்பகுதிகள் யாவும் தீக்கிரையாகியது. (குறுக்குத்துறை அருகே உள்ள வயல்கள் யாவும் கருகியதால் கரிக்காதோப்பு, கருங்காடு, கருப்பூந்துறை என்று இன்றும் அழைக்கப்படுகிறது).

அக்னியின் நாக்குகள் தன்னுடைய உக்கிரத்தை அதிகப்படுத்தி கருங்காடு வரை சென்றது. இன்னும் அதிக உக்கிரம் அடைந்தால் திருநெல்வேலி வயல் பகுதிகள் யாவும் அழிந்து விடும் என்பதால், கருங்காடு பகுதியில் தீயின் சீற்றம் அதிகம் பரவாமல் இருப்பதற்காக பரவா எல்லைநாதர் தோன்றி ஈசனின் உக்கிரத்தை கட்டுப்படுத்தினார். (இன்றும் கருங்காட்டில் பரவா எல்லைநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சுமார் 1000 வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்டுள்ளது என்று வரலாறு தெரிவிக்கிறது.

ஈசனின் உக்கிரமான தவத்தின் காரணமாக வயல் பகுதிகள் யாவும் தீக்கிரையாகி பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த கோரக்க மகரிஷி, ஈசனை வழிபட முயன்றார். ஈசன் அக்னீஸ்வரராக இருப்பதை கண்டு தனது ஞான திருஷ்டியின் மூலம் அவருடைய உக்கிரத்தின் காரணத்தை அறிந்தார். உடனடியாக அக்னீஸ்வரரை சாந்தப்படுத்துவதற்காக நேர் எதிரில் கிழக்கு முகமாக ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். சித்தர்கள் அனைவரும் பவுர்ணமி அன்று ஒன்று சேர்ந்து அழியாபதி ஈசனாருக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடத்தி அக்னீஸ்வரரை சாந்தமாக்கினர்.

தட்சனை அழித்து உக்கிரவடிவில் காட்சியளித்த சிவனே, மேலநத்தம் பகுதியில் மேற்கு முகமாக அமர்ந்து அக்னீஸ்வரராகவும், நெல்லையம்பலத்தை அழியாமல் காத்து பக்தர்களுக்காக அவதாரம் எடுத்த சாந்த மூர்த்தியே, நேர் எதிரே கிழக்கு முகமாக அமர்ந்து முக்தி அளிக்கும் அழியாபதி ஈசனாகவும் அருள்பாலிக்கின்றனர்.

இவ்வாலயத்தில் முக்கிய திருவிழாக்களாக சித்திரை முதல்நாள், ஆடிப்பூரம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி திருக்கல்யாணம், திருக் கார்த்திகை, தை மாதப்பிறப்பு, மாசி மகா சிவராத்திரி ஆகிய திருவிழாக்கள் நடைபெறுகிறது. இது தவிர தமிழ் மாதப்பிறப்பு, பிரதோ‌ஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடக்கிறது. தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.

திருநெல்வேலி ஜங்‌ஷனில் இருந்து மீனாட்சிபுரம், சி.என்.கிராமம் வழியாகவும், திருநெல்வேலி டவுனில் இருந்து குறுக்குத்துறை, நத்தம் ரோடு வழியாகவும் இந்தக் கோவிலுக்கு செல்லலாம்.   ஆட்டோ, ஷேர் ஆட்டோ வசதியும் உண்டு.

–நெல்லை வேலவன்.

சூரியன்  வழிபடும்  தலம்

மகா சிவராத்திரி அன்று சூரிய பகவான், அதிகாலையில் தனது கதிர்களால் ஈசனது கருவறையில் ஒளிவீசுவார். இந்த ஆலயம் தீபம் ஏற்றுவதற்கு என்றே உள்ள பிரதானமான ஆலயம். இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் அகல் தீபம் ஏற்றிய பின்னர்தான் ஈசனையே வழிபடுகிறார்கள். கோரக்க மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகச்சிறப்பான லிங்கம் இவ்வாலயத்தில் உள்ளது. ஆலயத்திற்கு நுழையும் வழியில் அத்தி மரமும், வில்வ மரமும் ஒன்றுக்குள் ஒன்று பொதிந்து ஒரே மரமாக இருப்பதும் அதிசயமாகும். இந்த ஆலயத்தில் 7 வியாழக்கிழமைகள் தொடர்ந்து பூஜை செய்து சித்தர்களின் அருளை பெறலாம்.

Next Story