நாக தோஷம் போக்கும் கருடன்


நாக தோஷம் போக்கும் கருடன்
x
தினத்தந்தி 30 May 2017 12:32 PM IST (Updated: 30 May 2017 12:32 PM IST)
t-max-icont-min-icon

மகா விஷ்ணுவின் வாகனங்களில் பெரிய திருவடி என்று அழைக்கப்படுபவர் கருடன். விஷ்ணு தலங்கள் மூலவருக்கு எதிரில் தனிச் சன்னிதியில் வீற்றிருப்பார்.

கா விஷ்ணுவின் வாகனங்களில் பெரிய திருவடி என்று அழைக்கப்படுபவர் கருடன். விஷ்ணு தலங்கள் மூலவருக்கு எதிரில் தனிச் சன்னிதியில் வீற்றிருப்பார். பெருமாள் கருடனை வாகனமாக ஏற்ற போது, ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் இருப்பாய்’ என்று வரமளித்தார். பெருமாள் கோவில்களில் நடைபெறும் பிரமோற்சவத்தின் போதும், கருட சேவையின் போதும் பெருமாள் கருடன் மீது அமர்ந்துதான் திருவீதி உலா வருவார்.

கருடாழ்வார் மீது அமர்ந்தபடி பெருமாள் வீதி உலா வருவதில் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. ‘கோவிலுக்கு வர இயலாத பக்தர்களுக்கு, அவர்கள் இல்லம் நாடி அருள்புரிய இறைவன் வருகிறான்’ என்பது தான் அந்த தத்துவம்.

கருட தரிசனம், சுப தரிசனமாகும். கருடன் மங்கள வடிவானவன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோவில் களில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும் போது கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.

கருடாழ்வார் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார்.

பெருமாள் கோவில்களில் மூலவருக்கு முன்பாக நேராக எழுந்தருளி இருக்கும் இவரையே பக்தர்கள் முதலில் வணங்க வேண்டும். பக்தர்களுக்கு சிறிய துன்பம் ஏற்பட்டாலும் துயர் துடைத்து இன்பம் அருளி உரிய நேரத்தில் காப்பவர் இவர்.

கருட தரிசனம் பகை பிணி போக்கும். நிறை செல்வத்தை நல்கும்.

விரதம் இருப்பது எப்படி?

கருடன் பஞ்சமியில் பிறந்ததாலும், ஆவணி மாதம் வளர்பிறையில் பஞ்சமி அன்று அமிர்தத்தைக் கொண்டு வந்ததாலும் இது கருட பஞ்சமி என்றானது.

சுமங்கலி பெண்கள் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து விட்டு தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்கள் கொண்ட கோலங்கள் போட வேண்டும்.

நடுவில் ஒரு பலகை போட்டு அதன் மேல் வாழை இலையை விரித்து பச்சரிசியை கொட்டி அதன் மேல் நமது சக்திக்கு ஏற்றப்படி வெள்ளி, தாமிரம் அல்லது மண் இவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்பின் உருவம் செய்து அரிசியின் மேல் வைக்க வேண்டும். பாம்பின் படத்தில் நடுவில் மஞ்சளால் செய்யப்பட்ட கவுரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பத்து முடியுள்ள நோன்பு கயிற்றை கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு, பெண்கள் 10 ஆண்டுகள் தொடர்ந்து விரதம் இருந்து வந்தால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர். கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறி, சகல விதமான செல்வங்களையும் அடைவர். இந்த பூஜை செய்வதால் நாக தோஷம் நீங்கும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.

தாயை மீட்ட தனயன்

காசிப முனிவரின் மனைவிகள் கத்ரு, வினதை. இவர்களில் கத்ரு நாகர்களுக்கு தாயாக விளங்கினாள். வினதை அருணனையும், கருடனையும் பெற்றாள். ஒரு முறை கத்ரு, வினதையை அடிமைப்படுத்தும் எண்ணத்துடன் வம்புக்கு இழுத்தாள். ‘இந்திரனின் குதிரை (உச்சைஸ்வரஸ்) என்ன நிறம்?’ என கேட்டாள்.

அதற்கு வினதை ‘வெள்ளை நிறம்’ என்று பதிலளித்தாள்.

கத்ருவோ, ‘இல்லை கருப்பு நிறம்’ என்றாள். விவாதம் வளர்ந்து போட்டியாக மாறியது.

இந்தப் போட்டியில் ‘ஜெயித்தவர் தோற்றவருக்கு அடிமையாக வேண்டும்’ என்று இருவரும் நிபந்தனை வகுத்துக் கொண்டனர்.

கத்ரு, குதிரையின் வெண் நிறத்தை கறுப்பு நிறமாக மாற்ற தன் மகனாகிய கார்க்கோடகன் என்ற கருநிற பாம்பை குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுமாறு பணித்தாள். அதன்படியே கார்க்கோடகன் செய்ய பாம்பு சுற்றிய வால் கருப்பு என்று காட்டி வினதையை அடிமைக் கொண்டாள். வினதை அடிமையானதால் அவளது மகன்கள் அருணனும், கருடனும் அடிமையாயினர். தாயின் அடிமையை நீக்கச் சென்ற கருடனிடம் தேவலோகத்தில் உள்ள அமிர்தத்தை கொண்டு வந்தால் உன் தாயான வினதைக்கு விடுதலை கிடைக்கும் என்றாள்.

கருடனும், சரி என்று கூறி விரைவாக தேவலோகத்தை அடைந்தார். அவரை தேவேந்திரனும், தேவர்களும் வஜ்ராயுதம் மற்றும் பல்வேறு ஆயுதங்களால் தடுத்தனர். இந்திரனின் வஜ்ராயுதத்துக்கு மரியாதை அளிக்க விரும்பிய கருடன் தன் சிறகுகளில் ஒன்றை அதற்கு அர்ப்பணம் செய்தார்.

இதைப்பார்த்து இந்திரன் மகிழ்ச்சி அடைந்தார். அவரிடம் கருடன், தன் தாயாரின் அடிமைத்தனத்தை போக்கவே அமிர்தம் கொண்டு போக வந்தேன். நான் இதை கொண்டு போய் கத்ருவிடம் கொடுத்த பிறகு நீங்கள் மறுபடியும் இதைக் கொண்டு வந்து விடலாம் என்று கூறினார். அதற்கு இந்திரனும் அனுமதி அளித்தார்.

கருடன் அமிர்தம் இருக்கும் இடம் சென்று அதை கொண்டு வந்து கத்ருவிடம் கொடுத்து தன் தாயை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார். கத்ரு மகிழ்ந்து கருடனை ‘ஸீபர்ணன்’ என்று போற்றினாள். கருடன் வேதமே வடிவானவர். ராமாயணத்தில் இந்திர சித்தன் எய்திய நாக பாசத்தால் ராமரும் லட்சுமணரும் திகைத்து நிற்கையில், கருடனின் காற்றுப்பட்டு ராம, லட்சு மணர்களை கட்டியிருந்த நாகாஸ்திரம் விலகியது. கருடனின் சகோதரரான அருணன், சூரியன் ரத சாரதியாக விளங்குகிறார்.

கருட மந்திரம்

ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம். அந்த கருட மந்திரம்...

தத்புருஷாய வித்மஹே

ஸீபர்ண பக்ஷாய தீமஹீ

தன்னோ கருட ப்ரசோதயாத்.


கருட தரிசன பலன்

அதிகாலை சூரிய உதயத்தின்போது கருடனை தரிசித்தால், நினைத்த காரியம் நடைபெறும். வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது அமோக பலனை தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம். கிழமைகளில் கருட தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:-

ஞாயிறு: பிணி விலகும்.

திங்கள்: குடும்ப நலம் பெருகும்.

செவ்வாய்: துணிவு பிறக்கும்.

புதன்: பகைவர் தொல்லை நீங்கும்.

வியாழன்: நீண்ட ஆயுள் கிடைக்கும்.

வெள்ளி: திருமகள் திருவருள் கிட்டும்.

சனி: முக்தி அடையலாம்.


தேவலோகத்தில் இருந்து கருடன் எடுத்து வந்த அமுத கும்பத்தில் ஒட்டிய தேவப்புல்லே பூவுலகில் விழுந்து தர்ப்பை ஆனதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

திருப்பதி கருட சேவை

வேதங்களின் கடவுளாக விஷ்ணு விளங்குகிறார். கருடன் பறவைகளின் அரசனாகவும், வேதங்களின் பிரதிநிதியாகவும், மகாவிஷ்ணுவின் முதல் பக்தனாகவும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. திருப்பதியில் வெங்கடாஜலபதி தன்னுடைய வாகனமாக கருடனை தேர்ந்தெடுத்ததால் பிரமோற்சவத்தின் போது மற்ற வாகனங்களை விட கருட வாகனத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கருட சேவையின் போது தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லி புத்தூரில் ஆண்டாள் சன்னிதியில் இருந்து வரும் துளசி மாலை மூலவருக்கு அணிவிக்கப்படும். இந்த மாலையுடன் மூல விக்ரக மூர்த்தி அணிந்திருக்கும் தங்க சங்கிலி, மகர கண்டி போன்ற நகைகளை கருட சேவையின் போது மட்டும் உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமிக்கு அணிவித்து அலங்கரிப்பார்கள்.

இதனால் கருட சேவையின் போது ஏழு மலையானையும், கருடனையும் சேர்த்து வணங்குவதால் நினைத்தது நடக்கும்.

Next Story