13 அகோரிகளை அறிவோம்


13 அகோரிகளை அறிவோம்
x
தினத்தந்தி 30 May 2017 8:57 AM GMT (Updated: 30 May 2017 8:57 AM GMT)

அகோரிகள் என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது, உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு நிர்வாணமாக அலையும் அமானுஷ்ய சாமியார்கள் தான்.

கோரிகள் என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது, உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு நிர்வாணமாக அலையும் அமானுஷ்ய சாமியார்கள் தான். சுடுகாடுகளில் வசிப்பவர்கள், அங்கு நள்ளிரவில் பூஜை செய்பவர்கள் எனவும் கூடுதலாகச் சிலர் அறிந்திருப்பார்கள். அகோரிகள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் வாழ்பவர்கள் என்பதால், அவர்களை நேரில் பார்க்கும் சந்தர்ப்பங்கள் நமக்குக் குறைவு தான். அப்படிப் பார்க்க நேர்ந்தாலும் ஓரிருவரைத் தான் பார்க்க முடியும். கும்ப மேளா சமயத்தில் மட்டும் கூட்டமாக புனித நீராடலுக்கும் வருவார்கள். ஹரித்வார், அலகாபாத், உஜ்ஜயினி மற்றும் நாசிக் நகரங்களில், பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளாவுக்குச் செல்பவர்கள் அகோரிகளைக் கூட்டமாகப் பார்க்கலாம். அப்படிப்பட்ட அகோரிகள் தேர்ந் தெடுத்திருக்கும் ஆன்மிக முறையும், அவர்களைப் பற்றிய முழுமையான தகவல்களும் மிக மிக சுவாரசியமானவை. அவற்றை விளக்கமாகப் பார்ப்போம்.

சிவபுராணத்தில் சிவமகிமா ஸ்தோத்திரத்தில் ஒரு சமஸ் கிருத சுலோகம் இருக்கிறது.

‘அகோரன்ன பரோ மந்த்ரோ
நசித்வம் குரோ பரம்’

(பொருள்: எல்லா மந்திரங்களையும் விட உயர்ந்த மந்திரம், அகோர் என்ற மந்திரமே. குருவின் உண்மையான இயல்பை விட, அறிய வேண்டியது வேறொன்றும் இல்லை.)

அகோரா என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு. ஆழத்திலும் ஆழமான, ஞானமடைந்த, இருளற்ற என்ற பொருட்கள் கொண்டது. முதலாம் அகோரியாக சிவனையே சொல்வார்கள். அதனால் அகோரா என்ற சொல் சிவனுடைய பெயராகவும் இருக்கிறது. அகோரிகளின் ஆன்மிகம் இருளில் இருந்து ஒருவரை ஒளிக்கு அழைத்துச் செல்வதாகவும், அறியாமையில் இருந்து ஞானத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் கருதப்படுகிறது.

மற்ற எல்லா ஆன்மிக மார்க்கங்களிலும் இல்லாத கோரக் காட்சிகளும், அருவருப்பூட்டும் நடைமுறைகளும் அகோரிகளிடத்தில் உள்ளன. அவர்களது சுடுகாட்டு வழிபாட்டு முறைகள் கோரமானவை. பிணங்களும் அவர்கள் வழிபாட்டு முறைகளில் பயன்படுத்தப்படும். அவர்களுக்கும் சுத்தத்திற்கும் சம்பந்தமே இருக்காது. மனிதக்கழிவுகள், அழுகிய பிணங் களுக்கு மத்தியில் வசிப்பார்கள். கபால மண்டை ஓட்டைக் கையில் வைத்திருப்பார்கள். மண்டை ஓடுகளைக் கழுத்தில் மாலையாகத் தொங்க விட்டுக் கொள்வதும் உண்டு. அவர்கள் தலைமுடியை வெட்டுவதோ, கழுவுவதோ கிடையாது. மாமிசத்தைப் பச்சையாகவே உண்பதும், மது அருந்துவதும், கஞ்சா போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதும் கூட அவர்கள் ஆன்மிகத்திற்கு எதிரானதல்ல. பேச்சிலும் பெரும்பாலும் இனிமை இருக்காது. தங்களை நெருங்குபவர்களை கடுமையான வார்த்தைகளையே பயன்படுத்தி விரட்டியடிப்பார்கள். இதெல்லாம் வேறு எந்த ஆன்மிக மார்க்கத்திலும் ஏற்றுக் கொள்ளப்படாதவை.

இப்படி ஆன்மிகத்திற்கு முரண் போலத் தோன்றும் பல பழக்க வழக்கங்கள் இந்த அகோரிகளிடம் இருப்பது உலகெங்கும் அவர்கள் பால் பேராவலை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையான அகோரிகளிடம் அமானுஷ்ய சக்திகளும் நிறைய இருப்பதாகச் சொல்லப்படுவதால் அவர்களை அறியவும், ஆராயவும், மேலைநாட்டு அறிஞர்கள் உட்பட பலரும் ஆர்வத்துடன் முயன்று வருகிறார்கள்.

அகோரிகளைப் பொருத்த வரை உலகமே இறை மயம் தான். எல்லாவற்றிலும் இறைவனையே அவர்கள் பார்க்கிறார்கள். இறைவன் இல்லாத இடமில்லை என்று நம்புகிறார்கள். எங்கும் எதிலும் இறைவன் இருக்கிறான் என்றால் சுத்தத்தில் மட்டுமல்லாமல் அசுத்தத்தில் கூட இறைவன் இருக்கிறான் என்றல்லவா அர்த்தம். அதனால் எங்கும், எதிலும் அருவருப்படையாமல் இறைவனையே காணும் பக்குவம் படைத்தவர்களாக இருப்பவர்கள் அகோரிகள். இதே பக்குவம் நன்மை, தீமை, விருப்பு, வெறுப்பு, அழகு, அருவருப்பு போன்ற நேரெதிர் நிலைகளிலும் அவர்களிடம் இருக் கிறது.

சாதாரண மனிதன் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான். ஆனால் அகோரிகள் மரணத்தை எக்கணமும் மறப்பதில்லை. சுடுகாட்டுச் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொள்வதில், மண்டையோட்டை கையில் வைத்துக் கொள்வதில், சுடுகாட்டில் வாழ்வதில் மரணத்தை எக்காலமும் நினைவு படுத்துகிற சூழலிலேயே இருக்கிறார்கள். அவர்கள் மரணத்தையே குருவாக எடுத்துக் கொள்கிறார்கள். மயானமே அவர்களது ஆன்மிக குருகுலமாக இருக்கிறது. அங்கேயே அவர்கள் அனைத்தும் கற்கிறார்கள். சில பயிற்சிகள் மூலமும், முயற்சிகள் மூலமும், அசாதாரண சக்திகளை அவர்கள் பெறுகிறார்கள்.

அகோரிகள் சிவனின் அவதாரமான தத்தாத்ரேயரைத் தங்கள் கடவுளாகவும், ஜகத்குருவாகவும், கருதுகிறார்கள். காசியே அவர்களது பிறப்பிடமாகவும், புனிதத் தலமாகவும் கருதப்படுகிறது. அகோரிகளின் ஆரம்ப காலம் குறித்த தெளிவான ஆதாரங்கள் இல்லை. பல காலங்களில் பல பெயர்களில் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். உதாரணத்திற்கு கி.பி.ஏழாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த கபாலிகர்கள் பற்றிய வர்ணனைகள் கிட்டத்தட்ட அகோரிகளை ஒத்தே இருக்கின்றன. கபாலிகர்களும் சிவனை வழிபட்டார்கள். அவர்களும் மண்டை ஓட்டைக் கையில் வைத்திருந்தார்கள். கபால ஓட்டைக் கையில் வைத்திருந்ததால் கபாலிகர்கள் என்றழைக்கப்பட்டார்கள். அவர்களது வழி பாடுகள் அகோரிகளைப் போலவே ரகசியமானதாக இருந்தன. அவர்களும் பல சக்திகளைப் பெற்றிருந்ததாகப் பேசப்பட்டார்கள்.

தற்போது நாம் அறியும் அகோரிகளில் முதலாவதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டவரும், அகோரிகளின் ஆன்மிக முறையில் திட்டவட்டமான மாற்றங்களை ஏற்படுத்தி ஒழுங்கு படுத்தியவருமானவர் பாபா கினாராம். இவர் கி.பி 1601-ம் ஆண்டு வாரணாசிக்கு அருகே உள்ள ராம்கர் என்ற கிராமத்தில் பிறந்தவர். பல காலம் பிள்ளையில்லாமல் வருந்தி வாழ்ந்த அக்பர் சிங் மற்றும் மானசதேவி தம்பதியருக்கு பாபா கினாராம் குழந்தையாய் பிறந்த போது கிராமத்து மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனராம். ஆனால் பிறந்த குழந்தை அழவில்லை. குழந்தை அழும் போது தாய் மகிழும் ஒரே தருணம் குழந்தையின் முதல் அழுகையின் தருணம் தான் என்பார்கள். பின் எப்போதும் தன் குழந்தையின் அழுகையைப் பார்க்கவோ, கேட்கவோ சகிக்காத தாய் அதன் முதல் அழுகை சத்தத்தில் மனம் மகிழ்வாள் என்பார்கள். ஆனால் குழந்தை உயிரோடு இருந்து, ஆரோக்கியமாகவும் இருந்து அழவில்லை என்பது மட்டுமல்லாமல் தாய்ப்பாலும் குடிக்காமல் இருந்தது பெற் றோருக்கும், மற்றவர்களுக்கும் கவலையையும் தந்தது.

பாபா கினாராம் பிறந்து மூன்று நாட்கள் கழித்து மூன்று துறவிகள் அக்பர்சிங், மானசதேவி வீட்டுக்கு வந்து குழந்தையின் காதுகளில் ஏதோ முணுமுணுத்திருக்கிறார்கள். பின் தான் குழந்தை அழ ஆரம்பித்திருக்கிறது. தாய்ப்பால் குடிக்கவும் ஆரம்பித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பின் பாபா கினாராம் தெய்வாம்சம் பொருந்திய குழந்தை என்றும், வந்து சென்ற துறவியர் சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளே என்றும் அனைவரும் நம்ப ஆரம்பித்தார்கள்.

பாபா கினாராம் வளர வளர ஞான மார்க்கத்தில் நாட்டம் உள்ளவராக இருந்தார். ஆனால் இளமைக் காலத்தில் மெய்ஞான உண்மைகளை வெளிப்படுத்தியதை விட அதிகமாய் சமூக அக்கறையை அவர் வெளிப்படுத்தினார். பிற்படுத்தப்பட்ட மக்கள், ஏழை எளிய மக்கள், பெண்கள் முதலியோரின் நலனிலும், அவர்கள் முன்னேற்றத்திலும் அதிக அக்கறை காட்டினார்.

சென்ற இடமெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற சேவை செய்தார் என்று சொன்னாலும் அவர் அற்புத சக்திகளை அப்போது வெளிக்காட்டியதாகத் தெரியவில்லை. அவரிடம் அற்புத சக்தி உள்ளது என்பதை முதலில் அறிந்தவர் கங்கைக் கரையில் வாழ்ந்து வந்த பாபா சிவதாஸ் என்ற சாது. (அந்த சாதுவை சிவராம் என்றும் சிலர் அழைக்கிறார்கள்) யாத்திரை சென்று கொண்டிருந்த வழியில் பாபா சிவதாஸின் ஆசிரமத்தில் பாபா கினாராம் சில நாட்கள் தங்கினார்.

தன் ஆசிரமத்திற்கு வந்திருக்கும் இளைஞன் வெறும் மெய்ஞான ஈடுபாட்டுடையவனோ, சமூக சேவகனோ அல்ல என்பதை பாபா சிவதாஸ், பாபா கினாராம் வந்த ஓரிரண்டு நாட்களிலேயே உணர்ந்தார். பாபா சிவதாஸ் சாமுத்திரிகா லட்சணங்களையும், ஒருவரது செயல்களின் பின் இருக்கும் சூட்சும காரணங்களையும் அறிய முடிந்தவர். அதனால் தெய்வாம்சம் பொருந்திய இளைஞன் இவன் என்று அனுமானித்த அவர் அதைச் சில நாட்களிலேயே உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடிந்தது.

அன்று கங்கையில் குளிக்கப் போகும் முன் பாபா சிவதாஸ் தன் உடைகளையும், அணிந்திருந்த சில அணிகலன்களையும் பாபா கினாராமிடம் தந்து விட்டுப் போனார். பாபா கினாராம் கங்கைக் கரையில் நின்றிருந்தார். குளிக்கையில் கங்கையின் அலைகளில் அசாதாரண சுழற்சியைக் கண்ட பாபா சிவதாஸ் திகைத்தார். இது போல் கங்கை என்றும் இருந்ததில்லையே என்று ஆச்சரியப்பட்ட பாபா சிவதாஸுக்கு இதன் காரணம் பாபா கினாராமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. உடனே அங்கிருந்த புதர் ஒன்றின் பின் மறைவாக நின்று என்ன நடக்கிறது என்று பார்த்தார்.

கங்கையின் அலைகள் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்துக் கொண்டே வந்து பாபா கினாராமின் கால் களைத் தொட்டு நனைத்த பின் அமைதியடைந்து அடங்கித் திரும்பிய போது பாபா சிவதாஸுக்கு மயிர்க்கூச்செறிந்தது.

-அமானுஷ்யம் தொடரும்.

Next Story