பாதையில் விழுந்தால் விதை முளைக்காது


பாதையில் விழுந்தால் விதை முளைக்காது
x
தினத்தந்தி 2 Jun 2017 10:05 AM GMT (Updated: 2 Jun 2017 10:05 AM GMT)

உலகத்தில் கண் முன்பு காட்டப்படும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஒரு படிப்பினையை கற்றுத்தரும் சம்பவமாக உள்ளது.

லகத்தில் கண் முன்பு காட்டப்படும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஒரு படிப்பினையை கற்றுத்தரும் சம்பவமாக உள்ளது. உதாரணமாக, அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் விபத்து நிகழும் என்ற பாடத்தை, பலரது உரையாடல், செய்திகள் மூலமாக மட்டுமல்ல நேரில் பார்த்தும் கற்றிருக்கிறோம்.

ஆனால் நாம் வாழ்க்கையில் அதை செயல்படுத்தாமல் விட்டுவிட்டோம் என்றால் நாம் கண்டும், கேட்டும் உணராமல் இருப்பவர்களாக கருதப்படுவோம். அதுமட்டுமல்லாமல், நாமும் ஒரு கட்டத்தில் அதுபோன்ற நிகழ்வை சந்திக்க வைக்கப்படுவோம் என்பதும் கசப்பான உண்மையாக உலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.

அதுபோலத்தான், அநியாயத்தால் சேர்க்கும் செல்வமும் மற்றவர்களின் ஏளனத்தைத்தான் பெற்றுத்தருமே தவிர, அவனுக்கோ அவனது வாரிசுகளுக்கோ மனப்பூர்வமான உதவியை செய்ய மற்றவர்களுக்கு தூண்டுதலை ஏற்படுத்தாது. மறைந்த பிறகும் அவனும் அவன் வாரிசுகளும் மனிதருக்குள் அவமானச் சொல்லாகத்தான் இருப்பார்கள்.

எவ்வளவு பெரும் செல்வமும், செல்வாக்கும், பணமும் ஒருவனை மரணத்தில் இருந்து விடுவிக்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றவை அல்ல என்பதை உணர்த்த நம்மைச்சுற்றி எத்தனையோ சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் பணத்தை அடைவதற்காக அநியாய வழிகளை நாடுவதை மனிதன் விடாதிருப்பதும், அதே நிலையை அடையும்போது, உணர்ந்து திருந்துவதற்கு பெரும்பாலும் வாய்ப்பு கிடைக்காமல் போவதும் கசப்பான உண்மையாகவே உள்ளது.

இதுபோன்ற நற்போதனைகளை கேட்டு அதை வாழ்க்கையில் செயல்படுத்த முற்படும் உள்ளங்களை இயேசு 4 வகைகளாகப் பிரிக்கிறார். அதில் முதல் வகை, பலரும் சென்று வரும் ஒரு வழி அல்லது பாதையைப் போன்றதாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார் (மத்.13:4,19).

பாதை குறித்து ஆராய்ந்தால், அதில் எதுவுமே நிரந்தரமாக இருக்காது. ஒரு திசைக்கு மட்டுமல்லாமல் நேர் எதிர்த்திசைக்கும் அது கொண்டு செல்லும். அதில் யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். பலரும் வந்து செல்வதால் அதில் குப்பைக்கூளங்களுக்கு பஞ்சம் இருக்காது. எனவே மிருகங்கள், பறவைகள், பூச்சிகளுக்கு அந்தப் பாதை வசிப்பிடமாக அமையும்.

இப்படிப்பட்ட மனதை உடையவர்கள், ஒரு நிலையான கொள்கையை உடை யவர்களாக இருக்கமாட்டார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிப் பேசும் அல்லது வேறுபட்டு செயல்படும் நிலையில் இருப்பார்கள். இவர்கள் உள்ளத்தில் எதுவுமே நிலையாகத் தங்காது.

இப்படிப்பட்டவர்களுக்கு கூறப்படும் போதனைகள், வழியருகே விதைக்கப்படும் விதைகளுக்குச் சமம் என்று இயேசு கூறுகிறார். ஓரிடத்தில் விதை விழுந்தால், அது அங்கேயே கிடந்து, ஈரப்பதத்தை ஏற்று வேர்விடும். ஆனால் அதுபோன்ற பாதையில் விதை விழுந்துவிட்டால் அது அங்கேயே கிடக்க முடியாது. போவோர் வருவோரின் கால்களில் மிதிபட்டு நசுங்குவதும், இடறப்படுவதுமாக இருப்பதால் ஈரப்பதத்தில் நிலைத்து வேர்விடமுடியாமல் போய்விடுகிறது.

அதாவது நற்போதனையை செயல்படுத்துவதற்கு வழியில்லாத அளவுக்கு வேறு போதனைகள் மூலம் நற்போதனையை சிதறடித்துவிடுகிறார்கள். பக்தியை உண்டாக்கும் இறைபோதனைகள் செயல்படத் தொடங்குவதற்கு முன்பாகவே, அப்படிப்பட்டவர்களின் உள்ளத்தில் இருந்து அதை இறைவனுக்கும் மனிதவர்க்கத்துக்கும் எதிரான சாத்தான் மாற்று வழியில் எளிதாக எடுத்துச் செல் கிறான்.

இப்படிப்பட்ட மனநிலையைக் கொண்டவர்கள், நற்போதனையை உணர்வதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதில்லை. ஏனென்றால், அதை நீர்த்துப் போகச் செய்வதுபோன்ற மற்றொரு போதனையை சாத்தான் மற்ற நபர்கள் மூலம் போடும்போது அதற்குச் செவியைச் சாய்த்துவிடுகிறார்கள். ஆக, எந்த போதனையுமே அப்படிப்பட்டவர்களின் உள்ளத்தில் நிரந்தர இடம் பிடிப்பதில்லை.

உலகத்தில் இன்று எல்லா இடங்களிலுமே மேடைக்கு மேடை நற்போதனைகள் விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உள்ளம் கசியும் அளவுக்கு வார்த்தைகளை கனிவாக பேச்சாளர்கள் கூறும்போது பலரும் கண்ணீர் பெருக்கெடுத்து கைதட்டி ஆமோதிக்கின்றனர். ஆனால் வீட்டுக்குப் போன பிறகு அதே பழைய வாழ்க்கையையே தொடர்கின்றனர்.

அதே பழைய பகைகள், சண்டைகள், போட்டிபொறாமைகள், விட்டுக் கொடுக்காமை, மன்னிக்காதிருத்தல், பொய்கள் என அனைத்து தீயகுணங் களிலும் கொஞ்சமும் குறைவதில்லை. நற்குணங்களை மட்டுமே செயல்படுத்தும் வழிகளை நாடும் உணர்வைப் பெறுவது பற்றி யோசிப்பதும் இல்லை.

நடைமுறை வாழ்க்கையில் நற்குணங்களை மட்டுமே செயல்படுத்துவதற்கு இறைவனின் உதவியும், அவர் தரும் பலமும் அவசியம். உதாரணத்துக்கு இயேசு கூறிய மன்னிப்பு என்ற ஒரு நற்குணத்தை எடுத்துக் கொண்டோம் என்றால், பழிப்பவனை, அடித்தவனை, பகைத்தவனை, துரோகியை மன்னிக்க அவர் தரும் பலமும், உதவியும் தேவை.

அந்த உதவி கிடைப்பதை கெடுப்பதற்காகத்தான் சாத்தான் மாற்றுவழிகளில் முயற்சிக்கின்றான். இறைவனிடம் இருக்கும் அதே நற்குணங்களை அடையும் உறுதி இருந்தால் மட்டுமே, அதாவது விதையை தொடர்ந்து ஆழமாக வேர்விட அனுமதித்தால் மட்டுமே, நற்போதனைகளை வாழ்க்கையில் செயல்படுத்த முடியும்.

Next Story