ஆன்மிகம்

ஆறுமுகம் அவதரித்த வைகாசி விசாகம் + "||" + Arumugam is the voice of Vasantha

ஆறுமுகம் அவதரித்த வைகாசி விசாகம்

ஆறுமுகம் அவதரித்த வைகாசி விசாகம்
இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின் துன்பங்களைத் தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் சென்று, தங்களது குறைகளைக் கூறி முறையிட்டனர்.
7-6-2017 விசாகத் திருநாள்

இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின் துன்பங்களைத் தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் சென்று, தங்களது குறைகளைக் கூறி முறையிட்டனர். கருணையின் கடலாகிய சிவபெருமான், அசுரர்களின் கொடுமையில் இருந்து தேவர்களைக் காப்பாற்ற விரும்பினார். இதனால் தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அந்த ஆறு தீப்பொறிகளையும், வாயு மற்றும் அக்னி தேவர்கள் கங்கையில் கொண்டுபோய் விட்டனர்.

கங்கை அந்த ஆறு தீப்பொறிகளையும், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே தாமரை மலரில் ஆறு தீப்பொறிகளும், ஆறு குழந்தைகளாக மாறின. விஷ்ணுமூர்த்தி கார்த்திகை முதலிய கன்னியர்கள் மூலமாக, அந்தக் குழந்தைகளுக்கு பாலூட்டுவித்தார். ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசிமாதத்து விசாகநாள் ஆகும்.

ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினம் என்பதால் வைகாசி விசாகம், விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதே வைகாசி விசாக நட்சத்திரத்தில் பல ஞானிகள் பிறந்திருக்கிறார்கள். சித்தார்த்தன் என்னும் இயற்பெயர் கொண்ட புத்தர் பிறந்தது இந்த தினத்தில் தான். அதே போல் அவர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும், ஜோதி நிலையை அடைந்ததும் கூட இந்த வைகாசி விசாக நாளில்தான் என்பது சிறப்புக்குரியதாகும்.

இந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் பல்வேறு காவடி எடுத்தும், அலகு குத்தியும் இறைவனை வழிபடுவார்கள்.

விரதம் இருப்பது எப்படி?

விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.

வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்களை நீக்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.

வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.

வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘நம ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.

முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரி வலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.

சிவபெருமான் ஆடிய நடனம்

சிவபெருமானின் திருநடனத்தைக் காண வேண்டி, கடும் தவம் புரிந்தான் மார்க்கண்டேயன். அவனது ஒற்றைக் கால் தவத்தால், உலகமே வெப்பத்தால் தகித்தது. அந்த வெப்பத்தின் தன்மையை தாங்க முடியாமல் தேவர்களும், முனிவர் களும் சிவபெருமானை போய் வேண்டினர். இதையடுத்து ஈசன், மார்க்கண்டேயன் தவம் செய்து கொண்டிருந்த மழப்பாடி என்ற திருத்தலத்திற்கு உமாதேவி, விநாயகர், முருகப் பெருமான் ஆகியோருடன் வந்து சேர்ந்தார்.

அவரைக் கண்டதும் பரவசம் அடைந்த மார்க்கண்டேயன், இறைவனை பலவாறு போற்றித் துதித்தான். பிறகு இறைவனை திருநடனம் காண்பித்தருளும்படி வேண்டினான். ஈசன், ‘வைகாசி விசாகம் அன்று திருநடனம் நிகழ்த்திக் காட்டுவேன்’ என்று அருளாசி கூறிமறைந்தார். அதன்படி வைகாசி விசாகம் அன்று சிவபெருமான், மழுவை கையில் ஏந்தியபடி நடனமாடினார். அதைக் கண்டு மகிழ்ந்த மார்க்கண்டேயன், ஆண்டுதோறும் இதே நாளில் இத்தலத்தில் திருநடனம் காட்டியருள வேண்டும் என்று வேண்டினான். இறைவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்கூர்ந்தார். இந்த விழா திருமழப்பாடி திருத்தலத்தில் வைகாசி விசாகத்தன்று வெகு விமரிசையாக நடைபெறும்.


தொடர்புடைய செய்திகள்

1. இனிப்பான வாழ்வு தரும் சித்திரை பிறப்பு - 14.4.2018 தமிழ் வருடப்பிறப்பு
உலகத்தின் இயக்கம் 9 கோள்களை கொண்டே நடைபெறுகிறது. அந்த நவ கோள்களில் தலைமை கோளாக இருப்பது சூரியன்.
2. திருச்செந்தூர் 20/20
தமிழகத்தின் தென்கோடியில் கடலாடும் கரையோரம் இருக்கிறது திருச்செந்தூர் திருத்தலம்.
3. குறைகள் தீர்க்கும் கோர்ட்டுமலை கணேசன்
கோலாலம்பூரின் முதல் ஆலயம், நாள்தோறும் 1008 சங்காபிஷேகம் நடைபெறும் அபூர்வ ஆலயம்.
4. நடராஜர் திருமேனியில் இருந்த பொன்னாடை
மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலிக்கு வடக்கே சில மைல் தொலைவில் உள்ளது சங்கர் நகர். சிமெண்ட் தொழிற்சாலையை தன்னகத்தே கொண்ட நகரம் இது.
5. இழந்த செல்வத்தை வழங்கும் வராகி
திருமாலின் வராக அம்சமாக கருதப்படும், வராகி அம்மன், சப்த கன்னியரில் ஒருவராகவும் திகழ்கிறார்.