களவு என்னும் நோய்


களவு என்னும் நோய்
x
தினத்தந்தி 7 Jun 2017 8:25 AM GMT (Updated: 7 Jun 2017 8:25 AM GMT)

அது ஒரு மடாலயம். அங்கிருந்த தலைமை குரு, ஆன்ம பலம் நிரம்பப் பெற்றவர். அவரை சுற்றி எப்போதும் பேரமைதி இருக்கும். அவரைக் காண பலரும் வருவார்கள்.

ஜென் கதை

து ஒரு மடாலயம். அங்கிருந்த தலைமை குரு, ஆன்ம பலம் நிரம்பப் பெற்றவர். அவரை சுற்றி எப்போதும் பேரமைதி இருக்கும். அவரைக் காண பலரும் வருவார்கள். அமைதியாக தியானம் செய்வார்கள். கண்மூடி தியானத்தில் இருக்கும்போது, குருவைப் போன்றே பேரமைதியையும், அதன் மூலமாக கிடைக்கும் இன்பத்தையும் அனுபவிப்பார்கள். நாளடைவில் அங்கு வரும் மக்களின் கூட்டம் அதிகரித்தது.

அதைப் பயன்படுத்தி மடாலயத்தில் பணியில் இருக்கும் ஒருவன் திருட்டில் ஈடுபட்டான். திருடிய உடனேயே பிடிபடவும் செய்தான். இந்தச் செய்தி, தலைமை குருவின் காதுக்கும் வந்தது. ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை.

மீண்டும் ஒரு முறையும் அவன் திருட்டில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிப்பட்டான். இப்போது மடாலயத்தில் இருந்த சீடர்கள் நேரடியாகவே குருவை சந்தித்து அவனைப் பற்றிக் கூறினர்.

குருவோ, ‘சரி.. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறி முடித்து விட்டார். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சீடர்களுக்கோ கடுமையான கோபம். ‘இன்னொரு முறை இவன் திருடினால், இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும்’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

அந்தப் பணியாளரை கண்கொத்திப் பாம்பாக கண் காணிக்கத் தொடங்கினர். விரைவிலேயே மீண்டும் திருடி மாட்டிக்கொண்டான், அந்தப் பணியாள். இப்போது அவனைப் பிடித்த சீடர்கள், அவனை இழுத்துக் கொண்டு குருவிடம் வந்தனர்.

‘குருவே! இவன் திரும்பத் திரும்ப களவு செய்து பிடிபட்டும் நீங்கள் இவனை ஒன்றும் செய்யவில்லை. இவனை நீங்கள் தண்டித்து இங்கிருந்து விரட்டாவிட்டால், நாங்கள் எல்லோரும் இங்கிருந்து போய்விடுவோம்’ என்றனர் சீடர்கள்.

குரு அமைதியாக ‘சரி.. போங்கள்’ என்றார்.

இந்தப் பதிலைக் கேட்டு சீடர்கள் அனைவரும் திகைத்தனர்.

குரு தொடர்ந்தார். ‘நீங்கள் எல்லாம் கற்றுக்கொண்டு விட்டீர்கள். இனி உங்களுக்கு போதிக்க ஒருவர் தேவையில்லை. ஆனால் இவன் கல்வி இன்னமும் முடியவில்லை. இவனுக்கு எது நன்மை, எது தீமை என்று எடுத்துரைக்க கட்டாயம் ஒரு குரு தேவை. ஒரு நோயாளியை நோயோடு வெளியே அனுப்பினால், அந்த நோய் முற்றி விடுவதோடு அது மற்றவர்களுக்கும் பரவிவிடக்கூடும். இவனிடம் களவு என்ற நோய் இருக்கிறது. அதனை குணப்படுத்தாமல், இவனை வெளியேற்றினால், நிரந்தர கள்வனாகிப் போவான். பலருக்கும் அந்தக் களவை பரப்பிவிடுவான். எனவே அவனை இங்கேயே தங்க வைத்து முழுவதுமாக குணமாக்கிய பிறகுதான் வெளியே அனுப்புவேன். நீங்கள் இருந்தாலும் சரி.. போனாலும் சரி.. உங்களை விடவும் இவன்தான் இப்போது எனக்கு முக்கியம்’ என்றார்.

திருட்டில் ஈடுபட்ட பணியாள், குருவின் காலில் விழுந்து கதறினான். அவன் திருந்திவிட்டான் என்பதை அவனது தொடுதலே குருவிற்கு உணர்த்தியது.

தண்டனைகள் எதுவும் ஒருவரை திருத்துவதில்லை. ஓரிருவர் ஆங்காங்கே வகுத்து வைத்த நெறிமுறைகள்தான் மக்களை நல்வழியில் நடத்துகின்றன. 

Next Story