தோமையார் கட்டிய வித்தியாசமான தேவாலயம்


தோமையார் கட்டிய வித்தியாசமான தேவாலயம்
x
தினத்தந்தி 7 Jun 2017 10:31 AM GMT (Updated: 7 Jun 2017 10:31 AM GMT)

“பிதா என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்று இயேசுநாதர் கட்டளையிட்டதை ஏற்றுக்கொண்ட அவரது 12 சீடர்கள், இயேசுவின் அதிசயங்களை பரப்ப உலகம் முழுக்க பயணப்பட்டனர்.

“பிதா என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்று இயேசுநாதர் கட்டளையிட்டதை ஏற்றுக்கொண்ட அவரது 12 சீடர்கள், இயேசுவின் அதிசயங்களை பரப்ப உலகம் முழுக்க பயணப்பட்டனர். அதில் இயேசுவின் சீடர்களில் சந்தேக சீடரான தோமையார், கி.பி. 53-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். இயேசுவின் பிறப்பு-இறப்பு அதிசயங்களை எடுத்துரைத்ததோடு, இந்தியாவில் பல தேவாலயங்களையும் கட்டினார்.

கேரளாவில் மாலியங்கரை, பாலையூர், கோக்கமங்கலம், கொல்லம், தங்கசேரி, நிலைக்கல், சாயல் என்ற ஏழு இடங்களில் ஆலயம் அமைத்தவர், எட்டாவதாக திரு விதாங்கோட்டில் அரப்பள்ளி என்ற சிறிய தேவாலயத்தை கட்டினார். இந்தத் திருத்தலம் மிகவும் சிறியதாக இருப்பதாலும், அரை குறையாக கட்டிமுடிக்கப் பட்டதாலும் இதனை ‘அரப்பள்ளி’ கோவில் என்கிறார்கள்.

கேரள பாணியில் கட்டப்பட்ட ஓர் இந்துக்கோவில் போலவே காட்சியளிக்கும் அரப்பள்ளி தேவாலயம், கி.பி.63-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. புனித தோமையாரின் கைவண்ணத்தில் அமைதி தவழும் சூழலில் எழுப்பப்பட்டிருக்கும் இந்தத் திருத்தலத்தை இப்பகுதியினர் புனித மேரி மாதா தேவாலயம் என்றும், தோமையார் கோவில் என்றும், தரீஸா கோவில் என்றும் அழைக்கிறார்கள்.

அரப்பள்ளி தேவாலயம் மிகவும் வித்தியாசமானது. மற்ற ஆராதனை ஆலயங்களைப் போல் இது இல்லை. 25 அடி நீளமும், 16 அடி அகலமும், 10 அடி உயரமும் கொண்ட, ஓடுகளால் வேயப்பட்ட சிறிய கோவில். இதன் சுவர்கள் கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. 2.5 அடி அகலம் கொண்ட வலிமையான சுவரால் எழுப்பப்பட்டிருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகள் கழிந்தால் 2000-வது ஆண்டு விழா கொண்டாடப்போகிறது என்பதே இதன் பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது.

கோவில் முன் வாசல் அருகே ஒரே கல்லில் செதுக்கப்பட்ட காணிக்கை உண்டியல் உள்ளது. அதேபோன்று கோவிலின் உள்ளே கருங்கல்லினால் செய்யப்பட்ட ஞானஸ்தான தொட்டி ஒன்றும் உள்ளது. யோர்தான் ஆற்றங்கரையில் யோவான் இயேசுவிற்கு ஞானஸ்தானம் செய்து கொடுத்ததை போல, இந்த தொட்டியிலும் சிறு குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் கொடுக்கப்படுகிறது. அதேபோல் ஆலயத்தின் வெளியிலும் கல்லால் செதுக்கப்பட்ட வட்ட வடிவ கல் நீர்த் தொட்டியும், பாதங்களை கழுவுவதற்கு பழங்கால தொட்டியும் உள்ளன.

பீடத்தின் வலது பக்க சுவரில் சிறிய சிலுவை செதுக்கப்பட்டுள்ளது. இது புனித தோமையாரின் திருக்கரங் களால் செதுக்கப்பட்டது.

இங்கு தோமையாரின் திரு உருவம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர இயேசுவின் உருவமோ, மாதாவின் உருவமோ, படங்களோ அங்கில்லை. அதனால் இது தற்போதைய வழிபாட்டு முறைகள் எல்லாம் தொடங்குவதற்கு முன்பே உருவான தேவாலயம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பீடத்தின் முன்னால் உள்ள மரப்பெட்டியின் ஒரு கதவில் சாவியை கையிலேந்தியபடி புனிதர் பீட்டரின் உருவமும், மறு கதவில் வாளை ஏந்தியபடி புனிதர் பாலின் உருவமும் காட்சி தருகின்றன. இந்தப் பெட்டி பிற்காலத்தில் போர்ச்சுகீசியர்களால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டவை என்ற வரலாற்று செய்தியும் உலவுகிறது. இது மட்டுமல்லாமல் பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட சின்ன தூபகலசமும் கொடுத்திருக்கிறார்கள்.

இப்படி பல சிறப்புகள் கொண்ட அரப்பள்ளி தேவாலயம் பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்தது. ஒருமுறை திருவிதாங்கோட்டில் கொள்ளை நோய் ஒன்று பரவியது. ஏராளமான மக்கள் இறந்தனர். பலர் ஊரைக் காலி செய்தனர். இதனால் தேவாலயம் கவனிப்பாரற்றுக் கிடந்தது. 1927-ல் கருங்கல் கூரையைப் பிரித்து ஓடுகளால் கூரையை மேவினார்கள். ஏனெனில் மேற்கூரையின் இடுக்கில் அபாயகரமான ஓர் ஆலமரம் வளர்ந்திருந்தது. அதன் காரணமாக தான் பழைய கல் கூரையை அகற்றிவிட்டு ஓடுகளால் ஆன கூரையை மாற்றியிருக் கிறார்கள்.

சிறிது காலம் கழித்து மீண்டும் கோவில் கவனிப்பாரற்று போனது. 1941-ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அத்துடன் திருப்பலிக்கு தேவையான பலி பீடமும் மற்ற கட்டிடங்களும் கட்டப்பட்டது. காலங்கள் உருண்டோட, மீண்டும் கோவிலை கவனிக்க ஆளின்றி புதர் மண்டியது. கோவிலை புதுப்பிப்பதும், பின்னர் பராமரிப்பின்றி பாழடைந்து போவதும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தது. 2007-ம் ஆண்டு புனித தோமையார் உருவாக்கிய 8 கோவில்களும் சர்வதேசத் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து அவர் உருவாக்கிய அனைத்து தேவாலயங்களும் உலக அங்கீகாரம் பெற்றன. இதனால் அரப்பள்ளி தேவாலயம் புதுப்பொலிவு பெற்றது. புனித தோமையாருடைய நற் செய்தியின் அடையாளமாக திருவிதாங்கோடு இருப்பது சர்வதேச ஆலய அறிவிப்பின் மூலம் உலகின் பார்வைக்கு வந்திருக்கிறது.


Next Story