உங்கள் சத்துருக்களுக்கு மத்தியில் உங்களை ஆசீர்வதிக்கும் கர்த்தர்


உங்கள் சத்துருக்களுக்கு மத்தியில்  உங்களை ஆசீர்வதிக்கும் கர்த்தர்
x
தினத்தந்தி 9 Jun 2017 12:45 AM GMT (Updated: 8 Jun 2017 10:13 AM GMT)

‘என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது’ (சங்கீதம் 23:5).

‘என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது’ (சங்கீதம் 23:5).

பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்! இம்மட்டும் உங்களோடு இருந்தவர் இனிமேலும் உங்களோடு இருந்து உங்கள் மன விருப்பத்தை நிறைவேற்றி உங்களுக்கு விரோதமாய் இருக்கும் சகல சத்துருவின் கிரியைகளை அழித்து உங்களுக்காக அவர் ஆயத்தப்படுத்தியுள்ள ஆசீர்வாதங்களை நீங்கள் அனுபவிக்க உங்களுக்கு உதவி செய்வார்.

இவ்வுலகில் பலவிதங்களில் சத்துரு நமக்கு விரோதமாய்ப் போராடி வருகிறான். குடும்பத்திற்கு விரோதமாக, பொருளாதாரத்திற்கு விரோதமாக, சரீர சுகத்திற்கு விரோதமாக அவன் போராடுகிறான் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம்.

அவனுடைய போராட்டங்கள் ஒருபக்கம் நம்மை மோதினாலும் மறுபக்கம் அப்போராட்டங்களிலிருந்து விடுதலையையும் ஆசீர்வாதத்தையும் கர்த்தர் நமக்காக ஆயத்தப்படுத்தியிருக்கிறார் என்பதை மறந்து போகாதீர்கள்.

‘தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை அவைகள் மனு‌ஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை’ (1.கொரிந்தியர் 2:9).

மேற்கண்ட வசனத்தின்படி தேவன் ஆயத்தப்படுத்தின ஆசீர்வாதங்களை அறிந்து கொள்ளுங்கள்.

ஆபிரகாமுக்காக ஆடு

‘ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும் போது, இதோ, பின்னால் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக் கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான். அப்பொழுது ஆபிரகாம் கடாவைப் பிடித்து, அதைத் தன் மகனுக்குப் பதிலாகத் தகன பலியிட்டான்’ (ஆதியாகமம் 22:13)

அன்பான சகோதரனே! சகோதரியே! இச்செய்தியை நீங்கள் ஜெபத்தோடும், விசுவாசத்தோடும் வாசியுங்கள். உங்கள் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு போராட்டங்களின் மத்தியிலும் நீங்கள் சோர்ந்து போகாமல், போராடுவதற்கு பெலனை கொடுக்கும் கர்த்தரை நோக்கிப் பாருங்கள்.

நம்முடைய ஒரே பேரான குமாரனை பலி செலுத்த ஆபிரகாமுக்கு ஆண்டவர் கட்டளையிட்டபோது அவன் இருதயம் எவ்வளவாய் போராடியிருக்கும். ஒரு பிள்ளைக்காக பல ஆண்டுகள் விசுவாசத்தோடு காத்திருந்து பெற்ற தன்னுடைய மகனை பலி செலுத்துவது எளிதான காரியமல்ல. என்றாலும், போராட்டங்களின் முடிவில் ஆபிரகாமின் இருதயம் கர்த்தரையே சார்ந்திருந்தது என்பதை ஆதியாகமம் 22:8–ல் வாசிக் கிறோம்.

‘‘ஆபிரகாம்: ‘என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார்’ என்றான்’’.

எந்த சூழ்நிலையிலும் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்ற நிலைமைக்கு வந்து விட்டால் நிச்சயமாய் உங்களுக்கு விரோதமாக எழும்பும் எல்லா சத்துருக்கள் மத்தியில் கர்த்தர் அற்புதங்களை செய்து தப்பிச் செல்ல வழியை ஆயத்தம் பண்ணுகிறார் நம் ஆண்டவர்.

ஆபிரகாம் வாழ்வில் இந்த மாபெரும் அனுபவம் உண்டானதன் விளைவுதான் ‘யேகோவாயீரே’ என்ற பலிபீடம் உண்டானது. ‘யேகோவாயீரே’ என்பதற்கு ‘கர்த்தர் பார்த்துக் கொள்வார்’ என்று அர்த்தம்.

அந்த ஆண்டவர் எல்லா பிரச்சினைகளிலும் உங்களைப் பாதுகாத்து கிருபையாய் வழிநடத்த வல்லவராயிருக்கிறார்.

தாவீதுக்காக அபிஷேகம்

“உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டால், அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான். அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி. அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்க மாட்டேன். ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான். அவன் சிவந்தமேனியும், அழகிய கண்களும் நல்ல ரூபமுள்ளவனுமாயிருந்தான். அப்பொழுது கர்த்தர் இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம் பண்ணு என்றார்.’’ மி.சாமுவேல் 16:11,12

எனக்கன்பான சகோதரனே! சகோதரியே! பழைய ஏற்பாட்டில் சவுலுக்கு பதில் வேறொருவரை ராஜாவாய் ஆண்டவர் தெரிந்துகொள்ளத் தீர்மானித்த போது பெத்லெகேமில் உள்ள ஈசாயின் வீட்டிற்கு கர்த்தர் சாமுவேல் தீர்க்கதரிசியை அனுப்பினார். ஈசாய்க்கு 8 குமாரர்கள் இதில் 7 குமாரரையும் கர்த்தர் தெரிந்துக் கொள்ளாமல் நிராகரித்தார்.

இந்தச் சூழ்நிலையில் ஈசாயின் மகனாகிய எலியாபை சாமுவேல் கண்டபோது இவன் தான் கர்த்தர் தெரிந்து கொண்ட ராஜாவாக இருப்பான் என அவனுடைய முகத்தையும், சரீர வளர்ச்சியையும் பார்த்து நினைத்துக்கொண்டான். கர்த்தரோ அவனை நோக்கி மனு‌ஷன் முகத்தைப் பார்க்கிறான், நானோ இருதயத்தைப் பார்க்கிறேன் எனக்கூறி எலியாபை ஆண்டவர் நிராகரித்தார்.

உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என சாமுவேல் ஈசாயை கேட்க எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான் எனக் கூறி அவனை அழைத்து  வரும்படி ஆள் அனுப்பினான். சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதைக் கண்டபோது இவன்தான் நீ எழுந்து இவனை அபிஷேகம் பண்ணு என்று கர்த்தர் கூறி அவனுடைய சகோதரர்கள் நடுவிலே தாவீதை சாமுவேல் தீர்க்கதரிசியின் மூலமாய் அபிஷேகம் பண்ணினார்.

எனக்கன்பானவர்களே! தகப்பனே தன் குமாரனாகிய தாவீதை மறந்தாலும், கர்த்தர் தாவீதை மறக்கவில்லை. தாவீது வனாந்தரத்தில் ஆடுகளுக்குப் பின்னால் அலைந்து கொண்டிருந்தாலும் அவனே அறியாத ஒரு ராஜரீக அபிஷேகம் அவனுக்காக ஆண்டவரால் ஆயத்தப்படுத்தப்பட்டது.

அதுபோல நீங்கள் வனாந்தரமான சூழ்நிலையில் எல்லாராலும் மறக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் உங்களை அழைத்த தேவன் உங்களுக்காக பரலோக அபிஷேகத்தை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார். என்றைக்கு தாவீதின் மேல் அபிஷேகம் ஊற்றப்பட்டதோ, அன்று முதல் கர்த்தர் அவனைப் பயன்படுத்த ஆரம்பித்தார். அசுத்த ஆவிகளை துரத்துகிற அதிகாரத்தையும் அவனுக்குத் தந்தார். சத்துருக்களை மேற்கொள்கிற யுத்தவீரனாய் மாற்றினார். எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்ரவேலிலே ராஜாவாக உயர்த்தினார். அந்த தாவீதின் சந்ததியில் தான் நம் அருமை ஆண்டவராகிய இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்.

ஆகவே தேவபிள்ளையே! ஆபிரகாமுக்காக ஆட்டுக் கடாவை ஆயத்தப்படுத்திய கர்த்தர், தாவீதுக்காக அபிஷேகத்தை ஆயத்தப்படுத்திய கர்த்தர் உங்கள் எல்லா சத்துருக்கள் மத்தியிலும் உங்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி உங்களை சந்தோ‌ஷப்படுத்துவார்.

சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை–54.

Next Story