தலைமைப் பீட அகோரேஸ்வரர்கள்
அகோரேஸ்வரர்களாக உயர்ந்த அந்த தலைமைப் பீடாதிபதிகள், தொடக்கத்திலேயே அகோர மார்க்கத்தில் இருந்தவர்களாக இருக்கவில்லை.
அகோரிகளின் ரகசியங்களை உணர்ந்து, அவற்றில் ஆளுமை கொண்ட யோகிகள் ‘அகோரேஸ்வரர்கள்’ என்றழைக்கப்பட்டார்கள். அகோரிகளின் குருவாக, சக்தி வாய்ந்தவராக இருந்து சீர்திருத்தங்களும் செய்து, முறைப்படுத்திய பாபா கினாராமும் அப்படியே அழைக்கப்பட்டதில் வியப்பொன்றும் இல்லை. பாபா கினாராமைத் தொடர்ந்து அகோரிகளின் தலைமைப் பீடத்திற்கு வந்த பினக்ராம், பிகாம்ராம் போன்றவர்களும் பெயரளவில் மட்டுமல்லாமல் அகோரேஸ்வரர்களாகவே வாழ்ந்தும் சென்றார்கள்.
அகோரேஸ்வரர்களாக உயர்ந்த அந்த தலைமைப் பீடாதிபதிகள், தொடக்கத்திலேயே அகோர மார்க்கத்தில் இருந்தவர்களாக இருக்கவில்லை. பினக்ராம் ‘கபீர்பந்தி’ என்றழைக்கப்பட்ட கபீரின் ஆன்மிக வழியைப் பின்பற்றுபவராகத் தான் ஆரம்பத்தில் இருந்தார். பிகாம்ராம் வைஷ்ணவராக இருந்தவர். பிற்காலத்தில் தான் இவர்கள் அகோர மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டு அகோரிகளாக மாறி, பின் அகோரேஸ்வரர்களாக உயர்ந்தார்கள். அவர்களுடைய குரு பாபா கினாராமைப் போலவே, அவர்களும் சிவனை வணங்குவதற்கு இணையாக விஷ்ணுவையும் வணங்கினார்கள்.
அவர்களைத் தொடர்ந்து வந்த தலைமைக் குருக்களில் பாபா ராஜேஸ்வர் ராமிடம் ஒரு பெண்மணி, தனக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை என்பதால் குடும்பத்தில் உதாசீனப்படுத்துகிறார்கள் என்று மிகுந்த வருத்தத்துடன் கூறினார். மனமிரங்கிய பாபா ராஜேஸ்வர்ராம் அந்தப் பெண்மணியிடம் ‘ஸ்ரீமன் நாராயண நாராயணா’ என்று தியானித்து வரும்படி கூற, அந்தப் பெண்ணும் அப்படியே தியானித்து விரைவிலேயே தாய் ஆனார் என்று சொல்லப்படுகிறது. சைவர் களும், வைணவர்களும் தங்கள் தீவிரப் பற்றினால் சண்டையிட்டுக் கொண்ட கால கட்டங்களில், இப்படி இரண்டையுமே ஏற்றுக் கொண்டவர்களாக அகோரேஸ்வரர்கள் இருந்தார்கள் என்பது கவனிக்க வேண்டிய செய்தி.
பாபா ராஜேஸ்வரரின் சீடரும், அடுத்த தலைமைப் பீடாதி பதியாகவும் வந்த அகோரேஸ்வரர் பாபா பகவான் தாஸ், பாபா கினாராமிற்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமானவர். இவர் ‘சர்க்கார் பாபா’ என்றும் அழைக்கப்பட்டார்.
அகோரேஸ்வரர் பாபா பகவான் தாஸ், 1937–ம் ஆண்டு பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். அவர் பிறப்பதற்கு முன் அவரது தாயார் கனவில், அவர் வயிற்றில் இருந்து பிறக்கும் குழந்தை சாதாரணக்குழந்தை அல்ல, இறைவனின் அம்சமே என்று யாரோ சொல்வதாக உணர்ந்தார். சிறிது நேரத்தில் குழந்தையும் பிறக்கவே அந்தக் கனவின் பிரகடனத்தை மனதில் கொண்டு குழந்தைக்கு பகவான் தாஸ் என்ற பெயரை வைத்தார்கள்.
பகவான் தாஸுக்கு ஐந்து வயதாகிய போதே, அவருடைய தந்தை காலமாகி விட்டார். எனவே பகவான் தாஸ், தாத்தா பாட்டியிடம் வளர்ந்தார். பாட்டி செல்லமாக வளர்ந்த பகவான் தாஸ், பள்ளிப்படிப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. ஆன்மிக நூல்களைப் படிப்பதும், கோவில்கள் மற்றும் புனித ஸ்தலங்களில் தியானம் செய்வதுமே அவருக்குப் பிடித்தமானவையாக இருந்தன. சிறு வயதில் பிரகலாதன் கதையும், துருவன் கதையும் அவரை அதிகம் ஈர்த்தன. வயதாக, ஆக துறவு மனப்பான்மை அவரிடம் வளர ஆரம்பித்தது. ஏழு வயதாகிய போதே அதிகமாக கோவில் களில் அவர் தங்க ஆரம்பித்தார். வீட்டில் உண்பது அரிதாகியது. கோவிலில் பிரசாதமோ, யாராவது ஏதாவது தந்தால் அதையோ மட்டும் உண்பார். தியான நிலையில் இருந்தால் அதுவும் உண்ண மாட்டார். மணிக்கணக்கில் இறை உணர்வுடன் லயித்தபடி அமர்ந்திருப்பார். தோற்றம், உணவு, உடை, சவுகரியம் முதலானவை அவருக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. அவருடைய இந்த நிலை கண்டு குடும்பத்தினர் வருத்தப்படவே, அவர்களுடைய வருத்தம் காணச் சகிக்காமல், அந்த ஊரை விட்டு வெளியேறி, கயா, பூரி ஆகிய புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். மறுபடி சொற்ப காலத்திற்குள் அவர் ஊருக்குத் திரும்பிய போது, குடும்பத்தினர் அவருடைய துறவை ஏற்றுக்கொள்ளும் மனநிலையைப் பெற்றிருந்தனர்.
சிறிது காலம் அங்கிருந்து விட்டு மறுபடியும் அங்கிருந்து கிளம்பிய பகவான் தாஸ், செல்லும் வழியில் எல்லாம் ஆன்மிகப் பெரியோர்களின் சத்சங்கத்தில் அதிகம் கழித்தார். ஆரம்ப காலத்தில் வைஷ்ணவப் பெரியோர்களே அவருக்கு அதிகம் கிடைத்தார்கள். ஒன்பதாவது வயதில் காசி விஸ்வநாதரைத் தரிசிக்க அவருக்கு ஆவல் ஏற்பட்டது. அவர் காசிக்குச் சென்று ‘தச அஸ்வ மேத காட்’டை அடைந்தார். கோவிலுக்கு எப்படிச் செல்வது என்று அறியாத ஒரு நிலையில், சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தார். அப்போது பட்டுப்புடவை அணிந்திருந்த ஒரு மூதாட்டி அவரருகே வந்தார். அந்த மூதாட்டி தெய்வீகக் களையுடன் இருந்தார்.
‘உனக்கு காசி விஸ்வ நாதனைப் பார்க்க வேண்டுமா?’ என்று கேட்டார். அந்த மூதாட்டியே அவர் மனதை அறிந்து அப்படிக் கேட்டது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
பாபா பகவான் தாஸ் ‘ஆமாம்’ என்றார்.
அந்த மூதாட்டி ‘நீ கங்கையில் குளித்து விட்டு வா. நான் உன்னை அங்கே அழைத்துப் போகிறேன்’ என்று கூறினார். பாபா பகவான் தாஸும் அவர் கூறியபடியே கங்கையில் குளித்து விட்டு வர, அந்த மூதாட்டி அவரை காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தக் கோவிலில் காசி விஸ்வநாதரைத் தரிசித்ததும், எல்லை இல்லாத ஆனந்தத்தை அனுபவித்த பகவான் தாஸ், அங்கேயே வாழ்நாள் பூராவும் தங்கி விட பேராவல் கொண்டார். ஆனால் அந்த மூதாட்டி அவரை அங்கேயே இருக்க விடாமல், அன்னபூரணேஸ்வரி ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு போனவுடன் அந்த மூதாட்டி மாயமாக மறைந்து விட்டார். அவர் யார்?, எதற்காக அவரை அழைத்து வந்தார்?, எப்படி மறைந்தார்? என்று புரியாத நிலையில், மீண்டும் கங்கைக் கரைக்கு பாபா பகவான் தாஸ் திரும்பினார். அங்கே ‘ஹரிச்சந்திர காட்’டில் அப்போதைய அகோரிகளின் தலைமைப் பீடாதிபதியான பாபா ராஜேஸ்வர ராமை சந்தித்தார். அந்தச் சிறுவனின் ஆன்மிக தேஜஸைக் கவனித்த பாபா ராஜேஸ்வர ராம் அவருக்கு அகோர தீட்சை அளித்து அவர் பெயரை பாபா பகவான்ராம் என்று மாற்றினார்.
அங்கேயே மூன்று வருடங்கள் இருந்து அகோர ரகசியங்கள் பலவற்றைக் கற்றுக் கொண்ட போதும், பாபா பகவான்ராமால் அதற்கு மேலும் அங்கேயே தங்கி விட முடியவில்லை. மெய்ஞான வேட்கை மேலும் பல மேல்நிலைகளை அடைய அங்கிருந்து இழுத்துச் சென்றது. தன் பன்னிரண்டாம் வயது முடிவடையும் காலத்தில், அவர் அங்கிருந்தும் சென்று கங்கை முதலான புண்ணிய நதிகளோரம் பயணம் மேற்கொண்டார்.
பதினான்காம் வயதில் கங்கை நதிக்கரையோரம் இருந்த ஒரு சுடுகாட்டில், மூன்று நாட்கள் இரவு பகலாக உணவு நீரின்றி கடும் தவமிருந்த பகவான் ராம், மூன்றாம் நாள் முடிவில் மெய்ஞான சித்தி பெற்றார். அந்த மூன்று நாட்களில் அவருடைய தவ வலிமையை நேரில் பார்த்த மக்கள், உண்மையான மெய்ஞானியாக அவரை அடையாளம் கண்டனர். அவரைக் கூட்டம் கூட்டமாக வந்து தரிசித்தனர். அவர் அருகாமையில் இருக்கும் போது, பலர் பரவசத்தையும், பேரமைதியையும் உணர்ந்தார்கள். சிலர் தங்கள் நோய்கள் குணமாகும் அனுபவத்தையும் பெற்றார்கள். மனித குலத்தின் மீது பெரும் கருணை கொண்டிருந்த பாபா பகவான்ராம், மக்கள் உணர்ந்த அற்புதங்களில் தன் பங்கை என்றுமே ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லாம் இறைவன் செயல் என்ற எண்ணமே ஆணித்தரமாக அவரிடம் இருந்தது.
தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணித்த பாபா பகவான்ராம், பல இடங்களில் ஆசிரமங்களையும், அறக்கட்டளைகளையும் அமைத்து மெய்ஞான வழிகளைப் பரப்புவதற்கு ஏற்பாடு செய்தார். இந்தியா முழுவதும் பயணம் செய்த அவர், பின் நேபாளம், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், லெபனான், சவுதி அரேபியா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து அமெரிக்கா, மெக்சிகோ முதலான நாடுகளுக்கும் பயணம் செய்து உலக மக்கள் கவனத்தையும் ஈர்த்தார். உலகம் முழுவதும் உள்ள அகோரிகளைத் தொடர்பு கொண்ட அவர், தேவையான சீர்திருத்தங்களை தற்காலத்திற்கு ஏற்றவாறு அகோர மார்க்கத்தில் கொண்டு வந்தார்.
அகோர் பரிஷத் டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மேற்பார்வையில் Aghor Research Institute and Library என்ற நூலகத்தை பகவான்ராம் பாபா நிறுவினார். அகோரிகளின் சித்தாந்தம், வேதாந்தம், செயல்முறை குறித்த நூல்கள் எல்லாம் அங்கே படிக்கக் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அகோரிகள் குறித்த ஆராய்ச்சிகளுக்கும் அந்த அமைப்பும் நூலகமும் உதவி செய்கின்றன. புனித நூல்கள் பல பிற்கால சந்ததியினரால் சிறிய சிறிய மாற்றங்கள் பெற்று, மனிதர்களை மூளைச் சலவை செய்வதாக இருக்கின்றன என்றும், அதனாலேயே அவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் தவறை ஒருவர் செய்யக்கூடாது என்றும் பாபா பகவான் ராம் அடிக்கடி சொல்வார். மனிதன் உண்மை என்ன என்பதைத் தன் ஆத்மஞானம் மூலம் தான் அறிய முடியும் என்பது அவர் கருத்தாக இருந்தது.
1992–ம் ஆண்டு நியூயார்க்கில் மன்ஹட்டன் நகரில் காலமான பகவான்ராம் பாபாவின் உடல், இந்தியா கொண்டுவரப்பட்டு அவர் விருப்பப்படி காசியில் கங்கைக்கரையில் எரிக்கப்பட்டது. பதினைந்து வயதிற்குள்ளேயே மெய்ஞானம் பெற்று அகோர ரகசியங்கள் பலவும் அறிந்திருந்த போதும், மகாசக்திகளைப் பலர் அறிய விளம்பரம் செய்து பயன்படுத்துவதை பாபா பகவான்ராம் சிறிதும் ஆதரித்ததில்லை. அந்த சக்திகளை ரகசியமாய் மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதுவும் மனிதகுலத்தின் நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த அவர் அப்படியே வாழ்ந்தும் சென்றார்.
அடுத்த வாரம் திகிலூட்டும் சுவாரசியமான நிகழ்வு களைச் சந்தித்த இன்னொரு அகோரியின் அனுபவங்களைப் பார்ப்போம்.
Related Tags :
Next Story