செல்வத்தை அள்ளித் தரும் அட்சயபுரீஸ்வரர்


செல்வத்தை அள்ளித் தரும் அட்சயபுரீஸ்வரர்
x

கால் ஊன் நீங்கப்பெற்ற சனிபகவானுக்கு சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக காட்சி தந்து தரிசனம் கொடுத்தார். அவரே இந்த ஆலயத்தின் மூலவர்.

ஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு அருகில் உள்ள விளங்குளம் என்ற ஊரில் உள்ளது அட்சயபுரீஸ்வரர் ஆலயம்.

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய கோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். எதிரே பீடமும், நந்தி பகவானின் தனி மண்டபமும் உள்ளன. 

கால் ஊன் நீங்கப்பெற்ற சனிபகவானுக்கு சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக காட்சி தந்து தரிசனம் கொடுத்தார். அவரே இந்த ஆலயத்தின் மூலவர். அத்துடன் சிவபெருமான் சனி பகவானுக்கு இத்தலத்தில் திருமணமாகும் அருளையும் வழங்கினார். மந்தா தேவி, ஜேஷ்டா தேவி என்ற இரு பத்தினிகளை இங்கு மணந்த சனிபகவான் இங்கு ஆதி பிருஹத்சனீஸ்வரர் என்ற பெயருடன் திருமணக் கோலத்தில் தன் துணைவியருடன் தனி கோவிலில் அருள்பாலிக்கிறார். இவரது ஊனத்தை காகம் வந்து பெற்றுக் கொண்டது. எனவே சனி பகவான் அந்த காகத்தினையே தனது வகனமாக இங்கு ஏற்றுக் கொண்டார். 

சனி பகவானின் கதை என்ன?

சூரிய தேவனின் மகன் சனிபகவான். இன்னொரு மகன் எமதர்மன். இருவரும் பகை கொண்ட நேரம் நிறைய உண்டு. ஒரு சமயம் பகையினால் எமதர்மன் சனிபகவான் காலில் ஓங்கி அடிக்க, அதனால் சனிபகவானின் கால் ஊனமானது. 

கால் ஊனத்துடன் நிவாரணம் தேடி மனித உருவத்தில் சுரைக் குடுவையில் பிச்சை ஏந்தி பெற்ற அந்த தானியங்களைச் சமைத்து அன்னதானமாக ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் அளித்து வந்தார் சனிபகவான். ஊர் ஊராக சுற்றி வந்த சனிபகவான் விளாமரங்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். பாதையை கடக்கும் போது ஓர் இடத்தில் விளாமரத்தின் வேரால் தடுக்கப்பட்டு நிலைதடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார். அங்கே சித்திரை திங்கள், வளர்பிறை திருதியையும், நட்சத்திரமும், சனிவாரமும் சேர்ந்த புனித நன்னாளில் பல கோடி யுகங்களாக மறைந்திருந்த ‘பூச ஞான வாவி’ என்ற ஞான தீர்த்தம் சுரந்து சனிபகவானை மேலே எழுப்பி கரை சேர்த்தது. இதனால் சனி பகவானின் கால் ஊனம் நிவர்த்தியானது. 

விளாவேர் தடுக்கி சனி பகவான் விழுந்ததால் சுரந்த ஞான வாவி தீர்த்தம் குளமாக உருவானது. அதனால் விளம்குளம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி விளங்குளம் என்ற பெயரால் தற்போது அழைக்கப்பட்டு வருகிறது. 

சனி பகவானின் அருள்

அட்சய திரிதியை நாளில் அட்சயபுரீஸ்வரரால் ஊனம் நிவர்த்தி பெற்ற சனி பகவான் கிழக்கு பிரகாரத்தின் வடதிசையில் தனி ஆலயத்தில் தென் திசை நோக்கி அருள் பாலிக்கிறார். 

விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகள் செயலற்று போகவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இங்கு சனி பகவான் அருள் பாலிக்கிறார். 

சனி தோ‌ஷம் உள்ளவர்களும், சனி கிரக பாதிப்பு உள்ளவர்களும், சனி பகவானுக்கும், இறைவன், இறைவிக்கும் அர்ச்சனை செய்துவிட்டு பிரகாரத்தில் காக்கையை அழைத்து உணவு படைக்கின்றனர். காக்கைகள் அந்த உணவை எடுத்து புசித்தால் அவர் களது சனி தோ‌ஷம் அறவே விலகிவிட்டது என்று பொருளாம். ஒரு வேளை அந்த உணவை உண்ண தயங்கி பறந்து போனால் அவர்களது தோ‌ஷம் விலகவில்லை என்று அர்த்தமாம். எனவே அவர்கள் மறுபடியும் சனி பகவானை தேடி வந்து பிரார்த்தனை செய்து உரிய பயனைப் பெறுவது வழக்கமாக உள்ளது. 

இறைவன் – இறைவி

ஆலயத்தில் பிரகாரத்தை அடுத்து உள்ளது வசந்த மண்டபம். இந்த மண்டபத்தின் வலது புறம் அன்னை அபிவிருத்தி நாயகியின் சன்னிதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் வலது கரத்தில் தண்டத்தையும், மேல் இடது கரத்தில் தாமரையையும் சுமந்து கீழ் இரு கரங்களில் அபய ஹஸ்த, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி புன்னகை தவழ அருள் பாலிக்கிறாள். 

அடுத்துள்ள மகாமண்டபத்தின் அருகில் உள்ள அர்த்த மண்டப நுழைவுவாயிலின் இடது புறம் இரட்டை விநாயகரும், வலது புறம் மாரியம்மன், பிரதோ‌ஷ நாயகர் ஆகியோர் திருமேனிகளும் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் இறைவன் அட்சயபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். 

இந்த ஆலயத்தில் கற்பூரம் ஏற்றுவது கிடையாது. நெய் தீபம் மட்டுமே ஏற்றி தீபாராதனை செய்கின்றனர். 

பரிவார தெய்வங்கள்

இறைவனின் தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், பிரம்மா, சிவதுர்க்கை, மகாலட்சுமி ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். திருச்சுற்றில் தென் கிழக்கில் வன்னி மரமும், தென் திருச்சுற்றில் ஆலய திருக்குளமான பூச ஞான வாவி குளத்தின் நுழைவுவாயிலும் உள்ளன. மேற்கு திருச்சுற்றில் விநாயகர், நாகர், சுப்ரமணியர், வள்ளி, தேவசேனா ஆகியோர் சன்னிதிகளும் வடக்கு திருச்சுற்றில் சண்டீஸ்வரர் சன்னிதியும் உள்ளன. கிழக்கு திருச்சுற்றில் காலபைரவர், சூரியன் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். 

கி.பி. 13–ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாகும். சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தை முதலாம் மாறவர்மன் பராக்ரம பாண்டியன் வழிபட்ட தகவல் கல்வெட்டு மூலம் காணக் கிடைக்கிறது. 

ஆலயத்தின் தல விருட்சம் விளாமரம். ஆலயத்தின் வட திசையில் விருட்சம் உள்ளது. 

பூச நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது. இங்கு தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளிலும், நந்தி பகவானுக்கு பிரதோ‌ஷ காலங்களிலும், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்திலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. 

ஆலயத்தின் எதிரே அழகிய சிறிய ஆலயத்தில் விஜய விநாயகர் மேற்கு திசை நோக்கி அமர்ந்து தன் தந்தையை நோக்கியபடி அருள் பாலிப்பதை தனி சிறப்பாக கூறுகின்றனர் பக்தர்கள். 

சித்திரை திங்கள் வளர்பிறையில் வரும் திரிதியை நாள் அட்சய திரிதியை என அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் அட்சய திரிதியை அன்று சனி பகவான் பலவித ஸ்தூல சூட்டும் வடிவங்களில் சிவபெருமானை நாள் முழுவதும் வழிபடுவதாக ஐதீகம். 

அட்சய திரிதியை அன்று இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் விசே‌ஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்கு அருள் பாலிக்கும் இறைவி அபிவிருத்தி நாயகி தன் பக்தர்கள் அனைத்து நிலைகளிலும் அபிவிருத்தி அடைய அருள் புரியக் கூடியவர் என்பதில் சந்தேகமே இல்லை. 

அட்சய திரிதியை நாளில் இறைவனுக்கு சந்தனக் காப்பில் முத்துக்கள் பதித்து வழிபடுதலும், சனி பகவானுக்கு புணுகு கலந்த சந்தனக் காப்பிட்டு வழிபடுதலும் மிகுந்த பலனைத் தரும். 

சனி பகவான் உடன் இருந்து வழிபடும் நாளான அட்சய திரிதியை நாளில் நாமும் அட்சய புரீஸ்வரரையும் அபிவிருத்தி நாயகியையும் வணங்க செல்வம் பெருகும். வாழ்க்கையில் வளம் கொழிக்கும் என்பது நிச்சயம். 

அட்சய திரிதியை அன்று இந்த ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். 

சனி பகவானின் ஊனத்தை தீர்த்த இறைவன் அட்சய புரீஸ்வரர் தன்னை வணங்குவோரின் உடன் ஊனத்தையும், மன ஊனத்தையும் நீக்குவதுடன் ஏழ்மை என்னும் ஊனத்தை நீக்கி அவர்கள் வளம் பெற்று வாழ அருள் புரியக் கூடியவர் என்பது நிஜமே!

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள விளங்குளம் என்ற ஊரில் உள்ளது இந்த ஆலயம்.

Next Story