குற்றங்கள் குறுக்கீடாத இறை வாழ்க்கை


குற்றங்கள் குறுக்கீடாத இறை வாழ்க்கை
x
தினத்தந்தி 16 Jun 2017 10:17 AM GMT (Updated: 16 Jun 2017 10:16 AM GMT)

வெறும் அறிவுரை தருவதோடு மட்டுமே நின்றுவிடாமல் உயிர்போகும் அளவுக்கான இக்கட்டான சூழ்நிலையிலும் பகையாளிகள் மீது அன்பை நடத்திக் காட்டிச்சென்றவர் இயேசு.

வாழ்க்கையில் நடக்கும் நல்லது மற்றும் கெட்ட சம்பவங்களை ஒவ்வொருவரும் அவர்கள் கேட்டு, படித்து அறிந்த அளவில் எடைபோட்டுப் பார்ப்பது வழக்கம்.

இறை பக்தியுள்ளோர் ஒரு விதமாகவும், இயல்பு வாழ்க்கையில் இருப்போர் மற்றொரு விதமாகவும், நாத்திகவாதிகள் இன்னொரு கோணத்திலும் அந்தந்த சம்பவங்கள் பற்றி வியாக்கியானம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் பேய், பிசாசு, சாத்தான், தீயோன், சோதனைக்காரன் என்பவற்றுக்கும் ஆளாளுக்கு ஒரு கருத்தை உருவாக்கி வைத்துள்ளோம். இறைவனால் உருவாக்கப்பட்டவன் என்ற வகையில் நற்குணங்களும், அவரது எதிராளியான சாத்தானின் தூண்டுதலுக்கு கீழ்ப்படிந்தவன் என்ற வகையில் கெட்ட குணங்களும் கலந்திருப்பவனே மனிதன் என்பது கிறிஸ்தவம் கூறும் அறிவாகும்.

எந்த மனிதனிடமும் அந்தந்த சந்தர்ப்பத்தில், நல்ல மற்றும் கெட்டகுணங்களின் அடிப்படையிலான செயல்பாட்டை மாறி மாறி காணமுடியும். இப்படி பிறப்பின் மூலம் வரும் பிறவிக் குணங்கள்தான் பெரும்பாலும் ஒரு மனிதனின் இயல்புத்தன்மையை காட்டுகின்றன. அதிகமாக கெட்ட குணங்களை வெளிப்படுத்துபவனை ‘கெட்டவன்’ என்று உலகம் முத்திரை குத்தி விடுகிறது.

ஆனால் அனைத்து வகை இயல்பு குணங்களில் இருந்தும் விடுபட்டு, முழுமையாக இறைகுணங்களை ஒருவனால் அடைய முடியும் என்பதற்கு கிறிஸ்தவமே வழிகாட்டுகிறது. அதாவது எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் இறை குணங்களை வெளிப்படுத்துதலே கிறிஸ்தவம் ஆகும்.

அதாவது, பகைப்பவனை நேசிப்பது; அடித்தவனை அணைப்பது; காதலை, காமத்தை எதிர்பாலினத்தவர் வெளிப்படுத்தினாலும் அவர் களிடமும் இறைஅன்பை மட்டுமே வெளிப்படுத்துவது; பாகுபாடு இல்லாமல் தேவைப்பட்டோருக்கு உதவுவது, என எத்தனையோ இறைகுணங் களை வேதம் மூலம் இயேசு வெளிப்படுத்தியுள்ளார்.

பகைக்குப் பகை, கோபத்துக்கு கோபம், காமத்துக்கு காமம், சாதிமதஇன பாகுபாடு போன்றவையெல்லால், எந்த மதத்திலும் அல்லது நாத்திகராக இருந்தாலும், மனித வாழ்க்கையின் இயல்பு நிலையில் வெளிப்படுத்தப்படும் குணங்களாக காணப்படுகின்றன. ஆனால் இந்த இயல்பு குணங்களில் ஒன்றுகூட ஒரு மனிதனின் இறைவாழ்க்கையில் குற்றங்களாகக் குறுக்கிடாத அளவுக்கு வாழ வேண்டுமானால், அந்த வாழ்க்கை எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதை இயேசு சொன்னதோடு மட்டும் அல்ல செய்தும் காட்டியுள்ளார்.

ஆன்மிகத்துக்கு வெறும் வாய்ப்போதனை மட்டுமே போதுமானதாக அமைந்துவிடாது.

வெறும் அறிவுரை தருவதோடு மட்டுமே நின்றுவிடாமல் உயிர்போகும் அளவுக்கான இக்கட்டான சூழ்நிலையிலும் பகையாளிகள் மீது அன்பை நடத்திக் காட்டிச்சென்றவர் இயேசு. கிறிஸ்தவ மதத்தில் இருந்தாலும் கிறிஸ்து காட்டிய இந்தப்பாதையை பின்பற்றாதவர் கிறிஸ்தவர் அல்ல.

இயேசு இறைப்பணிக்கு வருவதற்கு முன்பு சாத்தானால் சோதிக்கப்பட்டார் (மத்.4:111). ஒரு பொறுப்பு தரப்படுவதற்கு முன்பு சோதனை அவசியமாக உள்ளது. அதனால்தான் அந்த சோதனைக்காக இறைவனால் இயேசு அழைத்துச் செல்லப்பட்டார். 3 விதமான சோதனைகளை இயேசுவுக்கு சாத்தான் கொண்டு வந்தான். முதலில், சரீர ரீதியான பசி ஏற்படும்போது வேத வசனங்களை சுயலாபத்துக்காக மாற்றிக் கொள்வதைப் பற்றிய சோதனை; இரண்டாவது, எந்த கட்டத்திலும் வசனங்களை பின்பற்ற முடியுமா? அல்லது, இறைவன் பார்த்துக் கொள்வார் என்று கூறிவிட்டு மற்றவர் ஏற்படுத்தும் சூழ் நிலைக்கு ஏற்றபடி செயல்படுதலுக்கான சோதனை:

மூன்றாவதாக, உயர்ந்த அந்தஸ்து, சகலவித வசதிகள், பணபலம் போன்ற உலக ஆதாயங்கள் கிடைப்பதாக இருந்தால், வசனங்களை விட்டு விலகி, பொய், லஞ்சம், தவறாக போதித்தல், இறைவன் கூறாததை கூறி சுயமேன்மை அடைவது போன்றவற்றை சாஷ்டாங்கமாக பணிந்து கொள்வதற்கான சோதனை.

இந்த சோதனைகளின் முடிவில் வெளிப்படும் மிகப் பெரிய உண்மை என்னவென்றால், மூன்றையும் ஜெயித்தவனை விட்டு சாத்தான் விலகிப் போய்விடுவான் (11 ம் வசனம்) என்பதாகும். அந்த வசனத்தை அர்த்தம் மாறாமல் மாற்றி வாசித்தோம் என்றால், அந்த சோதனைகளில் ஏதாவது ஒன்றில் தோற்றுவிட்டோம் என்றால் இறைப்பணியாளனை விட்டு சாத்தான் விலகவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியும்.

இப்படித்தான் பலரது இறைப்பணியை விட்டு சாத்தான் விலகாமல் தனது தந்திரங்களால் அவர்களின் பாதையை மாற்றிவிட்டுக் கொண்டிருக்கிறான். இதனால் அவர்களும் அவர் களின் இறைப்பணியும் கேலி, கிண்டல், அவமானத்துக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றனர்.

மற்றவனுக்கு போதனை செய்வதைவிட, இதுபோன்ற சோதனைகளில் எந்த இடத்தில் தோல்வி அடைகிறோம் என்பதை ஆராய்ந்து பார்த்துவிட்டு, அதை சரிப்படுத்திக் கொண்டு அதன் பிறகு இறைப்பணியை மேற்கொள்வதே சிறந்தது. இறைப்பணியில் சுயமேன்மை, சுயலாபம் அடைதல் என்பது இறைவனால் ஏற்கமுடியாத தன்மை. எனவே அந்த எண்ணமுள்ளவன் மேற்கொள்ளும் இறைப்பணியில் சாத்தானின் இடற்பாடு வந்துகொண்டே இருக்கும்.

அனைத்து சோதனைகளையும் ஜெயித்ததால் இயேசுவை விட்டு சாத்தான் விலகிப்போனதோடு, தூதர்கள் வந்து அவருக்கு சேவை செய்யத் தொடங்கினர். எனவே சிலுவை மரணம் வரை எந்த இடத்திலும் இயேசுவின் இறைப்பணி தோல்வி அடையவில்லை என்பதோடு கேலிப்பொருளும் ஆகவில்லை. சிந்தித்து செயல்படுவோம். 

Next Story