உத்தியோக தடை நீக்கும் அணைப்பட்டி ஆஞ்சநேயர்


உத்தியோக தடை நீக்கும் அணைப்பட்டி ஆஞ்சநேயர்
x
தினத்தந்தி 16 Jun 2017 10:28 AM GMT (Updated: 16 Jun 2017 10:28 AM GMT)

தன்னை நினைத்து மனமுருகி பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொடுப்பவராக ஆஞ்சநேயர் இருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அரவணைப்பில் உள்ளது அணைப்பட்டி கிராமம். இங்கு சித்தர்கள் மலை அடிவாரத்தை தழுவியபடி வைகை ஆறு செல்கிறது. அந்த ஆற்றின் கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஆஞ்சநேயர். மனக்கஷ்டத்தில் வரும் பக்தர்களை, தன் அருளால் ஆட்கொள்ளும் இந்த ஆஞ்சநேயரை, ஊரின் பெயரையும் சேர்த்து ‘அணைப்பட்டி ஆஞ்சநேயர்’ என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.

தல வரலாறு

அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உருவான கதை வியப்பானது. 

கி.பி.16–ம் நூற்றாண்டில் ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில், அம்மையநாயக்கனூர் பகுதியில் காமயசாமி என்பவர் ஜமீன்தாராக இருந்தார். இவர் ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் வைகை ஆற்றின் கரையோரம் கூடாரம் அமைத்து ஓய்வு எடுப்பது வழக்கம். அதன்படி ஒரு பவுர்ணமி தினத்தில் வைகை ஆற்றின் கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, ‘வைகை ஆற்றில் தாழம்செடிக்கு நடுவே, நான் சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறேன். அந்த இடத்தில் எனக்கு கோவில் அமைத்து வழிபடு’ என்று கூறி மறைந்தார். திடுக்கிட்டு கண்விழித்த ஜமீன்தார், கனவில் ஆஞ்சநேயர் கூறிய இடத்தைத் தேடலானார். அப்போது கனவில் கண்டபடி, தாழம்செடி புதர் போன்று இருப்பதை கண்டார். அந்த தாழம்செடியை அகற்றிவிட்டு பார்த்தபோது, அங்கே ஒரு பாறை தென்பட்டது. 

அந்த பாறையை தோண்டிப் பார்க்க முயன்றார். என்ன அதிசயம்! எவ்வளவு ஆழம் தோண்டியும் பாறையின் அடிப்பகுதியை காண முடியவில்லை. அந்த பாறையை வெளியே எடுக்கவும் முடியவில்லை. எனவே, அந்த இடமே ஆஞ்சநேயர் கூறிய இடம் என அறிந்து கொண்டார். அதன்படி அந்த இடத்திலேயே ஆஞ்சநேயருக்கு கோவில் எழுப்பியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

செவி வழிக் கதை

இந்த ஆணைப்பட்டி ஆஞ்ச நேயருக்கு புராணகால செவிவழி கதை ஒன்றும் சொல்லப்படு கிறது. 

அதாவது மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். அப்போது அவர்கள் அணைப்பட்டியில் உள்ள சித்தர்கள் மலையில் சிறிது காலம் தங்கி இருந்தனர். ஒருநாள் பாஞ்சாலி சிவபூஜை செய்வதற்கு தயாரானாள். அந்த பூஜைக்கு தண்ணீர் தேவைப்பட்டது. உடனே சித்தர்கள் மலையின் அடிவாரத்தில் வேகவதி ஆற்றில் (தற்போதைய வைகை ஆறு) தண்ணீர் எடுத்து வரும்படி கூறினாள். பீமன் தண்ணீர் கொண்டு வருவதற்காக மலையில் இருந்து ஆற்றுக்கு வந்தான். 

அப்போது பீமனை தண்ணீர் எடுக்க விடாமல் ஒரு பெரிய வானரம் தடுத்ததாம். இது, பெரிய பலசாலியான பீமனுக்கு ஆத்திரத்தை மூட்டியது. இதையடுத்து வானரத்துக்கும், பீமனுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. இறுதியில் பீமன் தோல்வி அடைந்து சித்தர்கள் மலைக்குத் திரும்பினான். அங்கு தனது மூத்த சகோதரன் தர்மனிடம் நடந்தவற்றை கூறினான். அப்போது தர்மன் தனது ஞானத்தால் அறிந்து கொண்டார். அதன்படி ஆற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்த வானரம் வேறுயாருமல்ல.. ஆஞ்ச நேயர் தான் என்று கூறினார். 

பீமனும், ஆஞ்சநேயரும் வாயுபுத்திரர்கள் ஆவர். எனவே தர்மன், தம் தம்பியான பீமனிடம், ‘ஆஞ்ச நேயர் உனது அண்ணன் தான். அவரிடம் மன்னிப்பு கேட்டு தண்ணீர் எடுத்து வா’ என்று கூறி பீமனை அனுப்பினார். மீண்டும் ஆற்றுக்கு சென்ற பீமன், ஆஞ்சநேயரை நினைத்து மனமுருகி மன்னிப்பு கேட்டான். உடனே அங்கு தோன்றிய ஆஞ்சநேயர், வேடிக்கை காண்பிக்கவே அவ்வாறு நடந்து கொண்டதாக கூறி, ஆற்றில் தானே தண்ணீர் எடுத்து வந்து பீமனிடம் கொடுத்தார்.

பின்னர் அந்த இடத்தில் தன்னை வழிபட்டு வருமாறு கூறி மறைந்தார். அதன்படி ஆஞ்சநேயரை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து பீமன் வழிபட்டதாக அந்தச் செவி வழிக் கதை சொல்கிறது. 

இந்தக் கோவிலில் ஆஞ்சநேயரை, பீமன் வழிபட்டதால் வீரஆஞ்சநேயராக காட்சி அளிக்கிறார். வாலை மேலே உயர்த்தியபடி, வலது கையில் சஞ்சீவி பர்வத மலையை தாங்கிக் கொண்டு, இடது கையை தொடையில் ஊன்றியவாறு நின்ற கோலத்தில் எழுந்தருளி உள்ளார். ஆஞ்சநேயரின் இடது கண் அயோத்தியை நோக்கி அமைந்து இருப்பது மற்றொரு சிறப்பு அம்சமாகும். 

அதேபோல் வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காலத்தில், 
ஆஞ்சநேயரின் பாதம் அமைந்துள்ள இடத்தில் தண்ணீர் ஊற்றெடுக்கும் அதிசயத்தைக் காணலாம். மேலும் பீமனுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கொடுத்து ஆசி வழங்கியதால், ஸ்ரீஜலகண்ட ஆஞ்ச நேயர் எனும் மற்றொரு பெயரையும் பெற்றுள்ளார். 

அணைப்பட்டி ஆஞ்ச நேயரின் வலது பக்கத்தில் கன்னிமூலையில் விநாயகர் சன்னிதியும், அதற்கு முன்பு நாக தேவதை, நவக்கிரக சன்னிதிகளும் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தின் தலவிருட்சம் ஆலமரம் ஆகும். 400 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கூறப்பட்ட அந்த ஆலமரம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேருடன் சாய்ந்து விட்டது. அதில் இருந்து ஒரு கிளையை எடுத்து அதே இடத்தில் நட்டு வைத்துள்ளனர். தற்போது அது அற்புதமாக வளர்ந்து வருகிறது. 

வைகை ஆற்றில் தாழம்செடியின் அடியில் சுயம்புவாக தோன்றியதால், வைகை ஆற்றின் நீரே தீர்த்தமாக கருதப்படுகிறது. கோவில் வளாகத்தில் மூலவர் சன்னிதி அருகே ஒரு அபிஷேக கிணறும் உள்ளது. அதன் தண்ணீரையே ஆஞ்சநேயரின் அபிஷேகத்துக்கு பயன்படுத்துகிறார்கள். 

தன்னை நினைத்து மனமுருகி பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொடுப்பவராக ஆஞ்சநேயர் இருக்கிறார். இங்கு வரும் பக்தர்கள் உத்தியோக தடையை போக்கவும், பணியிட மாறுதல் கேட்டும் வேண்டுதல் செய்கின்றனர். இதுதவிர திருமண தடை, செவ்வாய் தோ‌ஷம் ஆகியவை விலகவும் அணைப்பட்டி ஆஞ்சநேயரை வேண்டி செல்பவர்களும் ஏராளம். இதற்காக ஆஞ்சநேயருக்கு வடைமாலை, துளசி மாலை, எலுமிச்சை மாலை, பலவகை பழங்களால் ஆன மாலையை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபாடு செய்கின்றனர்.

சனி தோ‌ஷம் நீங்குவதற்கு சனிக்கிழமை விரதம் இருந்து அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் வருகின்றனர். பின்னர் ஆஞ்சநேயருக்கு கறுப்பு ஆடை அணிவித்து, பிரார்த்தனை செய்வதால் சனி தோ‌ஷம் நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

தை, புரட்டாசி மாத அமாவாசை தினங்களில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யவும் இங்கு பலர் வருகின்றனர். எனவே, நாமும் அணைப்பட்டியில் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை வழிபட்டு அருள் பெறுவோம். 

திருவிழாக்கள்

இந்தக் கோவிலில் மார்கழி அமாவாசை, அனுமன் ஜெயந்தி, ராமநவமி ஆகிய தினங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாக்களில் அணைப்பட்டி ஆஞ்சநேயரின் அருளை பெறுவதற்காக திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

திண்டுக்கல்லில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும், நிலக்கோட்டையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 60 கி.மீ. தூரத்திலும் அணைப்பட்டி உள்ளது. திண்டுக்கல், நிலக்கோட்டையில் இருந்து கோவிலுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Next Story