தசாவதாரக் கோவில்


தசாவதாரக் கோவில்
x
தினத்தந்தி 20 Jun 2017 12:45 AM GMT (Updated: 19 Jun 2017 10:57 AM GMT)

தமிழகத்தில் தசாவதாரக் கோவில்கள் குறைவு. ஸ்ரீரங்கம் மற்றும் திருநெல்வேலி அருகிலுள்ள அகரம் போன்ற இடங்களில் மட்டுமே இத்தகைய கோவில்கள் உள்ளன.

மிழகத்தில் தசாவதாரக் கோவில்கள் குறைவு. ஸ்ரீரங்கம் மற்றும் திருநெல்வேலி அருகிலுள்ள அகரம் போன்ற இடங்களில் மட்டுமே இத்தகைய கோவில்கள் உள்ளன.

ஒரு காலத்தில், ராமாயணமும், மகாபாரதமும் மட்டுமே நாடகங்களாக நடிக்கப்பட்டன. ராமர், கிருஷ்ணர் பற்றி தெரிந்த அளவு, திருமாலின் மற்ற அவதாரங்களின் சிறப்பு குறித்து மக்கள் அறிந்திருக்கவில்லை. இது, அகரம் கிராமத்தில் வசித்த, மித்ரசகா என்ற இளைஞரின் மனதில், தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், அவர் தசாவதார நாடகக்குழு ஒன்றைத் தொடங்கி, அனைத்து அவதார வரலாற்றையும் நாடகங்களாக வெளிப்படுத்தினார். இந்த தகவல், தமிழகமெங்கும் பரவவே, பல ஊர்களிலும் அவரை அழைத்து, நாடகம் நடத்தினர்.

காஷ்மீர் மன்னன் குங்குமாங்கதன் சிறந்த விஷ்ணு பக்தன். அவனுக்கு இந்த தகவல் கிடைக்கவே, தன் தேசத்திற்கு மித்ரசகாவை வரவழைத்தான். இங்கிருந்து குதிரை வண்டிகளில் பல மாதங்களாக பயணம் செய்து, காஷ்மீரை அடைந்தார் மித்ரசகா.

அவரது நடிப்பு மக்களை மட்டுமல்ல, குங்குமாங்கதனின் மகள் சந்திர மாலினியையும் கவர்ந்தது. அதனால், அவள் மித்ரசகா மேல் காதல் வயப்பட்டாள். மன்னன் முதலில் மறுத்தாலும், மகளின் பிடிவாதத்தால் த்ரசகாவுக்கே பெண்ணைக் கட்டிக் கொடுத்தான். மணமக்கள் அகரம் கிராமத்துக்கே திரும்பினர். மாலினி, பாடும் திறன் கொண்டவள் என்பதால், கணவரின் நாடகங்களில் அவளே பாடி வந்தாள்.

முதுமையடைந்த மித்ரசகா ஒரு நாள் இறந்து போனார். சோகம் தாளாத மாலினி, தங்கள் கிராமத்தில் ஓடும் தாமிர பரணி வெள்ளத்தில் குதித்தாள். அப்போது, ஒரு அந்தணர் அவளைத் தூக்கி, ‘அஞ்சேல்’ என்று கூறி, ‘ஓம் வாசுதேவாய நம’ என்ற மந்திரத்தை அவளுக்கு உபதேசித்து, இம்மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே மீதி காலத்தை கழிக்க வேண்டினார். அவளும் அவ்வாறு சொல்லி வரவே, அவளின் பக்தியால் மகிழ்ந்த திருமால், அவளுக்கு தசாவதார காட்சி அளித்தார்.

திருமால் காட்சி தந்த இடத்தில் உருவான கோவிலே, அகரம் தசாவதாரக் கோவில். பெருமாளை இங்கு ‘தசாவதார பெருமாள்’ என்கின்றனர். பத்து அவதார மூர்த்தி
களையும், இங்கு தரிசிக்கலாம்.

மாசி வளர்பிறை துவாதசியன்று, ‘தசாவதார ஜெயந்தி’ நடைபெறும். இதுதவிர, தனித்தனியாகவும் ஜெயந்தி நடத்தப்படும். கூர்ம ஜெயந்தி, ஆனி மாத தேய்பிறை துவாதசியன்று நடக்கிறது. சனி திசை, ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச்சனி நடந்தால், கூர்ம ஜெயந்தியன்று, தாமிரபரணியில் உள்ள தசாவதார தீர்த்தத்தில் நீராடி, அகரம் பெருமாளை வணங்கி வரலாம்.

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது வல்லநாடு. இங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்றால், அகரம் என்ற கிராமத்தை அடையலாம்.

Next Story