புராணங்களை தாங்கி நிற்கும் மலூதி ஆலயங்கள்


புராணங்களை தாங்கி நிற்கும் மலூதி ஆலயங்கள்
x
தினத்தந்தி 20 Jun 2017 1:15 AM GMT (Updated: 19 Jun 2017 11:58 AM GMT)

ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளைச் சிற்பமாகப் பார்க்க நினைப்பவர்கள், ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் மலூதி கோவிலுக்கு செல்லலாம்.

ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளைச் சிற்பமாகப் பார்க்க நினைப்பவர்கள், ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் மலூதி கோவிலுக்கு செல்லலாம். ஏனெனில் அங்கு அமைந்திருக்கும் 72 கோவில்களிலும் புராண கதைகளே சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன.

ஜார்கண்ட் மாநிலத்தையும், இந்தியாவின் அன்டை நாடான வங்கதேசத்தையும் பிரிக்கும் எல்லைக்கோட்டில் அமைந்திருக்கும் இந்தக் கோவில், ‘டெரகோட்டா’ எனப்படும் சுடுமணல் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. குடிசை கோபுரங்களை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோவில்கள், பாதி அழிந்த நிலையிலேயே இப்போது காட்சியளிக்கின்றன.

போரில் உயிரை பணயம் வைத்து சண்டையிட்ட வீரர்களுக்கு, மலூதி கிராமத்தை அந்தப் பகுதியை ஆண்ட அரசர் வெகுமதியாக அளித்ததாக கோவில் வரலாறு சொல்கிறது. அப்படி பரிசாக கிடைத்த கிராமத்தில் தான் 108 கோவில்களை கட்டியிருக்கிறார்கள். மலூதி கிராமத்தைப் பரிசாகக் கொடுத்த மன்னர், அங்கு போர் வீரர்களுக்கான அரண்மனையை கட்டச் சொன்னாராம். ஆனால் வீரர்கள், அரண்மனைக்கு பதிலாக கோவில்களை கட்ட முடிவெடுத்திருக்கிறார்கள். அதிலும், புராண கதைகளை வருங்கால சந்ததியினருக்கு தெரிவிக்கும் வகையில், ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்றவற்றில் கூறப்படும் கதைகளை சிற்பங்களாகவும், ஓவியமாகவும் வரைய ஆசைப்பட்டிருக்கிறார்கள்.

அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டவர்கள், ஒருவழியாக புராண கதைகளையும் காட்சிகளாக மாற்றியிருக்கிறார்கள். மீதமிருந்த கோவில்களில் போர் கடவுளாக பார்க்கப்படும் காளியையும், துர்க்கா தேவியையும் வைத்து வழிபட தொடங்கி இருக்கிறார்கள். மேலும் கிராமமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிவன் கோவிலும், விஷ்ணு கோவிலும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நகரம் என்று அழைக்கப்பட்ட மலூதி கிராமத்தில், கோவில்களுக்கு நடுவே தான் கிராம மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

17–ம் நூற்றாண்டில் மலூதி கிராமத்தில் மொத்தம் 108 கோவில்கள் இருந்துள்ளன. ஆனால் இன்று 72 கோவில்களே பழமையை பறைசாற்றியபடி எஞ்சி நிற்கின்றன. அதிலும் சில புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தால் சேதமடைந்துவிட்டன. மலூதி கிராமத்தை சுற்றி 3 நதிகள் பாய்கின்றன. அதில் வெள்ளம் பெருக்கெடுக்கையில், மலூதி கிராமத்தின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிவிடுகின்றன. இப்படித்தான் 108 கோவில்களில் 36 கோவில்கள் சேதமடைந்திருப்பதாக அந்தப் பகுதியினர் கூறுகிறார்கள். மணலை டெரகோட்டா கல்லாக மாற்றி கோவிலை கட்டியதும், 36 கோவில்களின் அழிவிற்கு காரணமாகிவிட்டது.

மலைகளை குடைந்தும், பாறைகளை அடுக்கியும் வடிவமைக்கப்படும் கோவில்களுக்கு மத்தியில், இந்த மலூதி கோவில்கள் வித்தியாசப்படுகின்றன. ஏனெனில் 17–ம் நூற்றாண்டில் டெரகோட்டா கற்களை பயன்படுத்தி கோவில்களை வடிவமைப்பது என்பது ஆச்சரியமான ஒன்று. ஊரைக் காக்கும் தெய்வங்களை, வலிமையான பாறை கோவில்களில் வைத்துதான் பூஜிப்பார்கள். ஆனால் மலூதி கிராம மக்கள் தைரியமாக டெரகோட்டா கற்களில் கோவில்களை அமைத்திருக்கிறார்கள். எளிதில் உடைந்துவிடும் அமைப்பு என்றாலும், அதிலும் கலைநயத்தை புகுத்தியிருக் கிறார்கள்.

கற்களை அழகாக அடுக்கியும், கோவிலின் உட்சுவற்றில் புராண கதைகளை அழகாக செதுக்கியும் இருக்கிறார்கள். மென்மையான பகுதிகளில் சிற்பங் களுக்கு பதிலாக புராண ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. ஏனெனில் சிற்ப வடிப்பின் போது கோவில் சேதமடைந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்திருக்கிறார்கள். பழமையான கோவில், புராண கதைகளை காட்சிப்படுத்தும் கதை நூலகம்... என புகழப்படும் மலூதி கோவிலில் இன்றும் கூட்டம் களை கட்டுகிறது. துர்க்கா பூஜை, காளி பூஜை என விசே‌ஷ வழிபாடுகள் இன்றும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக காளி பூஜை அன்று 100 ஆடுகளை பலிகொடுத்து நேர்த்தி கடன் செலுத்துகிறார்கள். இதனால் மனம் குளிரும் காளிதேவி, பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

Next Story