அமானுஷ்ய ஆன்மிகம் : மயான தாராவின் தரிசனம்
மிக உயரமாய், கருநீல நிறமாய், மிக அழகான கண்களுடன் தோன்றிய மயான தாராவின் நீட்டிய நாக்கில் இருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.
அமாவாசை இரவில், மயானத்தில், அமானுஷ்ய சடங்கை ஆரம்பிக்கும் முன் விமலானந்தாவிடம் ஜீனசந்திர சூரி ஒரு ஜபமாலையைத் தந்து, திரும்பத் திரும்ப சொல்ல வேண்டிய மந்திரத்தையும் சொல்லித் தந்தார். பின் ’மயான தேவதையான தாரா வரும் போது படைக்க இது’ என்று சொல்லி ஒரு பாட்டில் சாராயம், சிறிது மாமிசம் இரண்டையும் தந்தார். பின் சொன்னார். “மயான தாரா என்ன வேண்டும் என்று கேட்கும் போது, என்னைக் காட்டி, ‘என் குரு என்ன கேட்கிறாரோ அதைத் தந்து அருள்பாலிக்க வேண்டும்’ என்று கேட்க வேண்டும்”.
சொல்லி விட்டு சுமார் நூறு அடிகள் தள்ளி ஜீனசந்திர சூரி அமர்ந்து கொண்டார். ‘இத்தனை கூத்தும் இந்த ஆளின் சுயலாபத்திற்குத் தானா?’ என்று மனம் நொந்தாலும் விமலானந்தாவால் மறுக்கவோ, அங்கிருந்து தப்பித்துச் செல்லவோ முடியவில்லை.
சவத்தின் வாயில் எண்ணெய் விட்டு ஒரு திரியையும் வைத்து தீபம் பற்ற வைப்பதிலிருந்து சடங்கு ஆரம்பமானது. ஜபமாலையை உருட்டியபடி ஜீனசந்திர சூரி சொல்லித் தந்த மந்திரத்தை விமலானந்தா உச்சரிக்க ஆரம்பித்தார். சடங்கின் போது ஏதாவது ஆவி அந்த சவத்தின் உடலில் புகுந்து, சவத்தின் மேல் அமர்ந்திருப்பவரைத் தள்ளி விட்டு எழுந்து விடுவதும் உண்டு அதனால் என்னேரமும் முழுப் பலமும், கவனமும் இருக்க வேண்டும் என்று வேறு ஜீனசந்திர சூரி எச்சரித்திருந்தார். அதனால் விமலானந்தாவுக்கு சவத்தின் மீதும், சொல்லும் மந்திரத்தின் மீதும் முழுக்கவனமும் இருந்து கொண்டே இருந்தது. மயானத்திற்கு வரும் போது பழங்குடிகள் கொண்டு வந்திருந்த தீவட்டிகள் அணைக்கப்பட்டிருந்தன. பிணத்தின் மீது எரிந்து கொண்டு இருந்த தீபத்தைத் தவிர சுற்றிலும் வேறு ஒளியேதும் இல்லை. அதுவே ஒருவித அமானுஷ்ய, திகிலூட்டும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருந்தது. அதையெல்லாம் மீறி அந்தச் சடங்கிலும் சொல்லும் மந்திரத்திலும் கவனம் செலுத்த ஏதோ ஒரு சக்தி விமலானந்தாவுக்கு உதவியது.
விமலானந்தா மந்திரம் ஜெபித்துக் கொண்டிருந்ததில் காலம் மறந்தார். எத்தனை நேரம் போனதென்றே தெரியவில்லை. திடீரென்று தூரத்தில் இருந்து இரண்டு மின்னும் கண்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்ததை அவர் மெல்ல உணர ஆரம்பித்தார். அவருக்கு மயிர்க்கூச்செறிந்தது. சிறிது சிறிதாக இருட்டிலிருந்து குள்ள நரி ஒன்று வெளிப்பட்டது. அதனுடைய கண்கள் தான் இருட்டில் இருந்து மின்னிக் கொண்டிருந்தன. மயான தாரா பெரும்பாலும் மிருக ரூபத்தில் தான் அணுகும் என்று ஜீனசந்திர சூரி சொல்லி இருந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது.
அந்தக் கணத்தில் தனக்கு முன்பே ஜீனசந்திர சூரி விடுத்திருந்த எச்சரிக்கையை விமலானந்தா மறந்தார். ஏதோ ஒரு ஆவேசம் அவரை ஆட்டுவித்தது. சவத்தின் மீதிருந்து எழுந்து, ஜீனசந்திர சூரி சுற்றிலும் கருப்புக் கயிறால் போட்டிருந்த ரட்சனை வளையத்தைத் தாண்டி வந்து அந்த குள்ள நரியைத் தாவிப் பிடித்தார். “உனக்கு என் ரத்தம் தானே வேண்டும். எடுத்துக் கொள்” என்று கூறியபடி அதன் வாயில் தன் கை விரல்களை விட்டார். ஜீனசந்திர சூரி தந்திருந்த மாமிசத்தையோ, சாராயத்தையோ தர அவருக்கு நினை விருக்கவில்லை.
குள்ள நரியின் கூரிய பற்கள் அந்த இருட்டில் பளிச்சென்று தெரிந்தன. குள்ள நரி அவரது பெருவிரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இடைப்பற்ற பகுதியைக் கடித்து ரத்தம் வெளிவர ஆரம்பித்தது. குள்ளநரி அந்த ரத்தத்தை நக்கியது. அடுத்த கணம் குள்ள நரி மறைந்து மயான தாரா பிரத்தியட்சமானாள்.
மிக உயரமாய், கருநீல நிறமாய், மிக அழகான கண்களுடன் தோன்றிய மயான தாராவின் நீட்டிய நாக்கில் இருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. கழுத்தில் மண்டை ஓடுகளின் மாலை தொங்கிக் கொண்டிருந்தது. நான்கு கைகளில் ஒன்றில் கத்திரி, ஒன்றில் வாள், ஒன்றில் தூக்குக் கயிறு, ஒன்றில் மண்டையோடு வைத்தபடித் தோன்றிய மயான தாராவைப் பார்த்தவுடன் பெரும்பாலான மனிதர்கள் பயத்தில் உறைந்து போய், மாரடைப்பு வந்தோ, மூச்சு நின்றோ மரணிக்கும் தருணம் அது. அப்படிப் பலர் இறந்து போனதை விமலானந்தா பிற்காலத்தில் நிறையவே கண்டிருக்கிறார். ஆனால் அப்படியெல்லாம் ஆகாமல், அச்சம் சிறிதுமில்லாமல் இருந்ததற்குக் காரணம் பூர்வ ஜென்மங்களில் இருந்த தொடர்பாகவே இருக்க வேண்டும் என்று பின்னர் உணர்ந்தார்.
விமலானந்தா மயான தாராவைக் கண்டவுடன் பேரானந்தம் கொண்டார். பல பிறவிகளில் கண்ட உருவமாய், தேடிய உருவமாய் அவருக்குத் தோன்றியது. அன்னையைத் தொலைத்துத் திரும்பக் கண்ட குழந்தையைப் போல் கண்ணீர் மல்கியது, மனம் உருகியது.
மயான தாரா ‘உனக்கு என்ன வேண்டும், கேள்’ என்றாள்.
அந்தக் கணத்தில் ஜீனசந்திர சூரி சொன்னது போல் விமலானந்தாவுக்குக் கேட்கத் தோன்றவில்லை. ‘அம்மா! எனக்கு இப்போது மும்பையில் இருக்கும் என் வீட்டுக்குப் போக வேண்டும். எனக்கு வேறெதுவும் வேண்டாம். அந்த ஆள் கட்டாயப்படுத்தியதன் காரணமாகவே நான் இந்த சவ சாதனாவைச் செய்தேன்’.
மயான தாரா புன்னகைத்தபடி சொன்னாள். ‘வீட்டுக்குப் போகலாம். இப்போதைக்கு அழைத்ததற்கு என்னிடம் ஏதாவது கேள்’.
‘எனக்கு வீட்டுக்குப் போகவேண்டும். நான் வீட்டுக்குப் போன பிறகு வேண்டுமானால் வேறெதாவது கேட்கிறேன்’ என்றார் விமலானந்தா.
சிரித்தபடியே மயான தாரா சொன்னாள். ‘சரி. கண்களை மூடிக் கொள்.’
விமலானந்தாவும் கண்களை மூடிக் கொண்டார். கண் களைத் திறந்த போது அவர் தனது வீட்டின் படுக்கையில் இருந்தார். தலை பலமாக வலித்தது. எல்லாம் கனவு போலத் தோன்றியது. எல்லாம் கனவோ என்கிற எண்ணம் அவருக்கு எழுந்தது. கையைப் பார்த்தார். கையில் கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே ரத்தக் காயம் இருந்தது. ஆனாலும் நடந்ததை நம்பக் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் மிகவும் களைப்பாக இருந்ததால் விமலானந்தா உறங்கிப் போனார்.
விழிப்பு வந்த போதும் தலைவலி தாங்க முடியாமல் இருக்கவே அவர் வேலைக்காரனை அழைத்து ஆஸ்பிரின் மருந்து வாங்கி வரச் சொல்லிச் சாப்பிட்டு விட்டு வலி குறைந்தவுடன் நடந்ததை எல்லாம் மீண்டும் யோசித்தார். அவரிடம் ஜீனசந்திர சூரி தந்திருந்த ஜபமாலையும், யந்திரமும் இன்னமும் இருந்தன. அப்படியானால் நடந்தது கனவல்ல என்பது ஊர்ஜிதமாகியது. உடனே அந்த ஜபமாலையை எடுத்து, ஜீனசந்திர சூரி தந்திருந்த யந்திரத்தை வைத்து, அவர் சொல்லித் தந்திருந்த மந்திரத்தை விமலானந்தா உச்சரிக்க ஆரம்பித்தார். நூறு முறை சொல்வதற்கு முன் மீண்டும் மயான தாரா அவர் முன் தோன்றினாள். ‘மகனே இப்போது கேள். உனக்கு என்ன வேண்டும்?’
அப்போதும் விமலானந்தாவுக்கு எதையும் கேட்கத் தோன்றவில்லை. மயான தாரா வற்புறுத்தவே ‘அன்னையே! நான் விரும்பும் போதெல்லாம் நீ என் முன் தோன்ற வேண்டும். நான் உன்னை வணங்க வேண்டும்’ என்ற வரத்தை விமலானந்தா கேட்டார்.
‘அப்படியே ஆகட்டும் மகனே. ஆனால் இங்கு நான் தினமும் வர முடியாது. என் தரிசனத்தைப் பெற, நீ மயானத்திற்குத் தான் வர வேண்டும்’ என்றாள் மயான தாரா.
விமலானந்தாவும் அதற்குச் சம்மதித்தார். அக்காலத்தைய மும்பையில் இப்போதைய கூட்ட நெரிசல் இருக்கவில்லை. மயானங்களோ நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களாக இருந்தன. எனவே மும்பையில் வோர்லி மயானத்தை, அன்னை மயான தாராவைச் சந்திக்கும் இடமாக விமலானந்தா தேர்ந்தெடுத்தார்.
தினமும் இரவு அந்த மயானத்திற்கு விமலானந்தா சென்று அன்னையைச் சந்திப்பார். அன்னைக்குத் தர தினமும் ஒரு இளநீரைக் கொண்டு வர ஒரு ஆளை அவர் ஏற்பாடு செய்திருந்தார். அதை அன்னைக்குப் படைத்து, அன்னை குடித்து மீதம் வைத்ததைப் பிரசாதமாகத் தானும் குடிப்பார். மயான தாராவுடன் உரையாடும் போது பல்வேறு சடங்குகள், அதன் முறைகள், அதன் அர்த்தங்கள், மயான தாராவின் பல்வேறு தோற்றங்கள், பல அகோர ரகசியங்கள் விமலானந்தா அறிந்து கொண்டார். சில சமயங்கள் இந்தச் சந்திப்புகள் அதிகாலை வரை நீள்வதும் உண்டு. வோர்லி மயானத்தின் அருகில் வசித்து வந்த மிஷ்கின் ஷா என்ற முகமதிய பக்கிரி விமலானந்தாவுக்கு அந்த நாட்களில் நட்பானார். அந்தப் பக்கிரி நடப்பது அனைத்தையும் அறிந்திருந்தார். அந்தப் பக்கிரியுடன் சிறிது பேசிக் கொண்டிருந்தபடி தேநீர் அருந்தி விட்டு வீடு திரும்புவது வழக்கமானது.
அன்னையின் அருளுக்குப் பாத்திரமான பிறகு வாழ்க்கையில் மேலும் இரண்டு முறை சவ சாதனாவை விமலானந்தா செய்திருக்கிறார். ஒரு முறை ஆணின் சவத்தின் மீதமர்ந்து. இன்னொரு முறை கர்ப்பிணிப் பெண்ணின் சவத்தின் மீதமர்ந்து. இரண்டையும் அன்னையிடம் இருந்து அறிந்த வேறு இரு முறைகளில் தான் செய்தார். ஆனால் எதையும் சுயலாபத்திற்காக அவர் செய்யவில்லை.
சரி ஜீனசந்திர சூரி என்ன ஆனார்?, என்ன செய்தார்? என்பதையும், விமலானந்தாவின் மற்ற அனுபவங்களையும் அடுத்த வாரம் பார்ப்போம்.
Related Tags :
Next Story