உங்கள் தேவைகளை ஆண்டவர் சந்திப்பார்
நம்முடைய அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவரால் கூடாதது ஒன்றுமில்லை.
பொருளாதார நெருக்கடி, நாளுக்குநாள் அதிகரித்து வரும் விலைவாசி, அன்றாட தேவைகளை சந்திக்க முடியாத சூழ்நிலை மற்றும் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலைமை இப்படி பலதரப்பட்ட தேவைகள், நெருக்கடியோடு அநேக மக்கள் கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள்.
நம்முடைய அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவரால் கூடாதது ஒன்றுமில்லை. உங்கள் தேவைகளை அவரால் சந்திக்க முடியும். ஆகவே விசுவாசத்தோடு கர்த்தருடைய வார்த்தையை ஜெபத்தோடு வாசியுங்கள்.
நூறு மடங்கு ஆசீர்வதிக்கும் தேவன்
‘‘ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான், கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறு மடங்கு பலன் அடைந்தான்’’ (ஆதி 26:12).
பழைய ஏற்பாட்டில் நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கை தேவன் ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறு மடங்கு ஆசீர்வாதத்தை அவர் பெற்றார். ஈசாக்கு தேசத்தில் விதை விதைத்த காலம் செழிப்பின் காலமல்ல, அது பஞ்சத்தின் காலம். தேசமெங்கிலும் மகா வறுமை காணப்பட்ட ஒரு காலம். அந்நாட்களில் ஈசாக்கு பட்ட பிரயாசத்தை நம் ஆண்டவர் ஆசீர்வதித்தார். அதற்கு என்ன காரணம்?
ஈசாக்கின் ஜெப வாழ்வு
‘‘மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான். கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபேக்காள் கர்ப்பந்தரித்தாள்’’ (ஆதி 25:21).
மிகுந்த கடன் பாரத்தினாலும், பணக்கஷ்டத்தினாலும் மனமடிந்து போனீர் களோ? இனிநான் எழும்ப முடியாது, நொடிந்துபோய் விடுவோம் என முடிவு கட்டிவிட்டீர்களோ? கவலைப்படாதீர்கள். யாரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும் என்று மனுஷர்களை நோக்கிப் பார்ப்பதை சற்று அப்புறப்படுத்திவிட்டு, தேவனை நோக்கி மன்றாடி ஜெபம் பண்ணுங்கள்.
அன்றைக்கு சீடர்கள் கடல் பயணத்தில் புயலினால் தாக்கப்பட்டபோது நித்திரையாயிருந்த இயேசுவை எழுப்பினார்கள். அப்போது இயேசு எழுந்து காற்றையும், கடலையும் அதட்டினார்கள். அதைப் போலவே தேவனை நோக்கி நீங்கள் கூப்பிடுகையில் ஏற்ற வேளையில் உங்களுக்கு அவர் செவி கொடுத்து உங்கள் மனவிருப்பத்தை நிறைவேற்றுவார். உங்கள் தேவைகளை சந்திப்பார்.
ஈசாக்கின் தியான வாழ்வு
‘‘ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்த போது, ஒட்டகங்கள் வரக்கண்டான்’’ (ஆதி 24:63).
கடன் பிரச்சினையினாலும், கஷ்டத்தினாலும் மனம் சோர்ந்து போனீர்களோ? இந்த சூழ்நிலையில் உங்களுக்குத் தேவை தேவனுடைய வார்த்தை. கர்த்தருடைய வார்த்தை ஒருநாளும் வெறுமையாய்த் திரும்பாது. தான் செய்ய நினைத்த காரியத்தை செய்து முடித்துதான் திரும்பும். மேலும், கர்த்தருடைய வார்த்தை கால்களுக்குத் தீபமும், பாதைக்கெல்லாம் வெளிச்சமுமானவைகள். மட்டுமல்ல கர்த்தருடைய வார்த்தை பேதைகளை ஞானியாக மாற்றும், எளிய வனைக் குப்பையிலிருந்து உயர்த்தும். அத்தனை வல்லமையுள்ளது கர்த்தருடைய வார்த்தை.
அன்றைக்கு யுத்தக்களத்தில் பயமுறுத்தின கோலியாத்தைப் பார்த்து விசுவாசத்தோடு கர்த்தருடைய வார்த்தைகளை தாவீது பேசினார். ‘‘அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி, நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய ராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய
கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்’’
(1.சாமு.17:45).
அந்த வார்த்தையின் வல்லமை அற்புதத்தையும் வெற்றியையும் தாவீதுக்குக் கொண்டு வந்தது. ஆம், உங்கள் பஞ்சகாலம் மாற நேரம் கிடைக்கும்போது வேத வசனத்தை வாசித்து, அவ்வசனங்களை விசுவாசத்தோடு தியானியுங்கள். வார்த்தையின் வல்லமை உங்களுக்கு அற்புதத்தைக் கொண்டு வரும்.
தேவனால் நடத்தப்பட்ட ஈசாக்கு
‘‘ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று. அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான். கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு. நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்’’ (ஆதி.26:1–3)
பண நெருக்கடி அதிகரிக்கும்போது யாரிடத்தில் போய் கடன் வாங்கலாம் என்ற எண்ணம் உங்களுக்கு அநேக நேரங்களில் வருகிறது அல்லவா? கடன் வாங்குவது எளிதென்றாலும் அதனை திரும்ப அடைப்பது எத்தனை கடினமாக இருக்கிறது. எனவே கடன் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் சிந்தனையிலிருந்து எடுத்து விடுங்கள். நிச்சயம் ஒரு புது வழியை ஆண்டவர் காட்டுவார். அதற்கு அவருடைய நடத்துதல் உங்களுக்குத் தேவை.
ஆண்டவருடைய நடத்துதலை தேவனிடத்தில் கேளுங்கள். தொழிலை விரிவாக்க, கடனை அடைக்க, கடன் இல்லாமல் வாழ என்ன செய்ய வேண்டும் என தேவனிடத்தில் கேட்பது மட்டுமல்ல, அவர் உங்களை நடத்தும் வரைக்கும் சற்று நிதானத்தைக் காத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். அப்பொழுது உங்கள் பொருளாதாரத்தில் மாற்றங்களும், அற்புதங்களும் நடைபெறும். தேவனுடைய ஆசீர்வாதம் உங்கள் வீட்டில் தங்கும்.
தேவ கிருபை உங்களோடு இருப்பதாக!
சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,
‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை–54
Related Tags :
Next Story