ஆன்மிகம்

ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி + "||" + Zen story: Light of fear

ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி

ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி
அந்த ஆசிரமம் ஊரில் இருந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமாக, வனத்தை ஒட்டி அமைந்திருந்தது. மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து நெடுந்தொலைவில் இருந்த அந்த ஆசிரமத்தில் ஒரே ஒரு குரு மட்டுமே தங்கியிருந்தார்.
ந்த ஆசிரமம் ஊரில் இருந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமாக, வனத்தை ஒட்டி அமைந்திருந்தது. மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து நெடுந்தொலைவில் இருந்த அந்த ஆசிரமத்தில் ஒரே ஒரு குரு மட்டுமே தங்கியிருந்தார். அடர்ந்தக் காட்டுப்பகுதி அது என்றாலும், அந்த குருவைக் காண பகல் நேரத்தில் ஏராளமான மக்கள் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவரும் தன்னைக் காண வரும் மக்களிடம் நல்லபடியாக உரையாடி உபசரித்து, அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைப்பார்.


ஒரு நாள் குருவைக் காண்பதற்காக அவரது பழைய சீடன் ஒருவன் வந்திருந்தான். அன்று முழுவதும் குருவின் அருகிலேயே இருந்து, அவரது போதனைகளைக் கேட்டான். பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை. மாலை நேரம் முடிந்து இருள் சூழத் தொடங்கி விட்டது.

சீடன் அங்கிருந்து புறப்பட நினைத்தான். குரு அவனைத் தடுத்து, ‘இரவு நேரமாகி விட்டது. நீ இங்கேயே தங்கியிருந்து, நாளைக் காலையில் புறப்பட்டுச் செல்’ என்றார்.

ஆனால் சீடன் மறுத்தான். ‘இல்லை குருவே! எனக்கு ஒரு முக்கியமான பணி இருக்கிறது. அதனால் நான் இன்று இரவே இங்கிருந்து போயாக வேண்டும்’ என்றான்.

அதற்கு மேல் அவனை தடுத்து நிறுத்த விரும்பாத குரு, ‘நல்லது, பத்திரமாகப் போய் வா’ என்று விடை கொடுத்தார்.

மடத்தின் வாசல் வரை வந்த சீடன் தயங்கியபடி நின்றான். வெளியே இருள் கவ்விக் கிடந்தது. மடத்தின் வெளிச்சத்தைத் தவிர, வேறு எங்கும் ஒரு துளி ஒளி இல்லை. ஆனால் அவனுக்கிருந்த பணி, அவனை அங்கேயே தங்கி விடவும் அனுமதிக்கவில்லை.

சீடன் தடுமாறுவதைக் கவனித்த குரு, உள்ளே போய் ஒரு விளக்கை ஏற்றி எடுத்து வந்தார். அதை சீடனின் கையில் கொடுத்து, ‘புறப்படு’ என்றார்.

தன்னுடைய மனநிலையை சரியாக கணித்துவிட்ட குருவைக் கண்டு பெருமிதம் கொண்ட சீடன், அவருக்கு நன்றியை தெரிவித்து விட்டு அவரிடம் இருந்து விடைபெற்றான்.

ஆனால் அவன் கொஞ்ச தூரம் போனதுமே, ‘நில்!’ என்றார் குரு.

சீடன் நின்றதும், அவனருகே விரைந்து சென்ற குரு, அவன் கையில் இருந்த விளக்கின் தீபத்தை, வாயால் ஊதி அணைத்தார். பின்னர் ‘இப்போது புறப்படு’ என்றார்.

சீடன் திகைத்துப் போய் குருவைப் பார்த்தான்.

அவனது பார்வையில் இருந்த கேள்வியைப் புரிந்து கொண்ட குரு அவனிடம் விளக்கம் அளிக்கலானார்.

‘இரவல் வெளிச்சம் உனக்கு நெடுந்தூரம் துணைக்கு வராது. உன் விளக்கு உனக்குள்ளேயே இருக்கிறது. அது எரியாதவரை, இந்த விளக்கால் எந்த பயனும் இல்லை. உன் கையில் விளக்கு தேவை என்றால், உன் உள்ளே பயம் உறைகிறது என்று பொருள். உள்ளத்தில் துணிவிருந்தால், வெளியே விளக்குத் தேவையில்லை. உள்ளுக்குள் இருக்கும் பயம் போகாதவரை உன்னால், வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. இதே இருள், இதே பாதை.. இவை எப்பொழுதும் இங்கேயேதான் இருக்கும். ஆனால் உன் துணிவு என்னும் ஒளியால் உன் பயணம் தொடரும்’ என்றார்.

சீடன் இப்போது மன உறுதியுடன் அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்.

எல்லா பாதைகளும் இருள் சூழ்ந்தவைதான். முன்னேறும் துணிவுடையவன் எந்த விளக்கையும் எதிர்பார்ப்பதில்லை. விளக்குடன் முன்னேறியவர்களை விட, விளக்கின்றி முன்னேறியவர்கள்தான் அதிக அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் அகமே விளக்கு. அதுதான் நமக்கு கடைசிவரை ஒளி தந்து வழி காட்டும்.