2. லவணம் என்ற உப்பின் மகிமைகள்


2. லவணம் என்ற உப்பின் மகிமைகள்
x
தினத்தந்தி 4 July 2017 12:00 AM GMT (Updated: 3 July 2017 12:10 PM GMT)

‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’, ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்ற பழமொழிகளை, சின்ன வயதில் நாம் படித்திருப்போம். உப்பு என்பது உணவு பொருட்கள் உட்பட பல பொருட்களையும் பக்குவப் படுத்தக்கூடிய பொருளாக உள்ளது.

‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’, ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்ற பழமொழிகளை, சின்ன வயதில் நாம் படித்திருப்போம். உப்பு என்பது உணவு பொருட்கள் உட்பட பல பொருட்களையும் பக்குவப் படுத்தக்கூடிய பொருளாக உள்ளது. உப்பை வைத்து பிரார்த்தனைகளும் செய்யலாம் என்பது பலருக்கும் தெரியாத வி‌ஷயம். செல்வ வளம் தரக்கூடிய பிரார்த்தனை முதல் கொண்டு, எதிரிகளை அடக்கும் பூஜைகள் வரை, உப்பை வைத்து செய்யப்பட்டு வருகின்றன. உப்பை வட மொழியில் ‘லவணம்’ என்று சொல்வார்கள். உப்பாகிய லவணத்தை பயன்படுத்தி செய்யப்படும் பிரார்த்தனையின் வடிவங்களை, ‘லவண சாஸ்திரம்’ என்று சொல்வார்கள்.  

கண் திருஷ்டி விலகும்


பொதுவாக, கடலில் இருந்து கிடைக்கும் உப்பை தலையில் போட்டு, அதற்குரிய மந்திரத்தைச் சொல்லும்போது நோய்கள் யாவும் விலகி விடுவதாக ஐதீகம். மேலும், கண் திருஷ்டி போன்ற பாதிப்புகளை நிவர்த்தி செய்ய மிளகாய், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து தலையை மூன்று முறை சுற்றி திருஷ்டி கழிப்பார்கள். வியாழன், வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் இரவில் இவ்வாறு செய்து அடுப்பில் இடுவது இன்றும் கிராமப்புறங்களில் வழக்கமாக இருக்கிறது. நமது ஊர் கோவில்களில் உள்ள பலிபீடத்தின் அருகே உப்பும், மிளகும் போட்டு பிரார்த்தனை செய்தால், கடன் தொல்லைகள் தீருவதாகவும், எதிரிகளை ஜெயிக்க வழி கிடைப்பதாகவும் ஐதீகம்.

‘லவண லிங்கம்’ வழிபாடு என்ற சூட்சும வழிபாட்டு முறை ஒன்று உள்ளது. உப்பு, மஞ்சள் மற்றும் திரிகடுகம் ஆகியவற்றை கலந்து செய்யப்பட்ட லவண சிவலிங்கத்தை வணங்கினால், சகல மக்களையும் வசீகரிக்கும் சக்தி உண்டாவதாக கூறப்படுகிறது.

பழங் காலங்களில், வீடுகளில் எதிர்மறை சக்திகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று அறியப்படும்போது, ஒரு பாத்திரத்தில் கடல் தண்ணீர் அல்லது உப்பு கலந்த தண்ணீரை வீட்டின் மையப்பகுதியில் வைப்பார்கள். மூன்று நாட்கள் அவ்வாறு வைக்கப்பட்ட பிறகு, அந்த தண்ணீரை கவனமாக எடுத்துச் சென்று, மற்றவர்களது கால்கள் படாத இடங்களில் அல்லது பிற நீர்நிலைகளில் ஊற்றி விடுவது வழக்கம். முத்து மற்றும் சங்குகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், கடலுக்கு உப்புத்தன்மை இருப்பதால் தோன்றுகின்றன என்று கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

உப்பு வைக்கும் பானை

அலைகள் புரளும் கடலில் இருந்து மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் சொல்கின்றன. கடலில் இருந்து எடுக்கப் படுகிற உப்பில், மகாலட்சுமியின் சக்தி இருப்பதாகவும் பொதுவான நம்பிக்கை நம்மிடையே இருக்கிறது. அதனால் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய உப்பை, இரவு நேரங்களில் கடனாக கொடுக் கக்கூடாது என்ற முறையானது பல காலமாக பழக்கத்தில் இருந்து வருகிறது. உப்பை மண் பானையில் போட்டு வைத்த காரணத்தால் மண் பானைக்கு ‘ஸ்வர்ணம்’ என்ற பெயரும் உள்ளது. அதாவது தங்கத்தின் மகளான மகாலட்சுமியை தனக்குள் தாங்கும் மண் பானை வீட்டில் இருந்தால், அங்கே பணக்கஷ்டம் ஏற்படாது என்ற வி‌ஷயம் பல இடங்களில் நம்பிக்கையோடு கடைப்பிடிக்கப்படுகிறது.

விரதங்களில் உப்பு

பண்டங்களுக்கு உப்பு அவசியம் என்றாலும், அறுசுவைகளில் ஒன்றான உப்பை நாம் அளவாக பயன்படுத்த வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. உப்பில்லாமல் சாப்பிட வேண்டியே கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக் கிழமை விரதம் போன்ற முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அத்தகைய முறையானது, ‘அலவண நியமம்’ என்று அழைக்கப்பட்டது. உதாரணமாக, மழை பெய்ய வேண்டி வருண மந்திர ஜெபம் செய்பவர்கள், உப்பு சேர்க்கப்பட்ட உணவை சாப்பிட்டு விட்டு ஜெபம் செய்தால் பலன்கள் பூரணமாக கிடைப்பதில்லை. அவர்கள் உப்பில்லாத உணவை உண்டுவிட்டு ஜெபம் செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம். நகரங்களில் கூட, உப்பை இலவசமாக வாங்குவது அல்லது கொடுப்பது தவிர்க்கப்படுகின்றன. காரணம், அவ்வாறு பெறுபவர்களுக்கு, கொடுப்பவர்களின் எதிர்மறை சக்திகள் உப்போடு சேர்ந்து வந்துவிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

உப்பு பிரார்த்தனைகள்

‘லவண பிரார்த்தனா நிகண்டு’ என்ற நூலில், உப்பின் மூலம் செய்யப்படும் பிரார்த்தனைகள் பற்றி பல தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. அவை தவிரவும், பலராலும் ரகசியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற சில வழிமுறைகள் பற்றி இங்கே காணலாம். பொருளாதாரம் பெருகவும், நல்ல வேலை கிடைக்கவும், வீடு, மனை, வாகன வசதிகள் ஏற்படவும் பவுர்ணமி அன்று காலையில் பிரம்ம முகூர்த்த சமயத்தில், பிரார்த்தனைகள் செய்யலாம்.

கனகதாரா ஸ்தோத்திரம் தந்த ஆதிசங்கரரின் ‘சவுந்தர்ய லகரியின்’ 33–வது ஸ்லோகம் ‘ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்’ என்று தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் சிறிது உப்பை இரு கை களிலும் வைத்துக்கொண்டு பிரம்ம முகூர்த்தத்தில் அந்த ஸ்லோகத்தை 48 முறைகள் சொல்லி வரவேண்டும். அந்த முறைப்படி 48 நாட்கள் செய்து முடித்து, உப்பை சேகரித்து வைத்து கடலில் விட்டுவிடலாம்.

எதிரிகள் விலகவும், நோய்கள் நீங்கவும், குடும்ப உறவுகளுக்குள் சுமுகமான போக்கு உண்டாகவும், கடன்கள் தீரவும் அமாவாசை அன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் பிரார்த்தனைகளை மேற்கொள்ளலாம். கடன்கள் விலக ‘ருண விமோசன ஸ்தோத்திரம்’, ஆரோக்கியத்துக்கு தன்வந்திரி ஸ்லோகம், உறவுகள் பலப்பட அவரவர் குல தேவதைக்கு செய்யும் பிரார்த்தனை போன்றவற்றால் நன்மைகள் வந்து சேரும்.

நவக்கிரக பரிகாரம்


திசா புத்தி பாதிப்பு உள்ளவர்கள், சம்பந்தப்பட்ட கிரகங் களுக்குரிய ஸ்தோத்திரங்களை 48 முறை, உப்பை கைகளில் வைத்தபடியே பாராயணம் செய்வது நல்ல பலன்களை அளிக்கக்கூடியது. அதாவது அந்தந்த கிரகங்களுக்கு உரிய நாட்களில், காலையில் கோலப்பொடியால் வட்டம் வரைந்து அதன் மத்தியில் அமர்ந்து பாராயணம் செய்வது முறை. அதற்கு முன்னர் விநாயகர் வழிபாடு மற்றும் தமது குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். இந்த வழிபாட்டை 48 நாட்களுக்கு செய்த பின்னர், சேகரித்த உப்பை கடலில் அல்லது ஆற்றில் விட்டு விடலாம்.

மந்திர ஜெபம், பிரார்த்தனை மற்றும் பூஜைகள் செய்யும்போது, குறிப்பிட்ட ஆசனங்களில் அமர்ந்து ஈடுபடுதல் அவசியம் என்று ஆகம பூஜா சாஸ்திர விதிகள் கூறுகின்றன. வெறும் தரையில் அமர்ந்து ஜபம் செய்தால் பலன்கள் பூமியால் ஈர்க்கப்பட்டுவிடும். அதன் காரணமாக ஒருவர் சொல்லும் முதல் ஜெப மந்திரத்தை பூமாதேவிக்கு அர்ப்பணம் செய்து விடுவது வழக்கம். கடல் தண்ணீரானது வானத்திற்கு ஈர்க்கப்பட்டு, பிறகு மழையாக திரும்பி வருவதுபோல, உப்பானது ஒரு வீட்டில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத எதிர்மறை சக்திகளை பலமிழக்க வைக்கும் திறன் பெற்றதாகும். அதனால் கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை துடைத்து விட்டால் பல தோ‌ஷங்கள் விலகிவிடும்  என்ற நம்பிக்கை உள்ளது.  

உடல் ரீதியான சங்கடங்கள் அல்லது மன ரீதியான சிக்கல் களைத் தவிர்க்க, உப்பை பயன்படுத்தி கடைப்பிடிக்கப்படும் ஒரு எளிய முறை பற்றி இங்கே காணலாம். ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை, நமது முழங்கால் அளவுக்கு இருப்பதுபோல எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ‘இமாலயன் ராக் சால்ட்’ அல்லது ‘இந்துப்பு’ ஆகியவற்றில் ஒன்றை சிறிதளவு கலந்துகொள்ள வேண்டும். அதில் நமது கால்களை அமிழ்த்தி வைத்துக்கொண்டு, 10 அல்லது 15 நிமிடங்களுக்கு கண்களை மூடியவாறு சகல எதிர்மறைகளையும் உப்பு நீர் ஈர்த்துக்கொள்வதாக பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு அந்த நீரை வெளியில் கொட்டி விடவேண்டும். இந்த முறையின் மூலம் சிக்கல்கள் நீங்குவதை அனுபவத்தில் பலரும் கண்டுள்ளனர்.

பண்டைய காலத்தில், வருடத்திற்கு ஒரு முறை ‘லவண லம்பதாரண்ய பூஜை’ விசே‌ஷமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதாவது பிரதமை திதியில் வரும் மகம் நட்சத்திர நாளில் ஒரு கொய்யா குச்சியின் வழியாக, கடலின் புனிதமான உப்பு நீரை உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யும் முறையாகும் இது. அதன் வாயிலாக இயற்கை சீற்றங்களைக் கட்டுப்படுத்த இறை சக்திகளை பயன்படுத்துவது ஐதீகமாக இருந்துள்ளது.

–தொடரும்.

முன்னோர்  வழிபாடு

பித்ருக்கள் எனப்படும் முன்னோர் வழிபாடுகளில் உப்பு சேர்க்காமல், பண்டங்களை செய்து படையல் போடுவதற்கு ஒரு உள்ளர்த்தம் இருக் கிறது. அதாவது, முன்னோர்களுக்கு படைக்கும் தின்பண்டங்களில் உப்பு சேர்த்து சமைத்தால், அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் இங்கேயே தங்கி விடும்படி ஆகிவிடும் என்பதுதான். உப்பு நீரான கடற்கரை ஓரங்களில் ‘மகாளய அமாவாசை’, ‘தை அமாவாசை’ மற்றும் ‘ஆடி அமாவாசை’ போன்ற பித்ரு வழிபாட்டு காலங்களில் பூஜைகள் செய்வது கவனிக்கத்தக்கது.

உப்பின்  வகைகள்

பண்டைய மருத்துவ நூலான ‘சரகர் சம்ஹிதை’ என்ற நூலில், உப்பில் பொதுவான ஐந்து பெரும் பிரிவுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவை ஒன்றோடு ஒன்று கலந்து மருத்துவ முறைகளுக்கு பயன்படுவதாகவும் ‘சரகர் சம்ஹிதையில்’ எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உப்புகள் கடல், ஏரி, பாறை மற்றும் மலைகள் போன்றவற்றில் இருந்து பெறப்படுகின்றன. அவை பற்றிய விவரம்:

    1. சௌவர்ச்சலம்

    2. சைந்தவம்

    3. விடம்

    4. ஒளபிதம்

    5. சமுத்திரம்

இந்த ஐந்து வகையான உப்புகளும் ஒன்றோடு ஒன்று கலந்து, 15 வகையான உப்புகளாக மாற்றம் பெற்று, மருத்துவ சிகிச்சைகளுக்கு பயன்படுகின்றன.

Next Story