19. கடவுளுக்குப் பணிவிடை


19. கடவுளுக்குப் பணிவிடை
x
தினத்தந்தி 4 July 2017 4:45 AM IST (Updated: 3 July 2017 5:48 PM IST)
t-max-icont-min-icon

இயேசு பிரான் இவ்வுலகில் வாழ்ந்தபோது அவருடைய சீடரை நோக்கி இவ்வாறு கூறினார்: ‘யாரும் இரண்டு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய இயலாது.

நற்செய்தி சிந்தனை

- செம்பை சேவியர்


யேசு பிரான் இவ்வுலகில் வாழ்ந்தபோது அவருடைய சீடரை நோக்கி இவ்வாறு கூறினார்: ‘யாரும் இரண்டு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய இயலாது. ஏனென்றால் ஒருவரை வெறுத்து விட்டு, மற்றவரிடம் அன்பு கொள்வார். அல்லது ஒருவர் பக்கம் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக் கணித்து விடுவார்’.

‘அதைப்போல நீங்களும் கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது. நான் உங்களுக்குச் சொல்கிறேன்’.

‘உயிர் வாழ்வதற்கு எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உணவை விட உயிரும், உடையை விட உடம்பும் உயர்ந்தவை அல்லவா?’

‘வானத்திலே பறக்கும் பறவைகளை உற்றுப் பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை. அறுப்பதும் இல்லை. களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை. விண்ணகத்தில் இருக்கும் தந்தையானவர், அவைகளுக்கும் உணவை அளிக்கிறார். அவைகளை விட நீங்கள் மேலானவர்கள். கவலைப்படுவதால், தமது உயரத்தை எவரும் ஒரு முழம் கூட்ட முடியுமா? ஆடைக்காக ஏன் கவலைப்படுகிறீர்கள். காட்டில் உள்ள மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன? கவனித்துப் பாருங்கள். அவைகள் உழைப்பதும் கிடையாது. நூற்பதும் கிடையாது’.

‘சாலமோன் கூட தன்னுடைய உயர்வில் எல்லாம், அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்தது கிடையாது, என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்’.

‘நம்பிக்கை குறைந்திருப்பவர்களே! இன்றைக்கு இருந்து, நாளைக்கு அடுப்பில் எறியப்படும், காட்டுப்புல்லுக்கு, கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால், உங்களுக்கு இன்னும் மிகுதியாகச் செய்ய மாட்டாரா?’

‘ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிந்து கொள்வோம்? என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். ஏனென்றால் பிற இனத்தைச் சார்ந்தவரே இவைகளை நாடுவர். இவைகளெல்லாம் உங்களுக்குத் தேவை என்பதை உங்களின் வானகத் தந்தை நன்கு அறிவார்’.

‘எல்லாவற்றுக்கும் மேலாக, அவருடைய ஆட்சியையும், அவருக்கு உகந்ததையும் நாடுங்கள். அச்சமயத்தில் இவைகள் அனைத்தும், உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். ஆகையால் நாளைய தினத்திற்காகக் கவலைப்படாதீர்கள். நாளைய கவலை தீர, நாளைக்கு ஒரு வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு, அன்றன்று உள்ள தொல்லையே போதும்’ என்று உரைத்தார்.

நீண்ட இந்த நற்செய்தியைக் கவனியுங்கள். இந்த நற்செய்தியில் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

எவரும் இரண்டு எஜமானர்களுக்குக் கீழே வேலை செய்ய முடியாது என்ற கருத்து உரைக்கப்படுகிறது. உண்மைதான். இயல்பான ஒன்றை எடுத்துரைக்கிறார், நம் இயேசு பிரான். எப்படியும் ஒருவரைப் பகைத்துக் கொள்ளத்தானே இயலும். ஒருவரைப் பகைத்து, மற்றொருவரை நேசித்தால்தான், பணி விடையைத் திறம்படச் செய்ய முடியும். மேலும் செல்வத்துக்குப் பணிவிடை செய்வது, இவ்வுலகத்தை மட்டும் சார்ந்தது. கடவுளுக்குப் பணிவிடை செய்வது, இவ்வுலகையும் மறுவுலகையும் சார்ந்தது. இது தூய்மையானது. உண்மையானது. நம்மை மேலும் நலம் பெறச்செய்வது. இந்நிலையை எடுத்துரைத்து, தம் சீடர்களுக்கு இயேசு பிரான் போதிக்கிறார்.

ஆகவே கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்ய உங்களால் முடியாது என்ற கருத்தை ஆழமாக வேரூன்றச் செய்கிறார். ‘ஒன்று, கடவுளுக்குப் பணிவிடை செய். அல்லது செல்வத்துக்குப் பணிவிடை செய்’ என்ற கருத்து பெறப்படுகிறது.

எதற்கும் கவலைப்படக்கூடாது என்பதை எடுத்துக் கூறும் பொழுது, உயிர் வாழ்வதற்காக எதை உண்பது? எதைக் குடிப்பது? எதை உடுத்துவது? என்று கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி விட்டு, ஓர் அற்புதமான கருத்தைக் கூறுகிறார்.

‘உணவை விட உயிர் மேலானது’ என் கிறார். ‘உடையை விட உடம்பு மேலானது’ என்கிறார். உயிரும் உடம்பும் தூய்மை உடையதாக இருக்க வேண்டும் என்ற நற்கருத்துதான் இங்கே வெளிப்படுகிறது. வெறும் உணவினாலும், ஆடம்பர உடையினாலும் தூய்மை வெளிப்படப் போவதில்லை.

வானத்திலே பறந்து வட்டமிட்டுக் கொண்டிருக்கும் பறவைகளைக் காட்டுகிறார். அவைகள் விதைக்கிறதா? அறுவடை செய்கிறதா? களஞ்சியங்களில் நாளைக்கு வேண்டுமென்று சேகரிக்கிறதா? என்றெல்லாம் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார். பறவைகளுக்கு உணவளிக்கும் தந்தையானவர், உங்களுக்கு அளிக்க மாட்டாரா? என்று மீண்டும் அவர்களை தன் கேள்விகளால் சிந்திக்க வைக்கிறார்.

அதுமட்டுமல்ல! அடுத்த ஒரு கேள்வியைக் கேட்டு, நம்பிக்கையை மேலும் வளர்த்து ஊக்கப்படுத்துகிறார். வானத்துப் பறவைகளை விட, மேலானவர்களாக இருக்கும் நீங்கள், நினைத்தால்கூட, உங்கள் உயரத்தை ஒரு முழம் கூட்டி விட முடியுமா? என்ற கேள்வியால் சிந்தனையைத் தூண்டி விடுகிறார்.

ஆடைக்காகக் கவலைப்படு கிறீர்களே, காட்டு மலர்ச் செடிகளைக் கவனித்தீர்களா? இல்லையென்றால் கவனித்துப் பாருங்கள். அவைகள் உழைக்கிறதா? அல்லது நூற்கிறதா? இல்லையே.

நற்செய்தியில் கூறப்படும் சாலமோன் பற்றிக் கூறுகிறார். அவர்கூட இப்படியெல்லாம் அணிந்தது கிடையாது என்றுரைக்கிறார். இவற்றையெல்லாம் கூறி விட்டு, சீடர்களைப் பார்த்து அவர் மேலும் கூறுகிறார், ‘நம்பிக்கை குறைந்தவர்களே!’ என்று விளிக்கிறார். ஆம்! நம்பிக்கை குறைவாக இருப்பவர்கள்தான், இப்படியெல்லாம் எண்ணுவார்கள். இதை உணர்ந்ததால்தான் இப்படி அழைக்கிறார், இயேசு பிரான்.

ஆழமான அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும் என்பதைத்தான் இந்த நற்செய்திப் பாடம் நமக்கு அறிவுறுத்துகிறது.

கவலைப்படுவதால், எதுவும் நடந்து விடப்போவதில்லை. நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு, வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் என்று சீடர்கள் வழியாக சமூகத்திற்கு எடுத்துரைக்கிறார். இந்த நற்செய்தியைப் படிப்போர் நன்கு சிந்திக்க வேண்டும். நற்செய்தியின் வழியே நடக்க முயற்சிக்க வேண்டும்.

(தொடரும்)

Next Story