மன்னிப்பின் மகத்துவம்


மன்னிப்பின் மகத்துவம்
x
தினத்தந்தி 14 July 2017 9:51 AM GMT (Updated: 14 July 2017 9:50 AM GMT)

“மனிஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால் உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்” (மத்தேயு 6:15)

ன்னித்தல் மிகப்பெரிய நன்மை தரும் நற்செயலாகும். ஒருமுறை பேதுருவிடம் இயேசு கிறிஸ்து, ‘நீ உனது சகோதரனை ஏழு எழுபது முறை மன்னிக்க வேண்டும்’ என்றார்.

‘ஏழு எழுபது முறை’ என்றால் ‘கணக்கில்லாமல் மன்னிக்க வேண்டும்’ என்று பொருள். இதை விளக்கும் வகையில் இரு உவமைகளையும் கூறினார். அதில் மனம் திரும்பும் மகன் உவமையும் ஒன்று.

தந்தை ஒருவனுக்கு இரு புதல்வர்கள் இருந்தனர். தரமற்ற தம்பி சொத்தைப் பிரிக்க தந்தையோடு சண்டையிட்டான். கைகளில் பணம் இருந்தால் உலகத்தின் இன்பங்களை எல்லாம் சட்டைப்பையில் சுருட்டிக் கொள்ளலாம் என்பது அவன் எண்ணம்.

தந்தையின் அறிவுரைகள் எருமையின் காலில் மிதிபட்ட பறவை முட்டையாய் பயனற்று போயின. வேறு வழியின்றி தந்தையும் இருந்த சொத்தை இரண்டாக்கினார். பாதி சொத்தை இளையவனுக்கு கொடுத்தார். அவன் சொர்க்கத்தையே தன் சுருக்குப்பைக்குள் சொருகிக் கொண்டதாய் ஆனந்தம் அடைந்தான்.

சொத்துகளை விற்று பணமாக்கினான். ஊதாரி நண்பர்களே ஆதாரமென்று நம்பினான். நண்பர்களோடு தூரதேசம் சென்று பணத்தை தண்ணீராய் பாய்ச்சி ஆனந்தத்தை அள்ளினான். மதுவில் கண்ணயர்ந்து மாதுவின் கரங்களில் விழித்தான். தகாத பாதைகளில் தவறாமல் நடந்தான்.

மதகு திறந்த அணையில் தண்ணீர் தீர்வது எளிதல்லவா. அதுவும் தண்ணீர் வரத்தே இல்லாத அணையெனில் எப்படி இருக்கும். சொத்து கள் தீப்பந்தம் பட்ட பனித்துளி போல உலர்ந்து மறைந்தது. ஊதாரித்தனத்தின் உச்சத்தில் உறங்கி விழித்தவனிடம் உணவுக்கே மிச்சமில்லை.

தண்ணீர் பாயாத அருவிகளில் குளிப்பதற்கு ஆளிருக்குமா என்ன?, பணம் தீர்ந்தது புரிந்ததும் நண்பர்கள் இரவோடு இரவாக கூடு மாறி ஓடினர். பின்னர் உணவுக்காய் வேலை தேடி அலைந்தான். அவனுக்கு பன்றி மேய்க்கும் வேலை பரிதாபத்துடன் கொடுக்கப்பட்டது.

பட்டாடை உடுத்தியவன், வறுமை துரத்த பன்றிகளோடு புரண்டான். மதுவில் நீந்தியவன், பட்டினி துரத்த பன்றியின் உணவை பகிர்ந்துண்டான். பின்னர் அதற்கு கூட வழியின்றி தவித்தான்.

தந்தையின் நேசம் நெஞ்சுக்குள் நெளிய, புத்தி தெளிந்தான் புத்திரன். திடீரென ஒரு ஆசை. தந்தையின் தேசத்தில் வேலைக்காரனாக பணியாற்றி மீதி காலத்தை ஓட்டிவிட நினைத்தான்.

அவமானம் தலைமேல் அமர தலை கவிழ்ந்தான். இல்லம் நோக்கி சென்றான்.

தொலைவில் இளைய மகனின் நிழல் கண்டதும், தந்தையின் கரம் நீண்டது. அவர் மனம் மகிழ்ச்சி தோட்டத்தில் மலர் கொய்தது. மண்ணை நோக்கிப் பாயும் மழையாய் மகனை நோக்கி பாய்ந்தார் அவர், திரும்பியவன் திருந்தியிருந்தான்.

“மகன் என்னும் அந்தஸ்தை நான் இழந்துவிட்டேன். அதனால் வேலைக்காரனாக உங்களுடன் இணைந்துக்கொள்கிறேன். ஏதாவது ஒரு வேலையை எனக்கு கொடுங்கள்” என்று அழுதபடி கேட்க... தந்தையோ மகனைக் கட்டியணைத்தார். ஆனந்தக் கண்ணீரால் அவன் முகம் நனைத்தார். கொழுத்த கன்றைக் கொன்று விருந்தொன்றை அமைத்தார். முதல்தர ஆடை அணிவித்து, மிதியடி, மோதிரம் அணிவித்து மகனை உச்சி மோந்து உச்சத்தில் உலாவினார்.

மூத்தவன் வந்தபோது ஆடல் சத்தத்தில் ஆடிப்போனான், விவரம் அறிந்து கோபத்தில் குதித்தான். தந்தையை நோக்கி கேள்விகளை தொடுத்தான். ‘தகாத உறவுக்காரனுக்கு தரமான விருந்தா?, தவறாமல் இருந்த எனக்கு தந்ததென்ன தந்தையே?’ என்றவனின் மூச்சில் கோபமிருந்தது.

அதற்கு தந்தை சொன்னார்.... ‘உன் தம்பி இறந்திருந்தான், இப்போது உயிர்த்துவிட்டான். காணாமல் போயிருந்தான், இப்போது கிடைத்து விட்டான். அதற்கே இந்த விருந்து. நீயோ, என்னுடனே இருக்கிறாய், பிரியாத பிரியத்துடன். எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதே. தொலைந்தவை கிடைக்கையில் ஆனந்தப்படு. தவறுதல் மனித இயல்பு, மீண்டு வருதலே மனிதனின் மாண்பு’ என்றார்.

இந்த உவமையில் மனம் திருந்துதலையும், மன்னிக்கும் அவசியத்தையும் அள்ளித்தெளித்திருந்தார். இதை கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு முத்தாய்ப்பாக அடுத்த உவமையும் கூறப்பட்டது.

“ஒரு ராஜா, ஊழியக்காரன் தன்னிடம் வாங்கியிருந்த கடனை திருப்பி கொடுக்குமாறு கூறியிருந்தார். பதினாயிரம் தாலந்து என்பதால் அவனால் திருப்பி கொடுக்க முடியவில்லை. அதற்கு சொத்துகளை விற்றுக்கொடுக்கும்படி கூறியிருந்தார்கள். அப்போது அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து வணங்கி, ‘என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன்’ என்றான்.

அவனது வேண்டுதலை ஏற்றுக்கொண்ட ராஜா, அவனை மன்னித்ததோடு கடனையும் மன்னித்துவிட்டார்.

அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப் போகையில் அவனிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன்னுடன் சேர்ந்து பணிபுரியும் வேலைக்காரர்களில் ஒருவனை கண்டான். உடனே அவனை பிடித்து, கழுத்தை நெரித்து, ‘நீ பட்ட கடனை எனக்கு கொடுத்து தீர்க்கவேண்டும்’ என்றான்.

அப்போது அவன் காலிலே விழுந்து, ‘என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன்’ என்று அவனை வேண்டிக் கொண்டான். அவனோ சம்மதிக்காமல், பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனை காவலில் போட்டுவித்தான்.

இந்த விவகாரம் ராஜாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதை கேட்டு ஆத்திரமடைந்த ராஜா... அவனை அழைத்து, ‘நான் உன்னை மன்னித்தது போல நீயும் அவனை மன்னித்திருக்க வேண்டும். ஆனால் நீயோ மன்னிக்க தவறினாய். அதற்கான தண்டனை நிச்சயம் உனக்கு உண்டு. எனக்கு தரவேண்டிய கடனை திருப்பிக்கொடு..!’ என்று கூற அவன் அதிர்ந்துவிட்டான்” என்று இரு உவமைகளையும் சொல்லி முடித்த இயேசு... “மனிஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால் உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்” (மத்தேயு 6:15) என்று கூறினார்.

எனவே நமது குடும்பத்தாரோ, சொந்தக்காரரோ, நண்பரோ, நம்முடன் வேலைபார்ப்பவரோ அல்லது நமக்கு கீழே வேலை பார்ப்பவரோ யாராக இருந்தாலும் தவறு செய்தால் மன்னியுங்கள். அப்போதுதான் நம்முடைய குற்றங்கள் மன்னிக்கப்படும். இந்த கருத்தையே இரு உவமைகளும் வெளிப்படுத்துகின்றன. 

Next Story