திருநாவுக்கரசருக்கு திருக்கயிலை காட்சி


திருநாவுக்கரசருக்கு திருக்கயிலை காட்சி
x
தினத்தந்தி 17 July 2017 11:00 PM GMT (Updated: 17 July 2017 2:02 PM GMT)

அஸ்தினாபுரம் நகரத்தின் அரசனாக இருந்தவர் சுரதன். இவருக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது.

ஸ்தினாபுரம் நகரத்தின் அரசனாக இருந்தவர் சுரதன். இவருக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. புத்திர பாக்கியம் கிடைக்க திருக்கயிலை மலையை ஒரு மண்டலம் பிரதட்சணம் செய்யும்படி, சில மகரிஷிகள் தெரிவித்தனர். ஆனால் திருக்கயிலை சென்று இந்த பரிகாரத்தை செய்வது என்பது கடினமாகும். இதனை உணர்ந்திருந்த சுரதன், அந்த நேரத்தில் திருவையாறில் இருந்த துர்வாச மகரிஷியிடம் தனது நிலையை எடுத்துரைத்தான்.

துர்வாசர், சுரத மன்னனுக்காக ஈசனிடம் வேண்டினார். ஈசன் மனமிரங்கி நந்திதேவரிடம் கூறி திருக் கயிலையை, திருவையாறுக்கு எடுத்து வரும்படி கூறினார். நந்திதேவரும் திருக்கயிலை மலையை தூக்கி வந்து இரண்டாகப் பிளந்து, இந்த தலத்தில் தற்போதுள்ள ஐயாறப்பருக்கு தென்புறம் ஒரு பகுதியையும், மற்றொரு பகுதியை வடபுறமும் வைத்தார். இதனை உணர்த்தும் விதமாக, ஆலயத்தில் வட கயிலாயம், தென் கயிலாயம் என இரு தனிக்கோவில்கள் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளன.

பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் இத்தல ஈசன் சுயம்பு லிங்கமாக கிழக்கு பார்த்தவண்ணம் உள்ளார். மணலால் ஆன இவருக்கு அபிஷேகம் கிடையாது. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் நடை பெறும். லிங்கத்திற்கு புணுகு சாத்தப் படும். இறைவனின் பெயர் ஐயாறப்பர். அம்பாள் திருநாமம் அறம் வளர்த்த நாயகி என்பதாகும். அன்னை கிழக்கு பார்த்தவண்ணம் நின்ற திருக்கோலத்தில் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

இத்தல அம்பாள் சிலையின் உருவ அமைப்பைப் பார்த்தால் அப்படியே திருப்பதி வெங்கடாசலபதியின் வடிவமைப்பைக் காணலாம். அதுபோல திருப்பதி வெங்கடாசலபதியின் உருவ அமைப்பில் நம் திருவையாறு அறம் வளர்த்த நாயகி அம்மனின் வடிவழகைக் காணலாம். இதனை ‘அரி அல்லால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே’ என்று இத்தல பதிகத்தில் அப்பர் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும், பெருமாள் கோவில்களில் மட்டுமே நடக்கும் ‘மகாலட்சுமி புறப்பாடு’ இங்கும் நடக்கிறது. வெள்ளிக் கிழமை தோறும் மாலை நேரத்தில், திருவையாறு சிவத்தலத்தில் இருந்து, மகாலட்சுமி புறப்பாடாகி, இத்தல அம்பாள் சன்னிதிக்கு செல்கிறார். அதாவது மகாலட்சுமி தன் கணவர் மகாவிஷ்ணுவை காண வருவதாக ஐதீகம்.

கடலரசன், வாலி, இந்திரன், மகாலட்சுமி ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்துள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் காலில் முயலகனுக்கு பதிலாக ஆமை உள்ளது. சத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த தலம் இதுவாகும். இந்த தலம் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக  இருக் கிறது.

ஒருமுறை திருக்காள ஹஸ்தியை தரிசனம் செய்த திருநாவுக்கரசர், பின்னர் ஸ்ரீசைலம், மாளவம், லாடம் (வங்காளம்), மத்திம பைதிசம் (மத்திய பிரதேசம்) முதலிய இடங்களைக் கடந்து காசியை அடைந்தார். அங்கிருந்து கயிலை மலைக்குச் சென்று ஈசனை தரிசிக்க வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. அந்த எண்ணமே அவரை கயிலை நோக்கி இழுத்துச் சென்றது. ஆனால் வயோதிகமும், அதனால் ஏற்பட்ட சோர்வும் சேர்ந்து திருநாவுக்கரசரை மேற்கொண்டு நடக்கவிடாமல் செய்தது. இருப்பினும் கயிலை சென்றடைவதை நிறுத்தும் எண்ணமின்றி நடையை தொடர்ந்தார் திருநாவுக்கரசர். சில இடங்களில் நடக்க முடியாமல் ஊர்ந்தும் சென்றார்.

அப்போது அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான்,  முனிவர் வடிவில் திருநாவுக்கரசர் முன்தோன்றி, ‘நீர் இம்மானிட வடிவில் கயிலை செல்வது இயலாத காரியம். எனவே திரும்பிச் செல்லும்’ என்றார். ஆனால் திருநாவுக்கரசர் அவரது பேச்சை செவிமடுக்காமல், தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவரது பக்தியையும், மன உறுதியையும் கண்ட சிவபெருமான், ‘திருநாவுக்கரசா! இங்குள்ள பொய்கையில் மூழ்கி, திருவையாறு திருத்தலத்தை நீ அடைவாய். அங்கு யாம் உனக்கு கயிலைக் காட்சியை தந்தருள்வோம்’ என்று கூறி மறைந்தார்.

ஈசன் அருளியபடி அங்கிருந்த பொய்கையில் மூழ்கிய திரு நாவுக்கரசர், திருவையாறில் கோவிலுக்கு வடமேற்கே உள்ள சமுத்திர தீர்த்தக் குளத்தில் எழுந்தார். அங்கு திருக்கயிலை காட்சியை ஈசன், திருநாவுக்கரசருக்கு காட்டி அருளினார். திருநாவுக்கரசருக்கு திருவையாறு திருத்தலத்தில் ஈசன் திருக்கயிலை திருக்காட்சி காட்டியருளிய தினம், ஆடி அமாவாசை ஆகும்.

ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று இரவில் 9 மணி அளவில் ‘திருநாவுக்கரசர் திருக் கயிலை திருக்காட்சி’ பெருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெறுகிறது. அன்று காலை முதல் இரவு முழுவதும் ஆலயத்தில் திருமறை பாராயணம் நடக்கிறது. இரவு முழுவதும் ஆலயம் திறந் திருக்கும். ஆடி அமாவாசையில் திருக்கயிலை காட்சி தந்தருளிய ஈசனை வழிபட்டு, இத்தல பைரவரையும் வழிபட்டால், முன்னோர்கள் அனைவரும் சிவபதம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆடி அமாவாசை அன்று இரவில், இங்கு அப்பர் கயிலைக்காட்சி கண்டு வழிபாடு செய்வது திருக் கயிலை தரிசனத்துக்கு ஈடான பெரும் புண்ணிய திருப்பலனை அளிக்கும். திருநாவுக்கரசரின் பொருட்டு அன்று திருக்கயிலை திருத்தரிசனத்தை திருவையாறு திருத்தலத்தில் காட்டியருளிய ஈசன், நமக்கும் அருள் செய்வார்.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தில் திருவையாறு திருத்தலம் அமைந்துள்ளது.

–சிவ.அ.விஜய் பெரியசுவாமி,  கல்பாக்கம்.

Next Story