20. அகோரிகளின் ஆன்மிக தத்துவம்


20. அகோரிகளின் ஆன்மிக தத்துவம்
x
தினத்தந்தி 17 July 2017 11:30 PM GMT (Updated: 17 July 2017 2:48 PM GMT)

அகோர மார்க்கத்தில், ஆர்வம் இருக்கும் அனைவரும் நுழைந்து விட முடியாது. அதற்கு கட்டுப்பாடுகள் நிறைய உண்டு. தகுதி இருப்பவர்களாக கருதப்படுபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கோர மார்க்கத்தில், ஆர்வம் இருக்கும் அனைவரும் நுழைந்து விட முடியாது. அதற்கு கட்டுப்பாடுகள் நிறைய உண்டு. தகுதி இருப்பவர்களாக கருதப்படுபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தகுதி இருப்பவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குத் தீட்சை ஒரு பிரத்யேக சுபதினத்தில் தரப்படுகிறது. இது போன்ற தீட்சைகளுக்கு கிரகண நாட்கள் மிகவும் உகந்த தினங்களாக கருதப்படுகின்றன. அப்படி கிரகண நாட்கள் சரிவர அமையா விட்டால், தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் ஜாதகங்களில் சந்திரனோ அல்லது வலுவான வேறுகிரகங்களோ சேர்ந்திருக்கும் அமைப்பிற்கேற்ற நாட்களை தீட்சை தரத் தேர்ந்தெடுக் கிறார்கள்.

அந்த நாளில் மயானத்தில் நள்ளிரவு பன்னிரண்டு மணி முதல் அதிகாலை மூன்று மணி வரையான நேரம் தீட்சை தரத்தகுந்த முகூர்த்தமாகச் சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் அழைத்துச் செல்லப்படும் அந்த நபர் அமர்ந்து சடங்குகள் செய்ய புதிய பிணம் ஒன்றையும் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தப் பிணம் இளம் வயதினருடையதாக இருப்பதும், இயற்கை மரணத்தைச் சந்தித்த பிணமாக இருப்பதும் அவசியம். விபத்திலோ, கொலையிலோ மரணத்தைச் சந்தித்திருந்தால் அந்தப் பிணத்தை அகோர மார்க்க தீட்சைக்கு பயன் படுத்தப்படுவதில்லை. மயானத்தில் தீட்சை தரப்படும் இடத்தில் ஒரு மந்திரங்களால் ஒரு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்படுகிறது. துஷ்ட சக்திகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும், மரண தேவதையான மயான தாராவை ஈர்க்கவும் ஜெபித்த யந்திரமும் அவனுக்குத் தரப்படுகிறது. சில ரகசியப் பிரமாணங்களை எடுத்த  பின் ஒரு ரகசிய மந்திரம் அவனுக்கு உபதேசிக்கப்படுகிறது. அந்த  மந்திரம் தீட்சை பெறும் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பதில்லை. குரு தீட்சை பெறுபவனின் தன்மைக்கேற்ற மந்திரத்தைத் தேர்ந்தெடுத்து அதை உபதேசிக்கிறார். தீட்சை பெறுபவனிடம் சாத்வீகத் தன்மை குணாதிசயங்கள் மேலோங்கி இருக்குமானால் ஆகாயம் சம்பந்தப்பட்ட மந்திரம் உபதேசிக்கப்படுகிறது. ராஜஸ குணம் மேலோங்கி இருந்தால் அவனுக்கு அக்னி சம்பந்தப்பட்ட மந்திரமும், தாமஸ குணம் மேலோங்கி இருப்பவனுக்கு நீர் சம்பந்தப்பட்ட மந்திரமும் உபதேசிக்கப்படுகிறது. அந்த மந்திரத்திற்கும் புறக்கண்ணால் காண முடியாத சூட்சும சரீரம் இருப்பதாகச் சொல் கிறார்கள். அது தேர்ச்சி பெற்ற அகோரிகளால் மட்டுமே காணவும் உணரவும் முடியுமாம்.

உபதேச மந்திரத்தைத் தொடர்ந்து சிரத்தையுடன் உச்சரிக்கும் போது அது சம்பந்தப்பட்ட நாடி ஒன்று உச்சரிப்பவனின் உடலில் எழுப்பப்பட்டு உயிரூட்டப்படுகிறது என் கிறார்கள். உபதேசித்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு குரு தேர்ந்தெடுத்திருக்கும் திசை நோக்கி சவத்தின் மேல் அமர்ந்து கொண்டு ஆரம்பமாகும் அகோரியின் தீட்சை அதிகாலை மூன்று மணிக்குள் முடிவடைகின்றது. அப்படி முடிவடைந்த பின் அவனை உறங்க அனுமதிக்கும் குரு அவன் விழித்தெழுந்தவுடன் அவன் கனவுகளை விவரமாகக் கேட்டறிவார். அந்தக் கனவுகள் மூலமாகத்தான் தீட்சையளிக்கப்பட்ட மனிதனின் புரிதலும், முன்னேற்றமும் கணிக்கப்படுகிறது. எனவே அந்தக் கனவுகளை முழுவதுமாக நினைவு வைத்திருப்பது அவசியமாகிறது.

அகோரிகள் ஆரம்ப கட்டங்களில் கீழ்நிலை சக்திகளைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கீழ்நிலை சக்திகள் தங்கள் கட்டுப்பாட்டில் அவனைக் கொண்டு சென்று விடும். அந்தக் கீழ்நிலை சக்திகளை வசப்படுத்துவது ஆரம்பப்படியாகவே கருதப்படுகிறது. மேல்நிலை சக்திகளும் அவற்றைக் கடந்த மெய்ஞானமுமே வூடூவின் இறுதி லட்சிய நோக்கமாக இருக்கிறது. அகோரிகளின் தீட்சைக்கான பல சடங்குகள் நம் அதர்வண வேதச் சடங்குகளை ஒட்டியே இருக்கின்றன.

தீட்சை பெற்ற ஒருவன் தொடர்ந்து செய்யும் ஆரம்ப காலப்பயிற்சிகள் அவனுள் இருக்கும் பல அஞ்ஞான அழுக்குகளைக் களைவதற்கானவையாக இருக்கின்றன. உயர்ந்த சக்தி களைப் பெறும் போது உள்ளே தீமைகளும், எதிர்மறைத் தன்மைகளும் இருக்குமானால் அந்தச் சக்திகள் அவனையும் அழித்து அவன் மூலம் மற்றவர்களையும் அழிக்க உதவுவதாகி விடும். அதனால் எத்தனையோ அதீத சக்திகளை அகோரிகள் பெற ஆரம்பிப்பதற்கு முன் தங்களிடம் இருக்கும் தீமைகளையும், அஞ்ஞானத்தையும் அழித்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வது மிக முக்கியம் என்கிற உணர்வு அகோரிகளின் ஆன்மிகத்தில் ஆணித்தரமாக இருக்கிறது.

மக்கள் அவர்களை வழிபடுவதையும், அவர்களைத் தங்கள் கோரிக்கைகளுடன் வந்து வணங்கி வேண்டுவதையும் அகோரிகள் ஊக்குவிப்பதில்லை. அதனாலேயே அருவருப்பான தோற்றங்களுடன் அசுத்தமாக அவர்கள் வாழ்கிறார் கள். அதையும் மீறி அவர்களை நெருங்கினால் கடுமையான வார்த்தைகளால் திட்டுவதும், பயமுறுத்துவதும் உண்டு. நமது மக்களும் சக்தி வாய்ந்த மனிதர்கள் எங்காவது இருக்கிறார்கள் என்றால் உடனடியாக அவர்களிடம் சென்று ஏதாவது கேட்டுப் பயன்பெறலாமே என்ற எண்ணம் கொண்டவர்களானதால் அகோரிகள் பொது மக்களைத் தங்களிடம் வருவதை ஊக்குவித்தால் பொதுமக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதிலேயே அவர்கள் காலம் ஓடிவிடும். இது அவர்களின் மெய்ஞானத் தேடலுக்குப் பெரிய தடையாகவே இருக்கும் என்று அவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.

அகோரிகளைப் பொருத்தவரை இந்த உலகமே மயான பூமி தான். மரணமே தவிர்க்க முடியாத யதார்த்தம். அதை எப்போதும் நினைவுறுத்தும் சூழலிலேயே அவர்கள் வாழ்கிறார்கள். சுடுகாட்டுச் சாம்பலை உடலில் பூசிக் கொண்டு திரிவதும், நீர் அருந்துவதும் உணவு உண்பதும் கூட மண்டை ஓட்டில் தான். எந்த நேரத்திலும் மரணம் நேரலாம் மிஞ்சுவது ஏதுமில்லை என்கிற உண்மை உணர்வுநிலை மனிதன் மனதில் ஆழமாக எப்போதுமே இருக்குமானால் அவனால் தவறான வாழ்க்கை வாழ முடியுமா?

மேலோட்டமான பார்வைக்குத் தெரிகிறபடியே எதையும் தீர்மானிக்காமல் ஆழமாகப் பார்க்கும் கலையை அகோரிகளின் ஆன்மிகம் போதிக்கிறது. கண்ணுக்குத் தெரிவதல்ல நிஜம், மாயை காட்டும் வெளிப்படையான தோற்றங்களில் ஏமாந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையுடனேயே உண்மையான அகோரிகள் வாழ்கிறார்கள். அதே போல் எல்லாவற்றிலும் இறைவனையே அவர்கள் காண்பதால் எந்த அசுத்தமும், கோரமும் அவர்களை முகம் சுளிக்க வைப்பதில்லை. தங்களிடம் இருக்கும் அசுத்தங்களையும், தீமைகளையும் ஒருவன் முதலில் உள்ளது போலவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு அகோரிகளிடம் உண்டு. இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டால் தான் அதை மாற்றும் வழிகளைக் கண்டு மாற்றிக் கொள்ள முடியும். இல்லவே இல்லை என்று மறுத்தால் அந்தத் தீமையையும், அசுத்தத்தையும் நீக்கும் முயற்சியும் மனிதனிடம் இருக்காது அல்லவா?

அதே போல் பயமும் ஒரு அகோரி வெற்றி கொள்ள வேண்டிய ஒரு எதிர்நிலையாகக் கருதப்படுகிறது. எல்லாம் இறைவன் என்று அறிபவன் எதைக் கண்டுப் பயப்பட வேண்டும்? பயப்பட என்ன இருக்கிறது?

அப்படிப் பயம் இருக்குமானால் எல்லாம் இறைவன் என்கிற எண்ணம் மேற்போக்காக மட்டுமே இருக்கிறது, உண்மையில் உள்மனம் நம்பவில்லை என்றல்லவா அர்த்தம்? பயத்தை முற்றும் துறந்து வெற்றி கொள்ளவே ஒரு அகோரி பயங்கர சூழ்நிலைகளில் இருத்தப்படுகிறான்.  பயத்தைப் போக்கிக் கொள்ளும் வரையில் அவனால் மெய்ஞான மார்க்கத்தில் சுதந்திரப்பயணம் மேற்கொள்ள முடியாது என்பது ஆரம்பத்திலிருந்தே அவனுக்கு வலியுறுத்தப்படுகிறது.

அகோரிகளிடம் இருக்கும் போதைப்பழக்கம் பல ஆன்மிக வாதிகளுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு வி‌ஷயமாக இருக்கிறது. மது அருந்துதல், கஞ்சா புகைத்தல் போன்ற பழக்கங்கள் மெய்ஞானத்திற்கு எதிரானதல்லவா என்கிற கேள்வி நியாயமானதே. ஆனால் உண்மையான அகோரிகள் அந்தப் போதை வஸ்துக்கள் தரும் மயக்க நிலையிலும் தங்கள் உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் அதிலும் சில சூட்சும நிலைகளை எட்டுவதும் ஒரு பரீட்சையாகப் பார்க்கப்படுகிறது. அகோர மார்க்கத்தில் நுழையும் அகோரிகளிலும் கிட்டத்தட்ட 95 சதவீதம் பேர் இந்தப் பரீட்சையில் தோற்றுப் போய் போதைக்கு அடிமையாக வாழ்ந்து விடுகிறார்கள் என்பதே இன்றைய யதார்த்தம். அதனால் மீதமுள்ள ஐந்து சதவீதம் பேர் மட்டுமே உண்மையான அகோர நிலையை எட்ட முடிந்த வெற்றியாளர்கள். அதிலும் எத்தனை பேர் மெய்ஞான சித்தியடைகிறார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம். இது மிகவும் கடினமான மார்க்கமானதால், அகோர மார்க்கத்தில் நுழையும் பல்லாயிரக் கணக்கானவர்களில் ஒருவர் மட்டுமே அந்த உயர்நிலையை அடைய முடிகிறது என் கிறார் ஒரு வெளிநாட்டு ஆன்மிக ஆய்வாளர்.       

அகோரிகளில் பெரும்பாலானோர் ஆண்கள் தான் என்றாலும் குறைந்த சத வீதத்தில் பெண் அகோரிகளும் உண்டு. பாபா கினாராம், பகவான்ராம் பாபா போன்ற அகோரேஸ்வரர்கள் ஏற்படுத்திய சீர்திருத்தங்களால் காலத்திற்கேற்ப அகோர மார்க்கம் மாறுதல்கள் கண்டு எளிமையாக்கப்பட்டிருக்கின்றது. இந்தியா, நேபாளம் இரண்டு நாடுகளிலும் அகோரிகள் அதிகமாக இருக்கிறார்கள். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறைவான எண்ணிக்கையில் ஆங்காங்கே இருப்பதாகவும் சொல்கிறார் கள். பல விசித்திர பழக்க வழக்கங்களின் காரணமாக அகோர மார்க்கம் உலக நாடு களின் கவனத்தைக் கவர்ந்த வண்ணம் இருக்கிறது. சில திரைப்படங்களை அகோர மார்க்கத்தை மையப்படுத்தி  சில உலகநாடுகள் எடுத்திருக்கின்றன என்றாலும் 2006–ம் ஆண்டு  ஷிலீவீஸ்ணீ’s திறீமீsலீ என்ற பெயரில் எடுக்கப்பட்ட  கிரேக்க ஆவணப்படம் வாரணாசியில் அகோரிகளின் வழிமுறைகளை விரிவாகச் சித்தரிப்பதாக இருக்கிறது.

அடுத்த வாரம் இன்னொரு சுவாரசியமான அமானுஷ்ய ஆன்மிக முறையைப் பார்ப்போம்.

–தொடரும்.

Next Story