ஆன்மிகம்

குழந்தை வரம் அருளும் கலவை கமலக்கண்ணி + "||" + Child blessing kamalakanni

குழந்தை வரம் அருளும் கலவை கமலக்கண்ணி

குழந்தை வரம் அருளும் கலவை  கமலக்கண்ணி
தமிழ்மாதங்களில் ஒன்றான ஆடி அம்மனுக்குரிய மாதமாக போற்றப்படு கிறது.
பூமாதேவி அம்மனாக பூமியில் அவதரித்தது ஆடி மாதத்தில் என்பதால் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

காற்றும், மழையும் ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். காற்றை காளியும், மழையை மாரியம்மனும் கட்டுப்படுத்துகின்றனர். இதனால் அம்மன் அருள் வேண்டி ஆடி, வெள்ளிக்கிழமைகளில் அம்பிகை வழிபாடு நடைபெறுகிறது.

திருமணம் ஆகாத பெண்கள் இந்த மாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமை காலை தங்களுக்குரிய நல்ல கணவர் கிடைக்க வேண்டி கோவிலுக்கு சென்று கூழ்வார்த்து வழிபட்டு வருகின்றனர். ஆடி மாதம் முழுவதும் அம்மனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் அம்மனை வழிபட்ட பலன் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

ஆடி மாதம் அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு பூஜைகள் முடிந்த பிறகு அந்த வளையல்களை வாங்கி அணிந்து கொண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆடி மாதத்தில் மாரியம்மன் கோவில் களில் விசே‌ஷமான பூஜைகளும், விழாக் களும் நடைபெறும்.

வேலூர் மாவட்டம் கலவையில் உள்ள கமலக்கண்ணி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்படும். வருகிற 21–ந் தேதி ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை வரு கிறது. அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வருவர். கூழ் ஊற்றுதல், அன்னதானம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறும். மேலும் பக்தர்கள் பூங்கரகம் எடுத்து வருவர். அன்று மாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பாம்பு புற்றில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்திக்கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வருவர். இரவு சுவாமி வீதி உலா நடைபெறும்.

கமலக்கண்ணி என்ற பெயரானது தாமரை போன்ற திருவிளங்கும் கண்களை உடையவள் என்று பொருள்படும். கலவையில் கமலக்கண்ணி அம்மன் நின்ற கோலத்தில் சாந்தரூபமாக காட்சி அளிக்கிறார்.

தல வரலாறு

மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி என பல்வேறு திருநாமங்களோடு அகில உலகங்களுக்கும் தாயாகி நின்று காத்து அருளுகின்ற பராசக்தி கமலக்கண்ணி என்ற நாமம் தாங்கி அருளாசி புரிந்து வருகிறார். இந்த கமலக்கண்ணி அம்மன் செஞ்சிக்கோட்டையை ஆண்ட மன்னர் பரம்பரையின் குல தெய்வம் ஆவார்.

செஞ்சிக்கோட்டையில் கமலக்கண்ணி அம்மனுக்கு தனி ஆலயம் உள்ளது. செஞ்சியை ஆண்ட மன்னன் தேசிங்குராஜன் போர்புரிய படையெடுத்து செல்வதற்கு முன் இந்த ஆலயத்திற்கு வந்து அம்மன் சன்னிதியில் தன் வாளை வைத்து வணங்கி விட்டு செல்வதை வழக்கமாக வைத்து இருந்தார்.

ஒரு காலகட்டத்தில் ஆற்காடு நவாப் செஞ்சிக்கோட்டை மீது படையெடுத்து சென்று கோட்டையை கைப்பற்றிக் கொண்டார். அங்கு இருந்த கோவிலை இடித்து சாமி சிலைகளை அழித்து விட்டார்கள். கமலக்கண்ணி ஆலயத்தை அவர்கள் இடிக்க முற்பட்ட போது மலைத்தேனீக்கள் படையெடுத்து வந்து படைவீரர்களை தாக்க அவர்கள் ஆலயத்தை இடிக்கும் முயற்சியை கைவிட்டனர்.

பகைவர்களின் படையெடுப்பால் செஞ்சிக்கோட்டை சிதைந்து விட்ட நிலையில் அன்னையின் கோவில் மட்டும் பகைவரிடம் இருந்து தப்பியது. செஞ்சிக்கோட்டை அழிவுக்கு பிறகு மன்னர் பரம்பரையை சேர்ந்தவர்கள் வேலூர் மாவட்டம் கலவைக்கு வந்தனர். அவர்கள் புறப்படும் முன்பு கமலக்கண்ணி ஆலயத்தில் இருந்து பிடிமண் எடுத்து வந்து கலவையில்  கமலக்கண்ணி ஆலயத்தை சச்சிதானந்த சுவாமிகள் முன்னிலையில் கட்டி முடிக்கப்பட்டது.

செஞ்சிக்கோட்டையில் உள்ள ஸ்ரீகமலக்கண்ணி ஆலயம் முன்பு பலிபீடம் உள்ளது. அங்கு எருமைக்கடா, பன்றி ஆகிய வற்றை பலி கொடுத்து வந்தனர். கலவை கமலக்கண்ணி ஆலயத்தில் சச்சிதானந்த சுவாமிகள் உயிர்ப்பலியை தவிர்த்து அம்மனுக்கு சைவ நைவேத்தியமே செய்து வருகிறார்.

குழந்தை வரம்

நீண்டகாலம் குழந்தை இல்லாத தம்பதியர்கள் கலவை கமலக்கண்ணி ஆலயத்திற்கு வந்து தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து, அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு அம்மன் அருளால் குழந்தைப்பேறு கிடைக்கப்பெறுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு குழந்தை வரம் கிடைக்கப்பெற்றவர்கள் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை குழந்தையுடன் கோவிலுக்கு வந்து பால்குடம் எடுத்தும், கூழ்வார்த்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

பெரியாண்ட நாயகி அம்மன்

கோவில் கருவறை முன்பு 8 திருக்கரங்களுடன் பெரியாண்ட நாயகி அம்மன் படுத்து இருக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும். இவருக்கு மூலவருக்கு நடைபெறு வதை போன்று பூஜைகள் நடைபெறும். ஏவல், பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மனிடம் பிரார்த்தனை செய்வர். விநாயகர், துர்க்கை அம்மனுக்கு என தனி சன்னிதிகள் உள்ளன.

வழியும் – தூரமும்


கலவை கமலக்கண்ணி ஆலயம் வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.
–செந்தூர் திருமாலன்.

குறைகள் நீக்கும் கோவிந்தா நாமம்

கலவை கமலக்கண்ணி அம்மன் சக்தியின் வடிவமாகவும், அளவற்ற கருணையும் உடையவராகவும் காட்சி தருகிறார். மனக்கவலை, பில்லி, சூனியம், ஏவல், குடும்ப கஷ்டங்கள், உடல் நலக்குறைவு, மனநலம் பாதிப்பு ஆகிய எந்த குறை என்றாலும் பக்தர்கள் கோவிலில் கமலக்கண்ணி அம்மனை வழிபட்டு, சச்சிதானந்த சுவாமிகளை சந்தித்து குறைகளை வெள்ளை தாளில் எழுதி கொடுப்பர்.

சுவாமிகள் அக்குறைகள் நீங்கி நலம் பெரும் வழியை எழுதிக்கொடுக் கிறார். தேவைப்பட்டால் ஒரு சில நாட்கள் கோவிலில் தங்க சொல்கிறார். சில நாட்களில் அம்மன் அருள் அவருக்கு வந்து ‘‘கோவிந்தா’’, ‘‘கோவிந்தா’’, ‘‘கோவிந்தா’’ என்று குரல் கொடுக்கிறார். அப்போது  அம்மன் அருளால் நமது குறைகள் நீங்கி விடுகிறது என்கிறார்கள்.

கூழ்  படைப்பது  ஏன்?

தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்ச்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்காமல் ஜமத்கனி முனிவரின் மனைவி ரேணுகா தேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார். அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தான். தீக்காயங்களால் ரேணுகாதேவிக்கு உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்ப மர இலையை பறித்து ஆடையாக அணிந்து கொண்டார். ரேணுகா தேவிக்கு பசி அதிகம் ஆனதால் அருகில் இருந்த கிராமமக்களிடம் சென்று உணவு கேட்டார். அதற்கு அவர்கள் பச்சரிசி மாவு, வெல்லம், இளநீர் ஆகியவற்றை வழங்கினர்.

இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவு அருந்தினார். அப்போது சிவபெருமான் தோன்றி ரேணுகாதேவியிடம் உலக மக்கள் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரம் ஆகும் என்று வரம் அளித்தார். இந்த சம்பவத்தை நினைவு கூரும் விதத்தில் தான் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ்வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.