ஆன்மிகம்

மனிதம் வெல்லட்டும்! + "||" + Humanity must prevail!

மனிதம் வெல்லட்டும்!

மனிதம் வெல்லட்டும்!
எங்கிருந்து மனிதநேயம் வெளிப்பட்டாலும் அதை வரவேற்க வேண்டும்.
னிதம் என்பது மனிதநேயத்தை குறிக்கும் ஒரு வளமான சொல். மனிதநேயம் என்பது புனிதம் நிறைந்த செயல். புண்ணியம் தேடி புனிதம் அடைய நினைப்பவர்கள், மண்ணில் மனிதனை நாடி கருணை உள்ளத்துடன் நடந்து கொண்டாலே போதும் புண்ணியம் கோடி கிடைக்கும்.

அன்பு என்பது இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் அன்னியோன்யம், ஆறுதல், நேர்மறை உணர்வு, இரக்க சிந்தனை, கருணை உள்ளம், சமூக அக்கறை, என்றும் அன்புடன் நடந்து கொள்ளும் முறை. இவற்றுக்கு மனிதம் என்றும், மனிதநேயம் என்றும் போற்றப்படுகிறது. 

இவற்றிலுள்ள அம்சங்கள் சக மனிதர்களிடையே பரிபூரணமாக பரிமாறப்பட்டால் மனித நேயம் என்றும் பசுமையாக இருக்கும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் மனிதநேயத்தில் விரிசல் ஏற்பட்டுவிடும்.

அனைத்து மதங்களும், சமயங்களும், கோட்பாடுகளும் மனிதநேய சிந்தனைகளை விதைத்திருக்கின்றன. விதைகளும், வேர்களும் என்றும் மறைந்துதான் இருக்கும். அதன்மேல் வளரும் கிளைகளும், பூக்களும், கனி வகைகளும் காட்சி தருகின்றன. அனைத்து மதத்தவர்களும் கிளைகள், பூக்கள், கனி வகைகள் போன்று பார்ப்பவர்களுக்கு என்றும் பசுமை மாறாமல் கண்கவர் காட்சியையும், கண்குளிர்ச்சியையும் தருவது அவர் களின் தார்மீக பொறுப்பாகும்.

இஸ்லாத்தில் மனிதநேயம் என்பது உயர்வானது. மேலும் மற்ற கோட்பாடுகளை விடவும் வித்தியாசமானது. ஒரு மனிதனை வாழவைப்பதும், அவனது வாழ்க்கைக்கு முடிந்தளவுக்கு உதவி புரிவதும், அவனுக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து அவனை விடுவிப்பதும்தான் இஸ்லாமிய மனித நேய கோட்பாடுகளாக கருதப்படுகின்றன.

‘ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால், அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ (திருக்குர்ஆன் 5:32)

‘ஒரு பெண் போர்க்களம் ஒன்றில் கொல்லப்பட்டு கிடந்தாள். இதைக்கண்ட நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் பெண்களையும், குழந்தைகளையும் படுகொலை செய்வதை தடை செய்தார்கள்’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), புகாரி : 3015)

‘எவரொருவர் தமது சகோதரருக்கு ஏற்படும் உலக துன்பங்களிலிருந்து அவரை விடுவிக்கிறாரோ, அவரை இறைவன் அவருக்கு ஏற்படப்போகும் மறுஉலக துன்பங்களிலிருந்து விடுவிக்கின்றான்; மேலும், தமது சகோதரருக்கு உதவிபுரியும் காலமெல்லாம், அவருக்கு இறைவன் உதவி புரிந்து கொண்டேயிருப்பான் என நபி (ஸல்) கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா, நூல் – அஹ்மது).

‘கருணையாளர்களின் மீது இறைவன் கருணை செலுத்துகின்றான். எனவே, நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானில் உள்ளவர்கள் உங்கள் மீது கருணை காட்டுவார்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அமர் (ரலி), நூல்: அபூதாவூத், திர்மிதி)

‘மக்கள் மீது கருணை காட்டாதவன் மீது, அவன் மீது இறைவன் கருணை காட்டமாட்டான்’ என நபி (ஸல்) கூறினார்கள்.  (நூல்: புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் தமக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்ட பிறகு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்து சத்தியத்தை உரக்கச் சொன்னார்கள்; ஆன்மிகத்தை அழகாக எடுத்துக் கூறினார்கள். ஆனாலும், அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனினும் மதீனாவிற்குச் சென்று முதன்முதலாக மதத்தைப் பற்றி குறிப்பிடாமல் மனிதத்தைப் பற்றி, மனித நேய கோட்பாடுகளைப் பற்றி எடுத்துரைத்தார்கள். அதில் மகத்தான வெற்றியை அடைந்தார்கள். 

மக்களை நபி (ஸல்) அவர்கள் மதத்தால் அதிகம் கவர்ந்ததை விட மனிதத்தால், மனித நேயத்தால் தான் அதிகம் கவர்ந்தார்கள் என்பது நிதர்சனமான உண்மை. நபி (ஸல்) அவர்கள் அப்படி என்ன மனிதநேயத்தை போதித்தார்கள்?

‘மக்களே! அமைதியை பரப்புங்கள், பசித்தவருக்கு உணவளியுங்கள், உறவுகளுடன் உறவாடுங்கள். பிறகு, மக்கள் துயில் கொண்டிருக்கும் வேளையில் இறைவனை தொழுங்கள். சாந்தமான முறையில் சொர்க்கத்தில் நுழைவீர்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் ஸலாம் (ரலி) நூல்: அஹ்மது, திர்மிதி)

அமைதிக்கும், பசிக்கும் சாதி, மதம் தெரியாது. உறவாடுவதற்கும் சாதி, மதம், பேதம் காணக்கூடாது. இம்மூன்று அம்சங்களிலும் முதன்மையாக கவனிக்க வேண்டியவை மனிதநேயம் மட்டுமே. 

இதைத்தான் நபி (ஸல்) அவர்களும் பேணி, மதத்தைவிட மனிதத் தன்மைக்கும், மனித நேயத் தன்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். மனிதநேயம் தான் நபியின் வாழ்விலும், திருக்குர்ஆனிலும் நிறைவாக காணப்படுகின்றன. திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள அத்தகைய மனிதநேய சிந்தனைகள் சிலவற்றை பார்ப்போம்.

‘எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமல் இருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே பயபக்திக்கு மிகவும் நெருக்கமானது’. (5:8)

‘இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் இறைவனின் வார்த்தை களைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக. பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக, அவர்கள் அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்’. (9:6)

‘இணை கற்பிப்போரில் நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்து, அவர்கள் (அவ்வுடன்படிக்கையில்) உங்களுக்கு எந்தக்குறைவும் செய்யாமலும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கிறார்களோ அவர்களைத் தவிர, அவர்களிடம் அவர்களின் உடன்படிக்கையை அதற்குரிய காலக்கெடு வரை முழுமைப்படுத்துங்கள். இறைவன் (தன்னை) அஞ்சுவோரை நேசிக்கிறான்’. (9:4)

‘நன்மையும், தீமையும் சமமாகாது, நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உங்களுக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்’. (திருக்குர்ஆன் 41:34)

மேற்கூறப்பட்ட அம்சங்கள் அனைத்தும் திருக்குர்ஆனில் இடம்பெற்ற மனிதநேய சிந்தனைகளாகும். இன்னும் இதுபோன்ற எண்ணற்ற மனிதநேய கருத்துகள் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. மதங்கள் வெற்றிபெறாத இடங்களில் மனிதமும், மனிதநேயங்களும் வெற்றிவாகை சூடியுள்ளன. மண்ணில் மனிதாபிமானங்கள் இருக்கும் வரைக்கும் மனித நேயங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். 

எங்கிருந்து மனிதநேயம் வெளிப்பட்டாலும் அதை வரவேற்க வேண்டும். அன்பும், கருணையும், இரக்கமும் மனித உள்ளங்களில் இருக்கும் வரைக்கும் மனிதநேயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். மாபாதகம் மறைந்து கொண்டு தான் இருக்கும். உலக முடிவு நாள் வரைக்கும் மனித நேயத்தை இஸ்லாம் ஆதரிக்கும், மாபாதகத்தை எதிர்க்கும். 

மனிதம் வெல்லட்டும், மனிதநேயம் சிறக்கட்டும், மாபாதகம் மண்ணோடு புதையட்டும்.

மவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.

ஆசிரியரின் தேர்வுகள்...