சமூகப் பொறுப்புணர்வு அவசியம்


சமூகப் பொறுப்புணர்வு அவசியம்
x
தினத்தந்தி 31 July 2017 11:30 PM GMT (Updated: 31 July 2017 12:59 PM GMT)

சமூகப் பொறுப்புணர்வு என்றால் என்ன..? பல பரிணாமங்களில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இஸ்லாம்

மூகப் பொறுப்புணர்வு என்றால் என்ன..?

பல பரிணாமங்களில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. உண்மையில் மனிதனை அல்லாஹ் தனித்து இயங்கும் ஒரு உயிரினமாகப் படைக்கவில்லை. மாறாக அவன் ஒரு சமூகப் பிராணி. எனவே தம்முடைய அனைத்து தேவைகளுக்காகவும் அவன் பிற மனிதனைச் சார்ந்தே வாழவேண்டியுள்ளது.

இந்த அடிப்படையில் அவனுடைய எண்ணங்கள், செயல்கள், சொற்கள், ஏனைய விவகாரங்கள் அனைத்தும் பிற மனிதரிடம் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொண்டே தீரவேண்டும்.

அதாவது, அவனது செயல்கள் சமூகத்திற்கு நன்மை பயக்குமா? அல்லது தீமை பயக்குமா? என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். சமூகத்தில் அதன்மூலம் ஏற்படும் தாக்கத்தைப் பொறுத்தே அச்செயல் சமூகப் பொறுப்புணர்வு மிக்க செயலா? அல்லது பொறுப்புணர்வற்ற செயலா? என்று பாகுபடுத்த முடியும்.

இஸ்லாம் மூன்று வி‌ஷயங்களை பெரும் பாவச்செயல்களாகக் கருதுகிறது.

ஒன்று ‘இக்னரன்ஸ்’ எனும் பொடுபோக்கு. இதன் பொருள் அறியாமை அல்ல. ‘நடப்பது நடக்கட்டும் நமக்கு என்ன?’ என்ற அலட்சிய மனோபாவம் தான் பொடுபோக்கு ஆகும்.

உலகிலேயே அதிக அறிவு கொடுக்கப்பட்டவன் இப்லீஸ். அவனது செயல்கள் அனைத்தும் அறியாமையில் வெளிப்பட்ட செயல்கள் அல்ல. மாறாக அலட்சியத்துடன் வெளிப்பட்டவை. ஆகவேதான் அவன் சபிக்கப்பட்டவனாக மாறினான்.

அவ்வாறே அபூஜஹ்ல் என்பவனும். அவன் ‘அபுல்ஹிகம்’ என்று அழைக்கப்பட்டவன். அதாவது ‘அறிவின் தந்தை’ என்று பொருள். ஆனால் அவனது செயல்கள் அனைத்தும் சமூகத்திற்கு எவ்விதத்திலும் நன்மை தரவில்லை. ஆகவேதான் அவன் அபூஜஹ்ல் – ‘மடமையின் தந்தை’ என்று சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டான்.

இரண்டாவது ‘அரொகன்ஸ்’ எனும் அகம்பாவம். ஏனைய மனிதர்களைத் தன்னைவிட கேவலமாகக் கருதுவது.

மூன்றாவது ‘அக்ரெ‌ஷன்ஸ்’ எனும் ஆதிக்கம். தன்னுடைய சுய லாபத்திற்காக மற்றவர் மீது வலுத்தாக்குதல் நடத்துவது.

எனவே இந்த மூன்றும் பெரும்பாவங்கள் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறது. திருக்குர்ஆனின் இந்தப் பார்வை சமூகப் பொறுப்புணர்வு சம்பந்தப்பட்டது எனலாம்.

இந்த மூன்று பண்புகளும் சமூகப் பொறுப்புணர்வு அற்றவர்களிடமிருந்தே வெளிப்படும்.

எல்லா விவகாரங்களிலும் மனிதன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் கற்றுத்தருகிறது. வீதியில் நடக் கிறீர்கள். அங்கே ஒரு கல் கிடக்கிறது. அதை உடனே அப்புறப் படுத்துகிறீர்கள். அதுதான் சமூகப் பொறுப்புணர்வு. ‘அதேசமயம்... வீதியில் செல்வோரைக் கவனிக்காமல் அந்தக் கல்லைத் தூக்கி எறிந்துவிடுகின்றீர்கள். அது பின்னால் வந்துகொண்டிருக்கும் ஒருவரின் மண்டையை உடைக்கிறது என்றால் அதுதான் அக்ரெ‌ஷன்ஸ்.

ஆகவே செயல் மட்டுமல்ல.. அதன் விளைவும் சமூகப் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கருதுகிறது.

மனிதனைப் பொறுத்தவரை பொதுவாகவும், முஸ்லிமைப் பொறுத்தவரை குறிப்பாகவும், எந்த நேரத்திலும் அவனது சொல், செயல், எண்ணங்களால் மற்றவர்களுக்கு துன்பம் வரும் அளவுக்கு ஒருபோதும் நடந்துகொள்ளக் கூடாது. தன்னைக் குறித்து மட்டும் சிந்திக்காமல் பொதுநலனுடன் சிந்திப்பவனாகவே ஒரு முஸ்லிம் இருப்பான்.

நான் பேசும் பேச்சால் எவருடைய உள்ளமாவது புண்படுமா..? எனது நடத்தையால் எவராவது காயப்படுவார்களா..? தொந்தரவாக அமையுமா..? என்றெல்லாம் யோசித்து சிந்தித்து செயல்படும் ஒரு மனிதனையே நாம் சமூகப்பொறுப்பு மிக்க பண்பாளன் என்று கூறுகின்றோம்.

‘யாரெல்லாம் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவர்கள் தங்களது அண்டை வீட்டாருக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது சமூகப் பொறுப்புணர்வின் ஓர் அங்கமாகும். அதாவது ஒருவரிடம் இறைநம்பிக்கை இருப்பதற்கான அடையாளம் மற்றவருக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதாகும் என்று பொருள்.

எனவே ஒருவன் அடுத்தவனைத் தொந்தரவு செய்கிறான் என்றால் அவன் ‘சமூகப் பொறுப்புணர்வு அற்றவன்’ என்பதுடன் ‘இறைநம்பிக்கை அற்றவன்’ என்றும் பொருள்.

ஆகவே ஒரு முஸ்லிம் எப்போதும் தமது பேச்சால் தமது செயலால் யாருக்காவது தொந்தரவு ஏற்படுகிறதா என்பது குறித்து யோசித்தவண்ணம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

இந்த சமூகப் பொறுப்புணர்வு யார் மீது கடமை?

இந்த சமூகப் பொறுப்புணர்வு எவ்வாறு பார்க்கப்படவேண்டும் என்றால்.. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உயிர் உள்ளது. அந்தச் செயல் வளரும். சிலபோது அது மறுமை வரை வளர்ந்துகொண்டே இருக்கும். அதாவது நாம் செய்யும் ஒரு சின்ன செயலும், ஒரு குளத்தில் கல்லெறியும்போது உருவாகும் அலைகளைப் போன்று சமூகத்தில் பெரிய அதிர்வுகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அதுதான் நமது செயலின் உயிர். சிலபோது அந்த செயல் வளர்ந்துகொண்டே இருக்கும். நல்லதோ கெட்டதோ அது மறுமை வரை நீண்டு செல்லும்.

இதனை இவ்வாறு எளிமையாக கூறலாம். நீங்கள் ஒரு வீதியில் நடக்கின்றீர்கள். கண்களுக்கு முன்னால் ஒரு ஆணி கிடக்கிறது. அந்த ஆணியை கவனமாக நீங்கள் அப்புறப்படுத்துகின்றீர்கள். இது சமூகப் பொறுப்பு மிக்க செயல்.

அதேவேளை அந்த ஆணியைக் கண்ணால் கண்டபின்னரும் அப்புறப்படுத்தவில்லை என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்குப் பின்னால் ஒரு மனிதர் நடந்து வருகிறார். அவரது காலில் அந்த ஆணி குத்திவிடுகிறது. அவர் சர்க்கரை நோயாளி. அவருடைய  கால் புண்ணாகி அழுகி காலை வெட்டும் சூழல் ஏற்படுகிறது. அதனால் அவர் இறந்து போகிறார்.

இதன் காரணமாக அவரது பிள்ளைகள் அநாதைகள் ஆகின்றனர். கவனிக்க ஆட்கள் இல்லாமல் அந்த பிள்ளைகள் மோசமான பிள்ளையாக வளருகின்றனர். அந்த பிள்ளைகளின் காரணத்தால் சமூகத்தில் பெரிய தீமைகள் ஏற்படுகின்றன.

இவ்வாறு நடக்கிறது என்றால் இதன் வேரைத் தேடிக்கொண்டே வந்தால் எங்கு சென்று முடியும்..? அந்த சமயத்தில் வீதியில் கிடந்த அந்த ஆணியை நீங்கள் எடுத்துவிட்டிருந்தால் இவ்வளவும் நடக்காமல் இருந்திருக்கலாம்.

ஒரு செயலை செய்யாமல் விட்டதால் அது எவ்வாறு மாறுகிறது. செய்திருந்தால் எவ்வாறு மாறி நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இதையே இஸ்லாம் ‘சதகத்துல் ஜாரியா’ என்று (நிரந்தர தர்மம்) கூறுகிறது.

ஒரு விளக்கைக் கொண்டு எத்தனையோ ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றமுடியும் என்பதைப் போல்தான் இதுவும். நாம் கற்றுக்கொடுக்கும் கல்வி எவ்வாறு வாழையடி வாழையாக நன்மை பயக்குமோ அவ்வாறே நமது ஒவ்வொரு செயலும் சமூகத்தில் உயிருள்ளதாக மாறி உருப்பெற்று நிற்கும். இதுதான் சமூகப் பொறுப்பு.

மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

Next Story