ஆன்மிகம்

22. வரலாற்றுப் பக்கங்களில் ஷாமனிஸ நிகழ்வுகள்! + "||" + Shamanic events in historical pages!

22. வரலாற்றுப் பக்கங்களில் ஷாமனிஸ நிகழ்வுகள்!

22. வரலாற்றுப் பக்கங்களில்  ஷாமனிஸ  நிகழ்வுகள்!
ஷாமனிஸம் என்கிற மிக மிகப்பழமையான ஆன்மிக வழிமுறை பற்றிய நிகழ்வுகள், வரலாற்றுப் பக்கங்களில் விவரமாகவும், சுவாரசியமாகவும் பதிவாக்கப்பட்டிருக்கின்றன.
ஷாமனிஸம் என்கிற மிக மிகப்பழமையான ஆன்மிக வழிமுறை பற்றிய நிகழ்வுகள், வரலாற்றுப் பக்கங்களில் விவரமாகவும், சுவாரசியமாகவும் பதிவாக்கப்பட்டிருக்கின்றன. அவை அக்கால ஷாமனிஸம் சடங்குகள் குறித்த நேரடி அனுபவங்களாக இருக்கின்றன. சம்பந்தப்பட்ட வரலாற்றாசிரியர்கள் வெளியாட்களாகவே இருந்ததால், அவற்றில் விருப்பு, வெறுப்புக் கலவைகள் இருக்கவில்லை. அவற்றைப் படிப்பதன் மூலம் ஷாமனிஸத்தின் வித்தியாசமான பன்முகத் தன்மைகளை நாம் அறிந்து கொள்ளலாம்.


நார்வே நாட்டின் வரலாறான   Historia Norwegiae   என்ற லத்தீன் மொழி நூலில், பெயர் அறியாத ஒரு துறவியால், 1220–ம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த பழங்கால நூலில் நார்வேயின் கிழக்குப் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் வரலாற்றோடு பிணைந்து குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்தப் பகுதியில் ஒரு பெண்ணை யாரோ மறைமுகமாக ஏதோ மாந்திரீக வழியில் தாக்கியுள்ளனர். இதில் அந்தப் பெண் மயக்கம் அடைந்து விட, அவளைச் சுய   நினைவுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் தோல்வி அடைகின்றன. கடைசியில் அவளைக் காப்பாற்ற இரண்டு ஷாமன்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இருவரும் வந்த பிறகு திறந்த வெளியில் அந்தப் பெண் வெள்ளை நிறத் துணி விரிப்பில் கிடத்தப்படுகிறாள். இரண்டு ஷாமன்களும் மத்தளம் அடித்து, ஆடிப்பாடி மந்திரங்கள் ஜெபித்தபடி அவளைச் சுற்றி வருகிறார்கள். கடைசியில் இருவரும் ஒருவித மயக்க நிலையை அடைகிறார்கள். இந்த நிலையில் தான் ஷாமன்கள், அமானுஷ்ய வி‌ஷயங்களை அறிந்து கொள்கிறார்கள். ஆனால் அந்த மயக்க நிலையிலேயே ஒரு ஷாமன் இறந்து விடுகிறார். இன்னொரு ஷாமன் அந்தப் பெண்ணைக் குணப்படுத்தும் வழியை அறிந்து அவளைக் காப்பாற்றி விடுகிறார். சுயநினைவுக்குத் திரும்பிய அவருக்கு எந்தப் பாதிப்பும் இருக்கவில்லை. அந்தச் சம்பவத்தில் அந்தப் பெண்ணின் ஆன்மாவை அந்த ஷாமன் காப்பற்றி விட்டதாக சுற்றி இருந்த மக்களால் கருதப்பட்டது என்று அந்த வரலாற்றாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஷாமன், பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் சுறாமீன் உட்பட பல மிருகங்களாக உணர்வு நிலையில் மாறி விட்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தாராம்.

அடுத்த வரலாற்று நிகழ்வு கிரீன்லாந்து நாட்டின் வரலாற்று நிகழ்வுகளைக் கூறும்   Eiriks saga chronicles என்ற 1265–ம் ஆண்டுப் படைப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

நாட்டில் மழையே இல்லாமல் பஞ்சம் தலைவிரித்தாட, இனி மழை பெய்யும் என்ற நம்பிக்கைக்கே வழியில்லாத அறிகுறிகளும் தோன்ற, முக்கியஸ்தர்கள் சேர்ந்து அதுபற்றி விவாதிக்கிறார்கள். முடிவில் ஒரு பெண் ஷாமனை வரவழைக்கிறார்கள். அந்தப் பெண் ஷாமன் கருப்பு அங்கியும், கருப்பு ஆட்டின் தோலும், வெள்ளைப் பூனையின் தோலும் சேர்ந்து தைத்த தொப்பியும் அணிந்து கொண்டு வருகிறார். அந்த ஷாமனின் ஆலோசனைப்படி அங்கிருந்த பெண்கள் எல்லாம் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட பாடலைப் பாடியபடியே அவரைச் சுற்றி வருகிறார்கள். முடிவில் அந்த ஷாமன் தியான நிலையை அடைந்து விடுகிறார். அதுவரை அந்த மக்களுக்கு அருள்பாலிக்காத ஆவிகள் இப்போது மனமிரங்கி உதவ வந்திருப்பதாகச் சொல் கிறார். மேலும் தொடர்ந்து அந்த ஆவிகள் சொல்லும் ஆலோசனைகளைச் சொல்கிறார். கடைசியில் அந்த மக்கள் கேட்கும் மற்ற கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார். அந்த ஷாமன் கேட்டுச் சொன்ன ஆலோசனைப்படி சடங்குகள் செய்து சுமாரான மழை பெய்து பஞ்சம் நீங்கினாலும் பிற்காலத்தில் ஷாமனிஸ முறைகள் சூனியமாகக் கருதப்பட்டு தடை செய்யப்பட்டன என்கின்றன அந்த வரலாற்றுக் குறிப்புகள்.

கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் மங்கோலியப் பேரரசுக்கு ‘கியோவன்னி டா பியன் டெல் கார்பைன்’  (Giovanni da Pian del Carpine) என்ற இத்தாலியப் பாதிரியை, போப் நான்காம் இன்னசண்ட் அனுப்பி வைத்தார். மதத்தைப் பரப்பவும், நல்லிணக்கத்தோடு இருக்கவும் அனுப்பிய அந்தப் பயணம் வெற்றியில் முடியவில்லை என்றாலும், அக்காலத்தில் மங்கோலியாவின் நிகழ்வுகளை அந்தப் பாதிரியார் மிக விரிவாக எழுதியிருக்கிறார். செங்கிஸ்கானின் ஒரு பேரனான குயுக் என்பவனின் முடிசூட்டு விழாவை நேரடியாகக் காணும் வாய்ப்பும் அரச குடும்பம் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை நேரடியாகக் கண்டு பதிவு செய்யும் வாய்ப்பும் அந்தப் பாதிரியாருக்கு கிடைத்திருக்கிறது.

அங்கு ஷாமனிஸ முறைகளே அதிகம் பயன்படுத்துவதைக் குறிப்பிடும் அவர் இவ்வாறு கூறுகிறார். ‘அங்கு எல்லாமே அருள்வாக்குக் கேட்டே நடத்தப்படுகின்றன. சடங்குகளின் முடிவில் என்ன சொல்லப்படுகிறதோ அதையே அவர்கள் தெய்வ வாக்காக நம்புகிறார்கள். அதன்படியே எல்லாம் செய்கிறார்கள். அரசன் முதல் பாமரன் வரை அதை வணங்குகிறார்கள், மதிக்கிறார்கள். அதற்குப் பயப்படுகிறார்கள். சாப்பிடுவதற்கு முன்பு கூட முதலில் அதற்கு எடுத்து வைத்து விட்டுத்தான் சாப்பிடுகிறார்கள்.’

அதற்கு அடுத்தபடியாக வெனிஸ் நாட்டின் வர்த்தகரான மார்க்கோபோலோ சீனாவுக்குச் சென்று எழுதிய வரலாற்றுக் குறிப்புகளிலும், ஷாமனிஸ முறைகள் பற்றிய வர்ணனைகள் விரிவாக இருக்கின்றன. செங்கிஸ்கானின் இன்னொரு பேரனான குப்ளாய் கான் ஆட்சியின் போது சீனாவுக்குச் சென்ற மார்க்கோ போலோ அங்கு கடுமையாக நோய்வாய்ப்படும் மக்களைக் குணமாக்கும் விதம் பற்றிய வேடிக்கையை இப்படிச் சொல்கிறார்.

‘கடுமையான நோயால் பாதிக்கப்படுபவர்களை குணமாக்க, மேஜிக் நிபுணர்கள் போன்ற ஆட்கள் சிலர் வருகிறார்கள். அவர்கள் நோயின் தன்மைகளை நோயாளிகளிடமிருந்தும், அவர்களுடைய உறவினர்களிடமிருந்தும் விரிவாகப் பெறுகிறார்கள். பின் அவர்கள் அங்கேயே ஆடிப்பாடி சுற்றி சுற்றி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் மயங்கி விழும் வரை இந்த ஆட்டம் நடக்கிறது. மயங்கி விழும் நபர் வாயில் நுரை தள்ளி விழுந்து பின் அசைவில்லாமல் பிணம் போலவே கிடக்கும் போது, மற்றவர்கள் அவரைச் சூழ்ந்து அமர்ந்து கொண்டு ‘ஏன் அந்த நோயாளிக்கு நோய் வந்திருக்கிறது?, அதிலிருந்து தப்பிக்க நோயாளி என்ன செய்ய வேண்டும்?’ என்று கேள்விகள் கேட்கிறார்கள். ஏதோவொரு சக்தி அந்த நபர் உடலில் புகுந்து கொண்டு தங்களுக்குச் சொல்லும் என்று நம்புகிறார்கள். அப்படியே அந்த நபரும் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பிக்கிறார். அதைக் கேட்டுக் கொண்டு அந்த நோயாளியிடமும், உறவினர்களிடமும் தெரிவிக்கிறார்கள். அப்படிச் செய்யும் சடங்குகள் மேல் சக்திகளுக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் அமைந்தால் பிழைத்துக் கொள்வார் என்றும், அப்படித் திருப்தி அளிக்கத் தவறினால் இந்த சமயத்தில், இந்த விதத்தில் நோயாளி இறப்பார் என்றும் சொல்லி விட்டுப் போகிறார்கள்’

லியானல் வேபர்(Lionel Wafer) என்ற ஆங்கிலேய மருத்துவர் உலகச் சுற்றுப்  பயணம் மேற்கொண்டு அந்தப் பயண அனுபவங்களை   A New Voyage and Description of the Isthmus of America   என்ற நூலில் 1699–ம் ஆண்டு எழுதியிருக்கிறார். அதில் இப்போதைய பனாமா நாட்டுப் பகுதியின் அக்கால குணா மக்களைச் சந்தித்த போது ஏற்பட்ட ஷாமனிஸ அனுபவத்தை வியப்போடு விவரித்திருக்கிறார்.

‘நாங்கள் எங்களது அடுத்த பயணத்திற்காக, புதிய கப்பல் அந்தப் பகுதிக்கு எப்போது வரும் என்று அந்த மக்களிடம் கேட்டோம். அவர்களுக்குத் தெரியாது என்றும், விசாரித்துச் சொல்கிறோம் என்றும் சொன்னார்கள். அவர்கள் யாரை விசாரிப்பார்கள், எப்படி விசாரிப்பார்கள் என்று தெரியாமல் விழித்தோம். அவர்கள் ஆளனுப்பி ஒருவனை வரவழைத்துக் கேட்டார்கள். அவன் தன் ஆட்கள் சிலரையும் வரவழைத்தான். பிறகு அவனும் அவர்களும் சேர்ந்து மத்தளங்கள் அடித்தும், கூழாங்கற்களை உரசியும், சில மிருகங்கள் குரலில் ஊளையிட்டும், சில பறவைகள் குரலில் கிரீச்சிட்டும் ஏதோ சடங்குகள் செய்தார்கள். கடைசியில் மயான அமைதி நிலவ அனைத்தையும் நிறுத்தினார்கள். சிறிது நேரம் அமைதியாகவே இருந்தார்கள். பிறகு அறிந்து கொண்டதாகச் சொன்னவர்கள், அன்னியர்களான எங்களை வெளியே அனுப்பி விட்டு அங்குள்ள மக்களிடம் தகவல்கள் சொல்லி விட்டுப் போனார்கள். பின் நாங்கள் அந்த மக்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அவர்கள் சொன்ன நேரத்தில் சொன்ன விவரங்களின்படியே ஒரு கப்பல் வந்து சேர்ந்தது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்’

உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த துறவி, வரலாற்றுப் புதியவர், பாதிரியார், வணிகர், மருத்துவர் ஆகியோர் நேரடியாகக் கண்டு சொன்ன இந்த ஆச்சரிய சம்பவங்கள் ஷாமனிஸம் குறித்த ஆர்வத்தை அதிகப்படுத்துகின்றன அல்லவா?

ஷாமனிஸம் குறித்த மேலும் அமானுஷ்ய சுவாரசியங்களை அடுத்த வாரம்  பார்ப்போம்.

–தொடரும்.