பக்தி தரும் முக்தி


பக்தி தரும் முக்தி
x
தினத்தந்தி 8 Aug 2017 10:19 AM GMT (Updated: 8 Aug 2017 10:19 AM GMT)

கிருஷ்ணரிடம் பக்தி கொண்டு வாழ்பவர்கள், இவ்வுலக வாழ்வை நீத்தபின் வைகுண்ட லோகம் அல்லது கோலோகம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

ம்சனை அழிப்பதற்காக மதுரா நகருக்குள் நுழைந்தனர் கிருஷ்ணரும், பலராமரும். அவர்களை தடுத்து நிறுத்திய கம்சனின் பணியாளனை, கிருஷ்ணர் வதம் செய்தார். பின்னர் தொடர்ந்து தன் நண்பர்கள் மற்றும் பலராமருடன் கிருஷ்ணர் மதுராவின் வீதிகளில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கிருஷ்ணரின் பக்தனான தையல்காரன் ஒருவன், சில அழகிய ஆடைகளைத் தைத்துக் கொண்டு வந்தான். அந்த அழகிய உடைகளை, கிருஷ்ணருக்கும், பலராமருக்கும் கொடுத்தான். அதை அவர்கள் இருவரும் வாங்கி உடுத்திக் கொண்டிருந்தனர். அவர்களின் அழகுக்கு, அந்த ஆடை மேலும் அழகூட்டியது.

தையல்காரனின் செயல், கிருஷ்ணருக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. தன் பக்தனின் செயலை எண்ணி வியந்த இறைவன், அந்த தையல்காரனுக்கு ‘சாருப்ய முக்தி’ அளித்தார். அதாவது, அந்த பக்தன், உயிர் நீத்த பின், வைகுண்டத்தில் நான்கு கரங்களைக் கொண்ட நாராயணரின் ரூபத்தைப் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பான். மேலும் அவன் பூமியில் வாழும் காலம் முழுவதும், அவனது புலனின்பங்களை நன்கு அனுபவிப்பதற்குத் தேவையான செல்வங்களையும் பெறுவான்’ என்று கிருஷ்ண பகவான் அந்த தையல் காரனுக்கு வரம் அருளினார்.

கிருஷ்ணரிடம் பக்தி கொண்டவர்கள், இவ்வுலக இன்பங்களிலோ அல்லது புலன் திருப்தியிலோ குறைந்தவர்களாக மாட்டார்கள் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு நினைவு படுத்துகிறது. அப்படி கிருஷ்ணரிடம் பக்தி கொண்டு வாழ்பவர்கள், இவ்வுலக வாழ்வை நீத்தபின் வைகுண்ட லோகம் அல்லது கோலோகம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 

Next Story