தீயை விழுங்கிய கண்ணன்


தீயை விழுங்கிய கண்ணன்
x
தினத்தந்தி 8 Aug 2017 10:21 AM GMT (Updated: 8 Aug 2017 10:21 AM GMT)

கருணை கொண்ட கண்ணன், காட்டுத் தீ முழுவதையும் விழுங்கி, தன் ஊர் மக்களையும், பசுக்களையும் காப்பாற்றினார்.

ண்ணனின் லீலைகள் எண்ணிலடங்காதவை. அதில் ஒன்று காளிங்கன் நர்த்தனம். யமுனை நதியை நஞ்சாக்கிக்கொண்டிருந்த, காளிங்கனுடன் சண்டையிட்டு, அதன் தலை மீது நடனமாடினான் கிருஷ்ணன். பிறகு அந்த நாகத்தை யமுனையில் இருந்து வெளியேற்றி, கடலுக்குச் செல்ல உத்தரவிட்டான். காளிங்கன் மீது கண்ணன் நர்த்தனம் புரிவதைக் கேள்விபட்டு, கோகுலத்தில் வசித்த அனைவரும் யமுனை நதிக்கரையில் குவித்து விட்டனர். தாங்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வந்த யமுனை நதி தீர்த்தத்தை பாழாக்கி வந்த காளிங்கனை, கடலுக்கு அனுப்பிய கண்ணனின் பராக்கிரமத்தை எண்ணி வியந்து கொண்டிருந்தனர். இதில் அவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை.

இருள் சூழத் தொடங்கிவிட்டது. எனவே கிருஷ்ணரும், அவரது நண்பர்களும், மேய்ச்சலுக்காக ஓட்டி வந்த பசுக்களும், கன்றுகளும், அத்துடன் ஊர் மக்களும் இரவுப் பொழுதில் ஊருக்குள் செல்வது உகந்ததல்ல என்று முடிவு செய்தனர். இதையடுத்து யமுனை நதிக்கரையில் இருந்த வனப்பகுதியிலேயே தங்கியிருந்து இரவைக் கழித்து விட்டு, காலையில் வீடு திரும்ப நினைத்து, ஓய்வெடுக்கத் தொடங்கினர்.

நள்ளிரவில் திடீரென்று வனத்தில் காட்டுத் தீ பற்றிக்கொண்டது. மளமளவென்று காடு முழுவதும் பரவிய நெருப்புக்கு, கோகுலவாசிகள் மற்றும் பசுக்கள், கன்றுகள் அனைவரும் இரையாகி விடக்கூடும் சூழல் ஏற்பட்டது. நெருப்பின் உஷ்ணம் அனைவரையும் தகித்துக் கொண்டிருந்தது. அவர்கள் முழு முதற் கடவுளான கிருஷ்ணனை சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்று எண்ணினர்.

அதை உடனடியாக செயல் படுத்தினர். கிருஷ்ணனை எண்ணி பஜனை பாடத் தொடங்கினர். அந்த பஜனையின் வாயிலாக, ‘இறைவா! இந்த கொடூர நெருப்பில் இருந்து எங்களால் தப்பிக்க முடியாது. எங்களை காப்பாற்ற உன்னால் மட்டுமே முடியும். நாங்கள் அனைவரும் உன்னிடம் சரணடைகிறோம். எங்களை காப்பது உன்னுடைய கடமை. பலம் பொருந்திய பலராமரும், சிறப்பு மிகுந்த கிருஷ்ணருமே எங்களை காக்க வேண்டும். எங்களுக்கு வேறு புகலிடம் எதுவும் இல்லை’ என்று கூறி இறைவனிடம் சரணாகதி அடைந்தனர்.

கருணை கொண்ட கண்ணன், காட்டுத் தீ முழுவதையும் விழுங்கி, தன் ஊர் மக்களையும், பசுக்களையும் காப்பாற்றினார். அதற்குள் பொழுது புலர்ந்து விட, கிருஷ்ணரை சூழ்ந்து கோகுல வாசிகள் புகழ்பாடி வர அனைவரும் ஊரை நோக்கி புறப்பட்டுச் சென்றனர். 

Next Story