ஆன்மிகம்

மழலை பாக்கியம் தந்தருளும் ‘தவழும் கண்ணன்’ + "||" + Infant privilege Give creepy Kannan

மழலை பாக்கியம் தந்தருளும் ‘தவழும் கண்ணன்’

மழலை  பாக்கியம்  தந்தருளும்  ‘தவழும்  கண்ணன்’
‘குழல் இனிது யாழ்இனிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்பது வள்ளுவன் வாக்கு. குழந்தை பாக்கியம் இல்லாமை என்பது தசரதர் காலத்திலேயே இருந்திருக்கிறது.
திருக்கடையூர் அபிராமி அம்மனிடம் அபிராமி பட்டர், தமக்கு ‘கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், குன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணியில்லாத உடலும், சலியாத மனமும், அன்பகலாத மனைவியும், தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வராத கொடையும், தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஓர்துன்பமில்லாத வாழ்வும், துய்யநின் பாதத்தில் அன்பும் வேண்டும்’ என்று  பதினாறு வகை பேறுகளையும் வேண்டுகிறார்.

தனது வேண்டுதலில் ‘தவறாத சந்தானம்’ வேண்டும் என்று கேட்கிறார். அதாவது மற்றப் பேறுகள் எல்லாம் தவறினாலும் பாதகமில்லை; குழந்தை பாக்கியம் எனும் சந்தான பாக்கியம் தவறாமல் கிடைக்க வேண்டும் என்கிறார். சில தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உடனே கிடைத்து விடுகிறது. ஒரு சிலருக்கு ஒரு வருடமோ, இரண்டு வருடமோ, எட்டு, பத்து வருடங்களோ கழித்துதான் கிடைக் கிறது.

‘குழல் இனிது யாழ்இனிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்பது வள்ளுவன் வாக்கு. குழந்தை பாக்கியம் இல்லாமை என்பது தசரதர் காலத்திலேயே இருந்திருக்கிறது. தன்னுடைய குலகுரு வசிஷ்டரின் ஆலோசனையின்படி புத்திரகாமேஷ்டி யாகம் செய்துதான், தசரத சக்கரவர்த்தியே 4 புதல்வர்களைப் பெற்றுள்ளார்.

குழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோ‌ஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அவை சயன தோ‌ஷம், புத்திர தோ‌ஷம். இந்த தோ‌ஷங்கள் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உருவான கரு நிலையாக நில்லாது போதல் போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரும். இப்படிப்பட்ட சகல தோ‌ஷங்களுக்கும் அருமருந்தாக இருப்பது தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் திருக் கோவில் ஆகும். இங்கு கோகுலாஷ்டமியிலும்,        ஸ்ரீ ஜெயந்தி நாளிலும் கிருஷ்ணர் அவதார விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கண்ணன் தவழ்ந்து வரும் அழகை, அவனைப் பெற்ற தேவகிக்கு பார்க்க கொடுத்து வைக்கவில்லை. காரணம்.. அவள் சிறையில் இருந்தாள். நள்ளிரவில் சிறையில் கண்ணன் பிறக்க, அங்கிருந்து அன்றே இடம் பெயர்ந்து ஆயர்பாடியின் யசோதையிடம் வளர்க்கப்பட்டான். அதனால்தான் சிறுவயதில் கண்ணன் தவழும் திருக்கோலத்தை யசோதையும், அங்கிருந்த ஆயர்பாடி மக்களுமே கண்டு தரிசித்து  நற்பேறு பெற்றனர்.

சிறுகுழந்தை வடிவில் தவழும் திருக்கோலத்தில், தொட்டமளூர் திருத்தலத்தில் காட்சி தருகிறார் கண்ணன். அந்த ஆலயம் பற்றி தெரிந்து கொள்வோம்.

நான்காம் நூற்றாண்டில் ராஜேந்திர சிம்ம சோழன் எனும் மன்னன், இக்கோவிலைக் கட்டினார். ராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டுகள் இங்கும் காணப்படுகின்றன. கிழக்கு பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்சென்றால், மூலவர் தரிசனம் காணப்பெறலாம். இங்கு மூலவராக ராமஅப்ரமேயர் எழுந்தருளியுள்ளார். இந்தப் பெருமாளை, ராமர் வழிபாடு செய்ததாக கூறுகிறார் கள். ‘அப்ரமேயன்’ என்ற சொல்லுக்கு ‘எல்லையில்லாதவன்’ என்று பொருள். விஷ்ணு சகஸ்ரநாமத்தில் பெருமாளுக்கு ‘அப்ரமேயன்’ என்னும் திருநாமம் வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்து தனிச் சன்னிதியில் கிழக்கு பார்த்தவண்ணம், அரவிந்தவல்லி தாயார் அருள்பாலிக்கிறார். இவரை வெள்ளிக் கிழமை தோறும் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் செல்வம் சேரும். நவராத்திரி, வரலட்சுமி விரதம் முதலிய நாட்களில் தாயாருக்கு சிறப்பான திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெள்ளிக்  கிழமைகளில் மாலை வேளையில் இத்தல அரவிந்தவல்லி தாயாரை வில்வார்ச்சனை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் தரித்திரம், பீடை, வறுமை அகலும்.

அடுத்து பிரகாரவலம் வருகையில் கிழக்கு பார்த்த வண்ணம் கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு குழந்தை கிருஷ்ணர் தலையை திருப்பி, தவழும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுருட்டைத் தலை முடி, கழுத்தில் முத்துமாலை; அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு அணிந்து தவழும் அந்த நவநீத கிருஷ்ணன் அப்படியொரு அழகு. சாளக்கிராமக் கல்லில் உருவான இத்தல நவநீத கிருஷ்ணனை, மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். மகான் ராகவேந்திரர் இங்கு வந்து தங்கி வழிபாடு செய்துள்ளார்.

தொட்டமளூர் தவழும் குழந்தை கண்ணனை தரிசிக்க மகான் புரந்தரதாசர் வந்தபோது கோவில் மூடப்பட்டிருந்தது. உடனே அவர், வெளியில் இருந்தபடியே ‘ஜகத்தோதாரணா அடிசிதள யசோதா’ என்னும் கீர்த்தனையைப் பாட, கோவில் கதவு திறந்து கொண்டது. அப்போது நவநீத கிருஷ்ணன் சன்னிதியில் உள்ள கண்ணன், தமது தலையை திருப்பி புரந்தரதாசரை எட்டிப்பார்த்தான். அதனால்தான் இன்றும் இத்திருத்தல  சன்னிதியில் கண்ணன் தவழும் நிலையில் தலையை திருப்பி பார்த்தவண்ணம் இருப்பதாக கூறுகிறார்கள்.

இத்தல நவநீத கிருஷ்ணன் சன்னிதி வாசல் அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டு உள்ளது. புத்திர பாக்கிய தடை உள்ளவர்கள் இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபடுகிறார் கள். புத்திர பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்துகிறார்கள்.

தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில் களையும் கண்ணன் சன்னிதியில் நன்றி யுடன் சமர்ப்பித்து மகிழ்கிறார்கள்.

ஆலயத்தில் சுதர்சனர், நரசிம்மர், வேணுகோபாலர், மணவாள மாமுனிகள், ராமானுஜர், வேதாந்த தேசிகர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. ராஜகோபுரத்தின் எதிரில் ‘புரந்தரதாசர் மண்டபம்’ உள்ளது. புரந்தரதாசர் இங்கிருந்துதான் கண்ணன் கீர்த்தனையை பாடி தரிசனம் பெற்றார். இங்கு கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ராம நவமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசியில் விழாக்களும், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், தீபாவளி, சங்கராந்தி, ஏகாதசி, மாதாந்திர ரோகிணி நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகளும், திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சென்னப்பட்டினா என்ற ஊர். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தொட்டமளூர் அமைந்துள்ளது. சென்னை மைசூர் ரெயிலில் சென்று சென்னபட்டினா ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் பயணம் செய்தால், 10 நிமிடத்தில் கோவில் வாசலில் இறங்கலாம். இத்தலத்தின் அருகில் புராதன சிறப்பு மிக்க நதி நரசிம்மர் ஆலயம் உள்ளது.

–சிவ.அ.விஜய் பெரியசுவாமி.


தொடர்புடைய செய்திகள்

1. கணபதியின் தோஷம் போக்கிய கணபதீஸ்வரர்
மரகத முனிவரின் மனைவி விபுதை, அசுர குலத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு அசுர குணம் கொண்ட கஜமுகாசூரன் பிறந்தான்.
2. இந்த வார விசேஷங்கள் : 11-9-2018 முதல் 17-9-2018 வரை
11-ந் தேதி (செவ்வாய்)தேரெழுந்தூர், தேவகோட்டை, மிலட்டூர், திண்டுக்கல், திருவலஞ்சுழி, உப்பூர் ஆகிய தலங்களில் விநாயகப் பெருமான் திருக்கல்யாணம்.
3. விநாயகரின் 16 வடிவங்கள்
பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.
4. பொன்மொழி
நான் கூறும் ‘தேடல்’ என்பது நேர்வழி. மற்ற தியானங்களை விடச் சிறந்தது.
5. கேட்ட வரம் அருளும் வழித்துணை பாபா
மதங்களைக் கடந்து பலரும் வழிபடும் தெய்வமாக இருக்கிறார், சீரடி சாயிபாபா.