ஆன்மிகம்

வெற்றியைத் தரும் மல்லிகேஸ்வரர் + "||" + Mallikeshwar is a success

வெற்றியைத் தரும் மல்லிகேஸ்வரர்

வெற்றியைத் தரும் மல்லிகேஸ்வரர்
காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் திருக்கோவில்.
காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் திருக்கோவில். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.


தல வரலாறு

7–ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள், மாமல்லபுரத்தை துறைமுகப்பட்டினமாக கொண்டு ஆட்சி செய்தனர். அப்போது பல்லவ மன்னனின் அரசவையில் அமைச்சராக இருந்த பரஞ்ஜோதி என்பவர், இக்கோவிலை கட்டி ஒரு காலை பூஜை நடத்தி வந்ததாக கல்வெட்டுகளில் கூறப்படுகிறது. பல்லவர்கள் சாளுக்கியர்களுடன் போர் புரிந்தபோது, அமைச்சர் பரஞ்ஜோதி இந்த கோவிலில் தங்கள் மன்னன் நரசிம்மவர்ம பல்லவனுக்கு போரில் வெற்றி கிட்டவேண்டும் என்று சிறப்பு யாகம், பூஜை செய்து வழிபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் போர் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, காலை வேலையில் சிவலிங்கம் முன்பு பரஞ்சோதி தீவிர வழிபாட்டில் இருந்தாராம். அப்போது அவர் எதிரில் ஒரு நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியதாம். திடீரென அந்த பாம்பு மாயமாய் மறைந்ததாம். அன்று இரவு பரஞ்ஜோதியின் கனவில் சிவபெருமான் தோன்றி, ‘பக்தனே! நான்தான் சர்ப்பம் வடிவில் உன் முன் தோன்றினேன். சாளுக்கியர்களுடன் போரிடும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்’ என்றும், ‘நான் என்றும் உங்களுக்கு துணை நிற்பேன்’ என்றும் அருளாசி வழங்கியதாகவும் கல்வெட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வரலாற்று புகழ்வாய்ந்த இக்கோவில் கடந்த ஜூலை மாதம் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோவிலின் மூலஸ்தானத்தில் லிங்க வடிவில் மல்லிகேஸ்வரர் காட்சி தருகிறார். இந்த சிவலிங்கம் பல்லவர் காலத்தில் வடிவமைக்கப்பட்டதாகும். இக்கோவிலுக்கு வடக்கு திசையில் தாயார் மல்லிகேஸ்வரி அம்மனுக்கு தனி சன்னிதி உள்ளது. அதேபோல் எதிர் திசையில் நவக்கிரகங்களுக்கும் சன்னிதி உள்ளது.

ஆலயத்தின் தென் திசையில் வள்ளி–தெய்வானையுடன் கூடிய முருகர் சன்னிதி, வட திசையில் விநாயகர் சன்னிதியும், நடராஜர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் சன்னிதியும் இருக்கிறது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என நாயன்மார்கள் சன்னிதியும் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் எதிர்முனையில் வெள்ளியால் வேயப்பட்ட கொடி மரமும், நந்தி சிலையும் காணப்படுகிறது. தூண்களில் அழகிய வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. சுதை சிற்பங்களும் அதிகளவில் காணப்படுகின்றன.

சனிப் பிரதோ‌ஷம்

இக்கோவிலில் மாதந்தோறும் நவக்கிரக சன்னிதியில் உள்ள சனிபகவானை வணங்குவதற்காக சனிப்பிரதோ‌ஷம் அன்று ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். தங்களை பிடித்துள்ள ஏழரைசனி நீங்குவதற்காக அங்குள்ள சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பரிகாரம் செய்வர். நந்திசிலைக்கு பால் அபிஷேகம் செய்வர். திருமண தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிடைக்கவும் பரிகாரம் செய்வதுண்டு. அதேபோல் மகாசிவராத்திரி அன்று சுமங்கலி பெண்கள், பக்தர்கள் விரதமிருந்து, கண்விழித்து இங்குள்ள தட்சிணா மூர்த்திக்கு பால் அபிஷேகம், வில்வ இலை கொண்டும் வழிபடுவார்கள். அன்று விடியவிடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.

குறிப்பாக பிரதோ‌ஷ நாள் அன்று மல்லிகேஸ்வரர், மல்லிகேஸ்வரி மற்றும் நவக்கிரகங்கள், விநாயகர், முருகர், நடராஜர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு மாலை 4 மணிக்கு தொடங்கும் பால், தயிர், பஞ்சாமிர்தம், வெண்ணை உள்ளிட்ட பஞ்சகவ்ய திருமஞ்சன அபிஷேகம் 5 மணி வரை 1 மணி நேரத்திற்கு மேலாகவும் நடைபெறும். அப்போது பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். அப்போது நடக்கும் ஊஞ்சல் சேவையில் சிவபெருமான் பார்வதியுடன் அலங்கார கோலத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அதேபோல் ஆடிப்பெருக்கு தினத்தன்று மல்லிகேஸ்வரி அம்மனுக்கு வளையல் காப்பு அபிஷேகம் நடக்கும். அப்போது கோவிலுக்கு வரும் பெண் பக்தர் களுக்கு வளையல்கள் வழங்கப்படும். இக்கோவிலில் உள்ள வில்வ மரத்தை சுற்றிவந்து வழிபட்டால் தாங்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது.

கார்த்திகை மாதங்களில் மாமல்லபுரத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இக்கோவிலில் இருந்து இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை யாத்திரைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த ஆலயத்தில் தினந்தோறும் ஏதாவது நிகழ்ச்சிகள், பூஜைகள் நடந்து கொண்டே இருக்கும். பக்தர்களுக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டு கொண்டு இருக்கும்.

இக்கோவிலின் நடை காலை 7 மணியிலிருந்து 11 மணி வரையிலும், மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரையிலும் திறந்து இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதி, காஞ்சீபுரம், திருப்பதி, பெங்களூரு, செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்தும் அரசு பேருந்துகள் மாமல்ல புரத்திற்கு இயக்கப்படுகின்றன.

–இ.ராமச்சந்திரன், மாமல்லபுரம்.