உங்கள் வீடு ஆசீர்வதிக்கப்படும்


உங்கள்  வீடு  ஆசீர்வதிக்கப்படும்
x
தினத்தந்தி 18 Aug 2017 12:45 AM GMT (Updated: 17 Aug 2017 1:28 PM GMT)

பிரியமானவர்களே, நம்முடைய அருமை ஆண்டவருடைய உண்மையான ஆசீர்வாதத்தைக் காண வேண்டிய முதல் இடம் நம்முடைய வீடு ஆகும்.

பிரியமானவர்களே, நம்முடைய அருமை ஆண்டவருடைய உண்மையான ஆசீர்வாதத்தைக் காண வேண்டிய முதல் இடம் நம்முடைய வீடு ஆகும். கர்த்தர் ஒருவரை ஆசீர்வதிக்கும்போது அவரையும், அவருடைய வீட்டையும் மற்றும் அவருடைய வீட்டார் அனைவரையும் ஆசீர்வதிப்பார்.

இன்று வீட்டிற்கு வெளியே அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டது போல காணப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் வீட்டுக்குள்ளே உண்மையான தேவனுடைய ஆசீர்வாதம் இல்லை. இன்னும் சிலர் வேலை ஸ்தலத்திலும், தொழிலிலும் ஆசீர்வாதமாக இருப்பது போல தோன்று கிறது. ஆனால் மெய்யான ஆசீர்வாதத்தை அப்படிப்பட்டவர்களுடைய வீட்டிலே காணமுடியவில்லை.

‘இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி இதை ஆசீர்வதித்தருளும். கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர் உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்’. மிமி சாமு.7:29

பிரியமானவர்களே, நீங்களும் உங்கள் வீடும் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவது தான் அவருடைய சித்தம். அந்த ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பதற்கான ஆலோசனைகளை ஜெபத்தோடு உங்களுக்கு எழுதுகிறேன். வாசித்து விசுவாசத்தோடு சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.

இரட்சிக்கப்பட்ட வீடு

‘அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர் முதல் மிருக ஜீவன்கள் மட்டும், முதற்பேராயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன். நானே கர்த்தர், நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த ரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும். அந்த  ரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன். நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்’. யாத்.12:12,13

கர்த்தருடைய பிள்ளையே, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவனாகிய கர்த்தர் பலவிதமான வாதைகளினாலே எகிப்தியரை வாதித்தார். அதில் ஒன்று தான் ரத்தம் பூசப்படாத வீடுகளுக்குள்ளே சங்கார தூதன் வரும்போது, அந்த ரத்தத்தை பார்த்து வீட்டிற்குள் நுழையாமல் கடந்து போவான். இவ்வாறு இஸ்ர வேல் ஜனங்கள் சங்கார தூதன் கையில் இருந்து தப்புவிக்கப்பட்டார்கள்.

கர்த்தருடைய பிள்ளையே, நம் அனைவருடைய பாவங்களுக்காகவும், ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு ராஜா சிலுவையிலே ரத்தம் சிந்தினார். அந்த ரத்தத்தால் யார் யார் கழுவப்படுகிறார்களோ, அவர் களுடைய வீடும் ரத்தக் கோட்டைக்குள் வந்து விடுகிறது. எந்த சங்காரத் தூதனும், அசுத்த ஆவிகளும் அந்த வீட்டிற்குள் நுழைய அதிகாரம் இல்லை. ஆம் இன்று நாம் வசிக்கிற இந்த கிருபையின் காலத்தில் அவருடைய ரத்தம் சகல பிசாசின் கிரியைகளிலிருந்து விடுதலை ஆக்குகிறது. ஆகவே உங்கள் பணம், படிப்பு, சொத்துகள், திறமை மற்றும் தாலந்து இவை அனைத்தையும் விட தேவன் கிருபையாக கொடுக்கிற ரட்சிப்பு மேலானது.

ஆகவே உங்கள் வீடு ரட்சிப்புக்குள் வர பிரயாசப்படுங்கள். ‘இன்றைக்கு இந்த வீட்டிற்கு ரட்சிப்பு வந்தது. இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக் கிறானே’ (லூக்கா 19:9) என்ற வார்த்தையின்படி ரட்சிப்பு உங்கள் வீட்டிற்கு வரும்போது ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் தானாகவே உங்களைத் தேடி வரும்.

விடுதலையாக்குகிற வீடு

‘தன் சகோதரன் சிறையாகக்கொண்டு போகப்பட்டதை ஆபிரகாம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைப்படிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தான் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து...’ ஆதி.14:14

பிரியமானவர்களே, இவ்வுலகிலே நாம் கர்த்தரோடு வாழ்ந்தாலும் அவ்வப்போது இவ்வுலகத்தின் அதிபதியான சாத்தான் நமக்கு விரோதமாய் போராட்டங்களைக் கொண்டு வருவான். அந்த நேரத்தில் அவனுடைய தந்திரங்களை அறிந்து (மிமி கொரி.2:1) அவனை எதிர்த்துப் போராடி ஜெயத்தைப் பெற வேண்டியது நமது கையில் இருக்கிறது. அநேக தேவ பிள்ளைகள் சோதனை நாட்களில் சோர்ந்து போகிறதை நாம் அறிவோம் அல்லவா.

தன் சகோதரன் சிறையாகக் கொண்டு போகப்பட்டதை ஆபிரகாம் அறிந்த போது அவர் ஒரு யுத்த வீரனாக மாறி லோத்தைப் பின்தொடர்ந்து போய் அவனை மீட்டெடுத்தார் என வேதம் கூறுகிறது அல்லவா. அவ்வேளையில் அந்த யுத்தத்திற்கு தன்னோடு அழைத்துச் செல்லப்பட்ட 318 ஆட்களும் ஆபிரகாம் வீட்டில் பிறந்தவர்கள் மற்றும் கைப்படிந்தவர்கள் என நாம் வாசிக் கிறோம்.

ஆம் பிரியமானவர்களே. உங்கள் வீடுகளிலும் சாத்தான் உங்களுக்கு விருப்பமானவர்களை (கணவன், மனைவி, சகோதரன், சகோதரி, பிள்ளைகள்) வஞ்சித்து ரட்சிக்கப்படாதபடிக்கு அவர்களை கட்டி வைத்திருக்கக்கூடும். அவர்களை விடுவிக்க உலகப்பிரகாரமான ஆயுதமல்ல, ஆவிக்குரிய ஆயுதம் உங்களுக்குத் தேவை.

‘நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல, எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவை களால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்’ மிமி கொரி.10:3–5

இது பவுல் நமக்கு சுட்டிக் காண்பிக்கிற ஆயுதமாகும். அந்த ஆவிக்குரிய போராயுதத்தோடு சாத்தானை விசுவாசத்தோடு எதிர்த்து நில்லுங்கள். நிச்சயமாய் உங்களை சார்ந்தவர்களை விடுதலைபண்ண முடியும். அவ்வாறு நீங்கள் செயல்படும்போது தேவனுடைய ஆசீர்வாதங்கள் நிச்சயமாய் உங்கள் வீட்டில் தங்கும். அல்லேலூயா!

ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை–54

Next Story