நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 22 Aug 2017 4:00 AM IST (Updated: 22 Aug 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை,

நெலலையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூல திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நெல்லையப்பர் கோவில் சன்னதியில் உள்ள கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காலை 6.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

4–ம் திருவிழாவான வருகிற 24–ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரி‌ஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும் நெல்லை டவுன் ரத வீதிகளில் வீதி உலா நடக்கிறது.

கருவூர் சித்தர்

வருகிற 29–ந் தேதி இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் நெல்லை டவுன் நான்குரத வீதிகளிலும் வீதி உலா சென்று சங்கரன்கோவில் சாலை வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை சென்றடைகிறார். வருகிற 30–ந் தேதி இரவு 1 மணிக்கு நெல்லையில் இருந்து சந்திரசேகரர், சண்டிகேசுவரர், பவனி அம்பாள், பாண்டியராஜா, தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலிய கலயநாயனார் ஆகிய மூர்த்திகள் நெல்லை டவுன் நான்குரத வீதிகளையும் சுற்றி சங்கரன்கோவில் சாலை வழியாக ராமையன்பட்டி ரஸ்தாவை கடந்து மானூர் சென்றடைகிறார்கள்.

31–ந் தேதி மானூரில் அம்பலவாண சுவாமி கோவிலில் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. பின்னர் சுவாமிகள் அங்கு இருந்து புறப்பட்டு நெல்லையப்பர் கோவிலை வந்தடைகிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை நெல்லைப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.


Next Story