ஆன்மிகம்

27. கள்ளமில்லா பிள்ளைகள் + "||" + Kullamala Children

27. கள்ளமில்லா பிள்ளைகள்

27. கள்ளமில்லா பிள்ளைகள்
இந்த வாரம் மத்தேயு எழுதிய நற்செய்தியைப் பற்றி எண்ணிப் பார்ப்போம். அக்காலத்தில் சீடர்கள், இயேசு பெருமானை நெருங்கி வந்து வினா ஒன்றைத் தொடுத்தனர்.
நற்செய்தி   சிந்தனை  

- செம்பை சேவியர்


இந்த வாரம் மத்தேயு எழுதிய நற்செய்தியைப் பற்றி எண்ணிப் பார்ப்போம்.

அக்காலத்தில் சீடர்கள், இயேசு பெருமானை நெருங்கி வந்து வினா ஒன்றைத் தொடுத்தனர்.

‘விண்ணரசில் மிகவும் பெரியவர் யார்?’ என்று கேட்டார்கள். அவர்கள் அந்த வினாவைத் தொடுத்தவுடன், அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து வந்து, அவர்களின் நடுவில் நிறுத்தினார்.


பின்னர் சீடர்களை நோக்கி, ‘நீங்கள் மனம் திரும்பி, சிறு பிள்ளைகளைப்போல ஆகாவிட்டால், விண்ணரசில் புகுந்து விட மாட்டீர்கள் என்று உறுதியாகச் சொல்கிறேன்’. அங்கிருந்த அந்தச் சிறு பிள்ளையை மீண்டும் சுட்டிக் காட்டி, ‘இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே, விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறுபிள்ளை ஒன்றை, என் பெயரால் ஏற்றுக் கொள்பவர், எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார்’.

‘இச்சிறியவரில் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம். கவனமாக இருங்கள். இவர்களுடைய வானத்தூதுவர்கள், என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஏனென்றால், மானிட மகன், நெறி தவறியோரை மீட்கவே வந்தார். இந்த நிகழ்வைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’

‘ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளில், ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டு விட்டு, வழி தவறி அலையும் ஆட்டைத் தேடித் தானே செல்வார். அவர் அதைக் கண்டுபிடித்து விட்டாரானால், வழி தவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடு              களையும் பற்றி மகிழ்ச்சி அடைவதை விட, வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சி அடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அவ்வாறே இச்சிறியோரில் ஒருவர்கூட நெறி தவறிப் போகக் கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்’ என்று கூறினார்.

இந்நற்செய்தியை வழக்கம்போல், அனைத்து நற்செய்திகளையும்போல மிகவும் கருத்துடனும், ஆழமாகவும் சிந்தித்துப் படிக்க வேண்டும்.

இச்செய்தியில், வினா தொடுக்கும் சீடர்களையும், விடை பகரும் இயேசு பெருமானையும் கான்கிறோம். ஆம், கேள்வியை எப்பொழுதும், எளிமையாகத் தொடுத்து விடலாம். விடை பொருத்தமாக இருக்க வேண்டும் அல்லவா?

பல இடங்களில் இயேசு பெருமான், இப்படி விடை அளித்திருப்பதை நற்செய்தி வாயிலாக அறிய முடிகிறது. அவ்விடையும், சீடர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. அப்படிக் கேட்கப்பட்ட ஒரு கேள்விதான், ‘விண்ணரசில் மிகப்பெரியவர் யார்?’ என்ற கேள்வியாகும். அவர் தன்னைச் சொல்வார் என்றோ? அல்லது இறைவாக்கினரைச் சொல்வார் என்றோ? எண்ணியிருக்கக் கூடும். அவர்கள் எதிர்பார்க்காத ஒரு செய்தியை, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய செய்தியைக் கூறுகிறார்.

சிறுபிள்ளை ஒருவரை அவர்களிடையே நிறுத்துகிறார். அவர்களுக்கு அந்த நேரத்தில் எதுவும் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. புரியாத புதிராக இருந்திருக்கக் கூடும்.

அந்தச் சிறுபிள்ளையைச் சுட்டிக் காட்டுகிறார். சுட்டிக் காட்டி, ‘இந்தச் சிறுபிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே, விண்ணரசில் மிகப் பெரியவர் என்றும், இத்தகைய சிறுபிள்ளை ஒன்றை, என் பெயரால் ஏற்றுக் கொள்பவர், எவரும் என்னை ஏற்றுக் கொள்கிறார்’ என்றும் கூறுகிறார்.

பொருள் பொதிந்த இச்செய்தி நம்மைச் சிந்திக்க வைக்கிறது. வேறு ஓர் இடத்தில்கூட இயேசு பெருமான், ‘பாலர்களை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம்’ என்று கூறி இருப்பதையும் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.

‘நீங்கள் மனம் திரும்பி சிறுபிள்ளைகளைப்போல, ஆகாவிட்டால் விண்ணரசில் புக மாட்டீர்கள்’ என்கிறார். ஆம், இவ்வார்த்தைகள் சீடர்களுக்காக மட்டும் சொன்ன வார்த்தை என்று எண்ணி விடக்கூடாது. உலகத்தில் பிறந்த, அனைத்து மாந்தர்களுக்கும் உரியதாக இருக்கிறது.

‘மனம் திருந்த வேண்டும்’ என்பதுதான் முக்கியமானது. பிள்ளைகள் மாசற்றவர்கள். கள்ளம் கபடம் அறியாதவர்கள். அவர்களைப்போல ஆகவேண்டும் என்று வலியுறுத்திக் கூறுகிறார். வளர்ந்து விட்டவர்கள், தன் அறிவின் வளர்ச்சி காரணமாகவும், ஆணவத்தின் காரணமாகவும், தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்வது கிடையாது. அவர்களுடைய செயல்களைப் பார்த்துத்தான், இயேசு பெருமான் இவ்வாறு கூறி இருக்கிறார்.

‘தன்னைத்தானே தாழ்த்துகிறவன் எவனும் உயர்த்தப்படுவான்’ என்ற கருத்தையும், நற்செய்தியில் வேறோர் இடத்தில் பதிய வைக்கிறார்.

தாழ்ச்சி என்பது பெரிய புண்ணியமாக, நற்செய்தியில் பல இடங்களில் எடுத்தாளப்பட்டிருக்கிறது.

அதோடு மட்டும் அவர் நின்று விடவில்லை. மேலும் ஒரு கருத்தை மிகவும் நுட்பமாக வெளிப்படுத்துகிறார்.

‘இத்தகைய சிறுபிள்ளை ஒன்றை, என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னை ஏற்றுக் கொள்கிறார்’ என்கிறார்.

இயேசு பெருமானின் வாழ்க்கை தூய்மையானது. எளிமையும், தூய்மையும், வாய்மையும், அவரால் உலகிற்கு எடுத்துரைக்கப்பட்டவைகள் ஆகும்.

இன்னும் தெளிவாக பசு மரத்தில் ஆணி அடித்ததைப்போல ஒரு கருத்தைக் கூறுகிறார்.

இச்சிறுவரில் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம். கவனமாக இருங்கள் என்ற எச்சரிக்கையும் விடுகிறார். இவர்களுக்காக வான தூதர்கள் (தூய்மையானவர்கள்) என் தந்தைக்கு அருகிலேயே இருக்கிறார்கள் என்கிறார்.

சிறுபிள்ளையிடம் இருக்கக்கூடிய மாசற்ற குணங்களையும், தன்மைகளையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே இந்நற்செய்தியை நாம் மனதில் பதிய வைப்போம்.

(தொடரும்)