அழிவைத் தரும் கோபம்... பிடிவாதம்...வெறுப்பு...


அழிவைத் தரும்  கோபம்... பிடிவாதம்...வெறுப்பு...
x
தினத்தந்தி 29 Aug 2017 12:00 AM GMT (Updated: 28 Aug 2017 2:03 PM GMT)

உங்கள் கோபமும், தாபமும் உங்களுக்கு மட்டுமே உரித்தானவை. அவற்றைப் பிறரிடம் கொட்டாதீர்கள். அவ்வாறு செய்தால் அது அடுத்தவரின் அழிவுக்கே சிலபோது வழிவகுத்து விடும்.

ங்கள் கோபமும், தாபமும் உங்களுக்கு மட்டுமே உரித்தானவை. அவற்றைப் பிறரிடம் கொட்டாதீர்கள். அவ்வாறு செய்தால் அது அடுத்தவரின் அழிவுக்கே சிலபோது வழிவகுத்து விடும்.

ஒருவரின் மன அழுத்தமும் கோபமும் வெறுப்பும் வேறொருவரின் வாழ்வில் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான ஒரு உதாரணம் இங்கே இடம்பெறுகிறது.  

என்னோடு இப்போது மதீனாவுக்கு வாருங்களேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சபையில் அன்றொருநாள் என்ன நடந்தது என்பதைப் பார்த்துவிட்டு வரலாம்...

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களுடன் அமர்ந்து இருக்கின்றார்கள். இஸ்லாம் மக்களிடையே வெகுவேகமாகப் பரவிக்கொண்டிருந்த காலகட்டம். கோத்திரங்களின் தலைவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்காக வருகை தந்துகொண்டிருந்தனர். சிலர் மனம் திருந்தி வந்தனர். வேறு சிலரோ பொறாமையால் வேறு வழியில்லை என்ற நிலையில் உள்ளுக்குள் வெறுப்பைச் சுமந்து இஸ்லாத்தை ஏற்றால் ஆதாயம் ஏதாவது கிடைக்குமா என்று லாபம் தேடி வந்தனர்.

அவ்வாறு வந்தவர்களில் ஒருவர்தான் ஆமிர் பின் அத்துஃபைல். அரபுகுலத் தலைவர்களில் ஒருவர். தலைக்கனமும் பிடிவாத குணமும் மிக்கவர். இஸ்லாத்தில் சேரும்படி மக்கள் இவருக்கு உபதேசம் செய்தபோது அவர்களிடம் கூறினார்: ‘நான் மரணமடைவதற்கு முன்னர் இந்த அரபு குலம் முழுவதையும் எனது அதிகாரத்தின்கீழ் கொண்டு வருவேன். இது இறைவன் மீது ஆணை. அம்மக்கள் எனக்குத்தான் கட்டுப்பட வேண்டும். எனது ஆணைக்கே இணங்க வேண்டும். அப்படியிருக்க எங்கிருந்தோ வந்த இந்த குறைஷி இளைஞனை நான் பின்பற்றுவதா..?’.

ஆயினும் இவரது சவாலுக்கான பதிலை காலம் வேறுவிதமாக திட்டம் தீட்டி வைத்திருந்தது. இஸ்லாம் இந்தப் பூமிப்பந்தில் உறுதியுடன் நிலைகொள்ளத் தொடங்கியது. கூட்டம் கூட்டமாக மக்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில் வரத்           தொடங்கினர். வேறு வழியில்லை. என்ன செய்வது..? இந்த ஆமிரும் தனது வாகனத்தில் ஏறி நபி (ஸல்) அவர்களைக் காண வந்தார்.

அவர் வருகை தந்த நேரம் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தமது தோழர்களுடன் பள்ளி           வாசலில் அமர்ந்து இருந்தார்கள். உள்ளே நுழைந்தார்.

நுழைந்ததுதான் தாமதம், உடனடியாக பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஆமிர் அதிகார தோரணையில் கூறினார்: ‘முஹம்மதே, என்னோடு தனியாக வாருங்கள்’.

இதுபோன்ற மனிதர்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் எப்போதும் சற்று எச்சரிக்கையாகவே இருப்பார்கள்.

அவர் தொடர்ந்து வற்புறுத்தவே.. அண்ணலாரும் அவருடன் எழுந்து சென்றார்கள். இர்பத் என்ற தன் தோழரையும் ஆமிர் தன் கூடவே அழைத்து வந்திருந்தார். நபி (ஸல்) அவர்களிடம் தாம் பேசிக்கொண்டு இருக்கும்போது பின்னால் இருந்து அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற தீய திட்டத்துடன் அவரை அழைத்து வந்திருந்தார்.

இர்பத் மறைத்து வைத்திருந்த வாளில் தமது கையை வைத்தவாறு இருவரையும் பின் தொடர்ந்து சென்றார். ஒரு ஓரமாக இருவரும் ஒதுங்கிச் சென்றனர். இர்பத் தமது வாளை உயர்த்த நாடினார், முடியவில்லை. வாளை உருவ முற்படும்போதெல்லாம் கையை அதிலிருந்து எடுக்க முடியவில்லை.

ஆமிர் இவரை நோக்கி கோபத்துடன் சைகை காட்ட இவரால் ஒன்றும் செய்ய முடியாமல் சிலைபோல் அசையாமல் நின்றுகொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் இர்பத் என்ன செய்கிறார் என்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் கவனிக்கத் தொடங்கினார்கள்.

ஆமிரைப் பார்த்து நபிகளார் கூறினார்கள்: ‘துஃபைலின் மகன் ஆமிரே, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்’.

ஆமிர்: ‘முஹம்மதே, நான் இஸ்லாத்தை ஏற்றால் எனக்கு என்ன தருவீர்?’

நபி (ஸல்) அவர்கள்: ‘முஸ்லிம்களுக்கு என்ன கிடைக்குமோ அதுதான் உமக்கும். அவர்களின் சாதக பாதகங்கள் உமக்கு உண்டு. அவ்வளவுதான்’.

ஆமிர்: ‘நான் இஸ்லாத்தை ஏற்றால் உமக்குப்பின் இந்த ஆட்சி அதிகாரத்தை எனக்கு விட்டுத் தருவீரா..?’

ஆமிரின் நோக்கம் என்ன என்பதை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்ட நபி (ஸல்) அவர்கள் தைரியமாக தமது பதிலை இவ்வாறு கூறினார்கள்: ‘உமக்கோ, உமது கூட்டத்தினருக்கோ அது இல்லை’.

உடனே ஆமிர் தனது வேண்டுகோளின் அளவை சற்று குறைத்தார். ‘சரி.. நான் இஸ்லாத்தை ஏற்றால் கிராமப் புறங்களின் அதிகாரம் எனக்கும், நகர் புறங்களின் அதிகாரம் உமக்கும் என்று வைத்துக்கொள்ளலாமா..?’

நடக்காத காரியத்தை ஆமிர் வலியுறுத்துகின்றார் என்பதைப் புரிந்துகொண்ட நபிகளார் மிகவும் ஆணித்தரமாக, ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள்.

அண்ணலாரின் பதிலைக் கேட்ட ஆமிரின் முகம் மாறியது. கோபம் தலைக்கேறியது. பெரும் சப்தத்துடன் கத்தினார்: ‘முஹம்மதே, உமக்கு எதிராக பெரும் குதிரைப்படையை நான் திரட்டுவேன். ஆயுதம் தரித்த ராணுவத்தை அனுப்புவேன். இங்கிருக்கும் ஒவ்வொரு பேரீத்த மரத்திலும் எனது குதிரைகள் கட்டப்பட்டிருக்கும். கத்ஃபானின் பெரும் படையைக் கொண்டு உமக்கு எதிராக நான் போர் தொடுப்பேன்’.

காட்டுக் கத்தல் கத்தியவாறே தம்முடைய தோழர்களையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றார் ஆமிர். தமது கிராமத்தை அடைந்து பெரும் படையைத் திரட்டி மதீனாவைத் தாக்க வேண்டும் என்று எண்ணியவாறு வேகமாக செல்லத்  தொடங்கினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, ‘யா அல்லாஹ், ஆமிரின் தீங்கிலிருந்து என்னைக் காப்பாயாக. அவருடைய கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டுவாயாக’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

ஆமிரோ.. வேக வேகமாக தனது ஊரை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார். பாதிவழி செல்லும்போதே வேகம் குறைந்தது. மனம் ஓய்வை நாடியது. ஓய்வெடுப்பதற்குத் தகுந்த இடத்தைத் தேடினார். செல்லும் வழியில் இருந்த கிராமத்தில் கூடாரம் ஒன்று இருப்பதைக் கண்டு அங்கு சென்று ஓய்வெடுக்க நாடினார். சலூலிய்யா எனும் ஒரு பெண்ணின் கூடாரம் அது. மக்களிடையே மோசமான பெண் என்று பெயர் பெற்றவள்.

வேறு வழியின்றி ஆமிர் தன்னுடைய குதிரையில் இருந்து இறங்கி அவளுடைய வீட்டில் தங்கினார். அசதியில் தூங்கிவிட்டார். திடீரென தொண்டையில் ஒருவித வலி ஏற்படத் தொடங்கியது. சிறிது சிறிதாக வலி அதிகரிக்கத் தொடங்கியது. மரண பயம் கண்ணில் தோன்றியது. விப சாரியின் வீட்டில் மரணம் ஏற்பட்டால் அது தனது பரம்பரைக்கே கேவலம் என்று எண்ணிய ஆமிர் படுக்கையில் இருந்து விழித்து எழுந்து அவசரமாகத் தம்முடைய குதிரையில் ஏறி புறப்பட்டார். குதிரையின் வேகமும் கழுத்து வலியின் வேதனையும் ஒருசேர அதிகரித்தது. தாங்க இயலாத வேதனையால் குதிரையில் இருந்து கீழே விழுந்தார். விழுந்தவர் உடனே இறந்தார்.

அவரை அங்கேயே விட்டுவிட்டு அவருடைய தோழர்கள் ஊருக்கு வந்தனர். இவர்கள் ஊருக்குள் நுழைந்ததும் இர்பதிடம் மக்கள் என்ன வி‌ஷயம் என்று வினவினர்.

சற்றும் குறையாத அதே ஆணவத்துடன் இர்பத் தன் மக்களிடம் கூறினான்: ‘ஏதோ ஒரு தெய்வத்தை வணங்குமாறு முஹம்மத் எங்களை அழைத்தார். இறைவன் மீது ஆணை, அந்த முஹம்மத் மட்டும் இப்போது என் கையில் சிக்கினால் என்னுடைய அம்பால் ஒரே அடியாக அடித்தே கொன்றுவிடுவேன்’.

இந்த நிகழ்வு நடந்து இரண்டு நாட்களுக்குப்பின் இர்பத் தன்னுடைய ஒட்டகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது பேரிடி ஒன்று அவன் தலையில் விழ கரிக்கட்டையாக செத்து விழுந்தான். இதுகுறித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்:

‘‘ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கு முன்பும், பின்பும் கண்காணிப்பாளர்கள் (வானவர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ்வின் ஆணையின்படி அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள். எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக்கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை. மேலும், அல்லாஹ் ஒரு சமூகத்திற்குத் தீமையை நாடிவிட்டால் அதனை யாராலும் தடுத்து நிறுத்திட இயலாது. அல்லாஹ்வுக்கு எதிராக அத்தகைய சமூகத்தாருக்கு உதவி செய்வோரும் எவருமிலர்’’. (13:10–14)

கோபமும் வெறுப்பும் பிடிவாதமும் எப்போதும் அழிவையே அழைத்து வரும். அந்த அழிவு தனக்கு மட்டும் ஏற்பட்டால்கூட பரவாயில்லை. ஆனால் அது தம்மோடு இருப்பவரையும் சேர்த்தே சிலபோது அழித்துவிடும். அதற்கு இந்த நிகழ்வே ஒரு உதாரணம். உண்மையில் இர்பத் என்பவனுக்கான மரணம் அவனே தேடியது அல்ல. மாறாக அவனது எஜமானின் கோபத்தின் விளைவு. அது அவனையும் பாதித்துவிட்டது.

உன்னளவில் தெளிவாக இரு!

உன்னுடன் இருப்பவர்களுடன் வெளிப்படையாக இரு!

உன் ஆற்றல் என்ன என்பதைத் தெளிவாக அறிந்திடு!

உனது எல்லை எது என்பதையும் தெரிந்திடு!

மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

Next Story