ஆன்மிகம்

ஷாமனின் சடங்கில் பயன்படுத்தப்படும் பொருட்கள் + "||" + Shaman ceremonies are used

ஷாமனின் சடங்கில் பயன்படுத்தப்படும் பொருட்கள்

ஷாமனின் சடங்கில் பயன்படுத்தப்படும் பொருட்கள்
ஒரு ஷாமன் சாதாரண உணர்வு நிலையில் இருந்து கொண்டு, மற்ற உலகங்களில் இருந்து தகவல்கள் அறிய முடிந்த நுட்பமான உணர்வு நிலைக்குச் செல்வதற்காகச் செய்யும் சடங்குகள் மிகச் சுவாரசியமானவை மட்டுமல்ல, பொருள் பொதிந்தவையும் கூட.
ரு ஷாமன் சாதாரண உணர்வு நிலையில் இருந்து கொண்டு, மற்ற உலகங்களில் இருந்து தகவல்கள் அறிய முடிந்த நுட்பமான உணர்வு நிலைக்குச் செல்வதற்காகச் செய்யும் சடங்குகள் மிகச் சுவாரசியமானவை மட்டுமல்ல, பொருள் பொதிந்தவையும் கூட. சடங்கு நடத்தப்படும் இடத்தின் நான்கு பக்கங்களும் பூஜிக்கப்படுவது போலவே நிலம், நீர், நெருப்பு, ஆகாயம் என்ற நான்கு இயற்கை சக்திகளும் வணங்கப்படுகின்றன. நிலத்தைப் பிரதிபலிக்க கல்லும், நீரைப் பிரதிபலிக்க ஸ்படிகமும், நெருப்பைப் பிரதிபலிக்க ஊதுபத்தி அல்லது கொள்ளியும், ஆகாயத்தைப் பிரதிபலிக்க பறவையின் இறகும் சடங்கு நடக்கும் இடத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. இந்த நான்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கத்தில் வைக்கப்பட்டு நான்கு பக்கங் களையும் பூஜித்து விட்டு, நடுவில் ஷாமன் அமர்வது வழக்கம். எந்தத் திசைக்கு எதை வைப்பது என்பதில் உலகமெங்கும் ஒருமித்த கருத்துகள் இல்லை. சடங்கு செய்வதன் முக்கிய நோக்கத்திற்குத் தகுந்தபடியும், சடங்கு நடக்கும் பகுதியின் வழக்கப்படியும் அது மாறக்கூடியதாக இருக்கிறது.

பின் ஷாமன் அந்தச் சடங்கின் இடத்தின் மத்தியில், உலகத்தைப் பிரதிபலிக்கும் ஒரு வரைபடத்தை மணலில் வரைகிறான். அது பெரும்பாலும் வண்ணப் பொடிகளைக் கொண்டு வரையப்படுகிறது. அல்லது வண்ண நூல்களால் உருவாக்கப்படுகிறது. தென்அமெரிக்கப் பகுதிகளில் கடவுளின் கண், இரண்டு அல்லது நான்கு குச்சிகளுடன் வண்ண நூல்களை இணைத்து வடிவமைக்கப்படுகிறது. நோயாளியைக் குணப்படுத்துவதற்காகச் செய்யப்படும் சில அமெரிக்கப் பழங்குடி மக்களின் ஷாமனிஸ சடங்கில், மணல் ஓவியம் அல்லது கடவுளின் கண் மத்தியில் நோயாளியே அமர வைக்கப்படுகிறார். அந்த மையப்பகுதி, நோய்கள் மற்றும் குறைபாடுகளை நீக்கும் சக்தி வாய்ந்த தாகக் கருதப்படுகிறது. சடங்கு முடியும் போது, நோய் குணமாகி விட்டிருக்கும் அல்லது குணமாக ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடம் பிறந்திருக்கும்.

சடங்கில் ஷாமன் அணியும் அணிகலன்கள், ஆடைகள் ஆகியவையும் முக்கியமானவை. ஷாமன் அணியும் தொப்பி மற்றும் ஆடைகள் பெரும்பாலும் விலங்குகளின் தோல்களினால் ஆனவையாக இருக்கின்றன. அவை சடங்குகளுக்குத் தேவையான சக்தி படைத்த விலங்கினங்களுடைய தோலால் ஆனதாகவோ அல்லது அந்த ஷாமன் பெற்றிருக்கிற பிரத்யேக சக்தியை பிரதிபலிக்கும் விலங்கினங்களின் தோலினால் ஆனதாகவோ இருப்பது வழக்கம். சடங்கின் போது ஷாமனிடம் ஒரு நீண்ட பிரம்புத் தடி இருக்கும். சடங்கின் போது அழைக்காத சக்தியோ, விரும்பத்தகாத சக்தியோ வந்துவிடுமானால், அந்த மந்திரத் தடியால் வேண்டாத சக்திகளை ஷாமனால் விரட்டி விட முடியும் என்று நம்புகிறார்கள். ஷாமனின் உணர்வுநிலையை சூட்சும நிலைக்கு மாற்ற, மத்தளம் மற்றும் சில இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து கேட்கும் அந்த இசையை ஆடியபடியே கேட்டுக் கொண்டு களத்தில் சுற்றும் ஷாமன் உச்சக்கட்டத்தில் தன் உணர்வுநிலை மாறுகிறான். சில சமயங்களில் அந்த இசையோடு சில குறிப்பிட்ட நாடோடிப் பாடல்கள் பாடப்படுவதும் உண்டு.

இசையின் உதவியால் உணர்வுநிலை மாறுவதைப் போலவே, சில மூலிகைகள், காளான்களை மென்று தின்று ஷாமன்கள் உணர்வு நிலை மாறுவதும் அதிகமாக நடக்கிறது. அந்த மூலிகைகள், காளான்களை ஒரு சாதாரண மனிதன் உட்கொண்டால் கஞ்சா பயன்படுத்தியது போல போதையின் வசம் சிக்கித் தள்ளாட நேரிடும். ஆனால் அதே மூலிகைகள், காளான்களை ஒரு உண்மையான ஷாமன் உட்கொள்கையில், உணர்வுநிலை மங்கி போதையில் சிக்குவதற்குப் பதிலாக உணர்வு நிலை கூர்மையாகி, சூட்சுமம் பெற்று மாபெரும் உண்மைகளைக் கண்டு சொல்ல முடிகிறது என்கிறார்கள்.

இங்கு ஒரு உண்மையை நாம் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு உண்மையான ஷாமன், போதையை ஊட்டும் சிலவகை மூலிகைகள் மற்றும் காளான்களை உட்கொள்வது சடங்குகளின் சமயங்களில் மட்டுமே. அவை உயர் உணர்வு நிலைகளுக்கு அழைத்துச் செல்ல உதவுவதால், அவை தெய்வீக மூலிகைகளாகவே ஷாமனிஸத்தில் கருதப்படுகின்றன. அவற்றை போதைக்காக மற்ற சமயங்களில் பயன்படுத்துவது அபசாரமாக பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு ஷாமன் பயன்படுத்தினால், சடங்கு சமயங்களில் கூர்மையான உள்ளுணர்வுக்குப் பதிலாக, போதையும் தள்ளாட்டுமுமே மிஞ்சும்.

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் ஷாமன்கள் புகையிலையை கூட சடங்குகளில் பல சமயங்களில் பயன்படுத்துகிறார்கள். தேவைப்படும் போது மிக அதிக அளவிலும் புகையிலை உட்கொள்ளப்படுவதுண்டு. ஒரு மனிதனை ஒரேயடியாகப் படுக்க வைத்து விடும் அளவிலான அந்தப் புகையிலை, ஷாமனை எந்தக் காரணத்தாலும் நிதானம் தவற வைத்து விடுவதில்லை. மாறாக அவன் உணர்வுகளை மேலும் கூர்மைப்படுத்துகின்றது என்பதே ஆச்சரியமானச் செய்தி.

ஷாமனிஸ சடங்குகள், நோய்களை குணமாக்கவும் நிகழ்த்தப்படுவதுண்டு என்று சொல்லியிருந்தோம். அது சாதாரண நோய்களை குணப்படுத்த நடத்தப்படுவதில்லை. ஏனென்றால் ஷாமன்கள் மூலிகைகள் பற்றி மிக நுணுக்கமாக அறிந்திருந்தார்கள். 25,000 ஆண்டுகளுக்கும் முந்தைய காலத்திய பிரான்சின் லாஸ்காக்ஸ் (Lascaux, France) குகை ஓவியங்களில், நோய்கள் தீர்க்க மூலிகைகள் பயன்படுத்திய ஆதாரங்கள் மிகத்தெளிவாக கிடைத்து இருக்கின்றன. எனவே நோய்வாய்ப்பட்டவர்களை சடங்குகள் இல்லாமலேயே மூலிகைகள் தந்து குணமாக்க முயல்கிறார்கள். அதற்காக அவர்கள் ஷாமன் சடங்குகளை முதல்கட்டத்திலேயே பயன்படுத்துவதில்லை. வழக்கமான மூலிகைகளாலும் ஒரு நோயைக் குணமாக்க முடியாமல் போகும் போது தான், ‘உடல் ரீதியாக இல்லாமல் மனரீதியாகவும், ஆன்ம ரீதியாகவும் நடந்த வேறு தவறுகளின் விளைவுகளாகவும் இருக்கலாம்’ என்று ஷாமனிஸம் முடிவுக்கு வருகிறது. அல்லது ‘ஏதாவது ஆவிகள் அல்லது உயர் சக்திகளின் அதிருப்தி தான் அந்த நோய்’ என்ற கோணத்திலும் அந்த நோயை ஷாமனிஸம் அணுகுகிறது.

அப்போது தான் ஷாமனின் சடங்கு நடத்தப்பட்டு உண்மை அறியப்படுகிறது. மனரீதியான, ஆன்மிக ரீதியான தவறுகள் இருந்தால் அவை என்ன என்பதை உயர் சக்திகள் மூலம் ஷாமன் அறிகிறான். சில சமயங்களில் ஆவிகள் அல்லது உயர்சக்திகளின் அதிருப்தியாக இருந்தாலும் அவற்றிற்கான காரணங்களையும் அவற்றிடமே கேட்டு அறிகிறான். கண்டறியும் பரிகாரங்களையும், தீர்வுக்கான வழிகளையும் நோயாளியிடம் அல்லது நோயாளியின் குடும்பத்தாரிடம் சொல்கிறான். அத்துடன் அந்த ஆவிகள் வழக்கத்திற்கு மாறான வேறெதாவது மூலிகை பரிந்துரை செய்தால் அதையும் ஷாமன் அறிந்து சொல்கிறான். சொல்லப்பட்ட பரிகாரம் செய்து முடித்து அந்த மூலிகைகளை நோயாளி உட்கொண்டால் பூரணமாகக் குணமடைவது ஷாமனிஸம் பின்பற்றும் மக்களின் அனுபவமாக இருக்கிறது.   

சில சமயங்களில் சில மூலிகைகள் உட்கொள்ளப்படுவதற்குப் பதிலாக, எரிக்கப்படுவதும் உண்டு. அவை மணம் மிக்கதாகவோ, எரியும் போது லேசாக மயக்கம் தருவதாகவோ இருப்ப துண்டு. அந்த மூலிகைப் புகை ஷாமனை மயக்க நிலைக்குக் கொண்டு போக உதவுவது போல், சில ஆவிகளை அங்கு கவர்ந்திழுக்கவும் உதவுவதாகச் சொல்கிறார்கள். ஏனென்றால் சில ஆவிகளுக்கு சில வகை மணங்கள் பிடித்தமானதாக இருப்பதாக ஷாமனிஸம் நம்புகிறது. எந்தெந்த ஆவிகளுக்கு.. எந்தெந்த வகை மணங்கள் பிடித்தமானவை என்பதை ஒரு திறமை வாய்ந்த ஷாமன் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று ஷாமனிஸ மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்படி மூலிகைகளை எரித்து வரும் புகையை சடங்குகளுக்குப் பயன்படுத்துவது திபெத் போன்ற பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. அங்கு கிட்டத்தட்ட முப்பது வகை மூலிகைகள் வரை ஷாமனிஸ சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறதென ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

தெற்கு மெக்சிகோ பகுதியின் அமெரிக்கப் பழங்குடி மக்கள் Psilocybinmushrooms   என்ற ஒரு வகை காளான்களை ஷாமனிஸ சடங்குகளில் மென்று தின்று ஒரு வகை போதை நிலையை அடைகிறார்கள் என்று 1950–களில் ஒருமுறை  அமெரிக்காவின் லைப் (Life) பத்திரிகை விலாவாரியாக எழுதப்போக ஷாமனிஸம் அக்காலக் கட்டத்தில் மிகப்பிரபலமானது. அந்த போதைக் காளானையும் பலர் தேடிப் போக அதுபற்றி பத்திரிகைகள் அக்காலத்தில் தொடர்ந்து பரபரப்பாகச் செய்திகள் வெளியிட்டதால் ஷாமனிஸத்தோடு அந்தக் காளானும் மிகப் பிரபலமானது தான் வேடிக்கை.

–தொடரும்.