குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 21–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 21–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 6 Sep 2017 11:30 PM GMT (Updated: 6 Sep 2017 9:01 PM GMT)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 21–ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

குலசேகரன்பட்டினம்,

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 21–ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலை, இரவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மாலையில் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இரவில் அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

முதலாம் திருநாளில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்திலும், 2–ம் திருநாளில் கற்பகவிரிசம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்திலும், 3–ம் திருநாளில் ரி‌ஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 4–ம் திருநாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 5–ம் திருநாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்திலும்,

6–ம் திருநாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், 7–ம் திருநாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8–ம் திருநாளில் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்திலும், 9–ம் திருநாளில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் அம்மன் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

10–ம் திருநாளான வருகிற 30–ந்தேதி (சனிக்கிழமை) இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி, மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. 11–ம் திருநாளான அடுத்த மாதம் (அக்டோபர்) 1–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளி, சாந்தாபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவில் அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனைகள் முடிந்து, திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அதிகாலை 5 மணிக்கு சவுந்திரபாண்டிய நாடார்– தங்ககனி அம்மாள் கலையரங்கில் அம்மன் எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதி உலா புறப்படுதல், மாலை 5.30 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்தல், மாலை 6 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

12–ம் திருநாளான 2–ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

தசரா திருவிழாவை முன்னிட்டு, காப்பு கட்டி வேடம் அணியும் பக்தர்கள் தங்களது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிதல் வேண்டும். வேடம் அணிபவர்கள் எந்த வேடம் அணிந்தாலும், அது புனிதமானது என்பதை உணர்ந்து, அதன் புனித தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும். வேடம் அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும். வேடம் அணிபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. காளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10 வயதுக்கு உட்பட்டவராகவும், அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்சோதி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


சிறப்பு பஸ்கள் இயக்கம்

தசரா திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர்(பொறுப்பு) வீரப்பன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், சுகாதாரம், மின்சார வசதி, போக்குவரத்து வசதி ஆகியவற்றை முறையாக வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கடலில் பாதுகாப்பாக நீராடுவதற்கு கடல் பாதுகாப்பு வளையத்துடன் தீயணைப்புத்துறையினரும், உயிர் மீட்பு படகுடன் மீன்வளத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பொது மக்கள் பாதுகாப்பாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைகாண செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கணேஷ்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜையா, பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் ஜார்ஜ் மைக்கேல் ஆண்டனி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story