நபிகளாரின் உயர் பண்புகள்
இனிய குணமுடைய நபிகளாரின் சொல்லாற்றல் தெள்ளத் தெளிவாக, இலக்கிய நயத்துடன் இருக்கும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 40–ம் வயதில் தன்னை ‘இறைவனின் தூதர்’ (நபி) என்று பிரகடனப்படுத்தினார்கள். அதற்கு முன்பும், அதன்பிறகும் மக்கள் மத்தியில், உண்மையுடனும், ஒழுக்கத்துடனும் உயர் பண்பு களை கொண்டு ஒரு உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்கள்.
இனிய குணமுடைய நபிகளாரின் சொல்லாற்றல் தெள்ளத் தெளிவாக, இலக்கிய நயத்துடன் இருக்கும். தம் வாழ்நாளில் ஒருபோதும் அவர்கள் இறைவனுக்கு இணை வைத்தது இல்லை. மது அருந்தியது இல்லை. பொய் சொன்னது இல்லை. அருவருப்பான, சொல், செயல் எதுவும் அவர்களிடம் இருந்ததில்லை.
மனிதாபிமானம் நிறைந்தவராக விளங்கிய நபிகளார் தன்னிடம் உதவிகேட்டு வருபவர்களுக்கு, ‘இல்லை’ என்று கூறாமல் உதவி செய்யக்கூடியவர்கள். தன்னிடம் இல்லையென்றாலும் பிறரிடம் பெற்று உதவிகேட்பவரின் கஷ்டத்தை போக்க கூடியவர்களாக இருந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்களை விட அதிகம் பணிவுடையவர்களாக விளங்கினார்கள். பெருமை கொள்வதை விட்டும் விலகியே இருந்தார்கள். தன்முன் மற்றவர்கள் எழுந்து நிற்பதை அவர்கள் தடை செய்தார்கள். அடிமைகள் விருந்துக்கு அழைத்தாலும் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வார்கள். தம் தோழர்களோடு சரி நிகர் சமமாக அமர்ந்திருப்பார்கள்.
வாக்குறுதிகளை தவறாது நிறைவேற்ற கூடியவர்களாகவும், கெட்ட செயல்களை கெட்ட செயல்கொண்டு சரி செய்ய மாட்டார்கள். அச்செயலை மன்னித்து மறந்து விடுவார்கள். சிரமங்களை தாங்கிக் கொண்டு தொண்டாற்றும் பழக்கம் உள்ளவர்களாக நபிகள் நாயகம் (ஸல்) மிளிர்ந்தார்கள்.
தங்களுக்கு பணிவிடை செய்யக்கூடிய பணியாளரை ‘சீ’ என்று கூட கூறி உதாசீனப்படுத்தியதில்லை.
தங்களது தோழர்களை அதிகம் நேசித்து அவர்களோடு அதிகம் பழகக்கூடியவர்களாக இருந்தார்கள். ஏழைகளை ஒருபோதும் இளக்காரமாக பார்க்கமாட்டார் கள்.
பெரும்பாலும் அமைதியாக இருப்பார்கள். பேசினால், அந்தப்பேச்சு கருத்தாழம் மிக்கதாகவும், முழுமையான வார்த்தைகள் கொண்டதாகவும் அமைந்திருக்கும்.
இறைவன் தந்தது எதுவும் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக மதித்து ஏற்றுக்கொள்ள கூடியவர்கள். எதையும் இகழமாட்டார்கள். பொருட்களை தேர்ந்து எடுப்பதில் இரண்டு வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டால், அதில் மிக எளிமையானதையே தேர்வு செய்வார்கள். பாவமானதாக எதுவும் இருப்பின் அதை விட்டும் வெகுதூரம் சென்று விடுவார்கள்.
நடுநிலையாளராக விளங்கிய நபிகளார், எல்லா நிலைகளிலும் சத்தியத்தை கடைப்பிடித்தார்கள். அந்த சத்தியத்தை மீறவும் மாட்டார்கள்.
தன்னைவிட யாரும் நபியவர்களிடம் உயர்ந்தவர் இல்லை என்று எண்ணும் அளவிற்கு ஒவ்வொருவருடனும் மிக நெருக்கமாக பழகக்கூடியவர்கள். தங்களின் தயாளத் தன்மையையும் நற்குணத்தையும் அனைத்து மக்களுக்கும் விரிவுப்படுத்தி அம்மக்களுக்கு ஒரு தந்தையை போன்று விளங்கினார்கள்.
அனைவரும் அவர்களிடம் உரிமையில், நெருக்கமானவர் களாக இருந்தார்கள். இறையச்சத்தைக் கொண்டே மக்களின் சிறப்புகள் நிர்ணயிக்கப்பட்டன, அவரது தோழர்கள் இறையச்சத்தால் ஒருவருக்கொருவர் பிரியத்துடன் நடந்து கொள்வார்கள்.
அவர்களின் சபை கல்வி, கண்ணியம், பொறுமை சகிப்புதன்மை, வெட்கம், நம்பிக்கை போன்ற அனைத்து அம்சங்களும் நிறைந்ததாக இருந்தது. முகஸ்துதி, தேவைக்கு அதிகமாக பேசுவது, தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றில் இருந்து இறைவன் அருளால் நபிகளார் தங்களை பாதுகாத்துக் கொண்டார்கள்.
பிறரை பழிக்க மாட்டார்கள், குறைகூறமாட்டார்கள். அடுத்தவரின் குறையை தேடவும் மாட்டார்கள், நன்மையானதை தவிர வேறு எதுவும் பேசவும் மாட்டார்கள்.
நற்பண்புகளில் நிகரற்று விளங்கிய நபி (ஸல்) அவர்கள் முழுமை பெற்ற தன்மையால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள். மிக அழகிய ஒழுக்கங்களை தானும் கடைப்பிடித்து, அதனை பிறருக்கும் கற்றுக்கொடுப்பவர்களாக இருந்தார்கள்.
அவர்களின் நற்குணம் குறித்து குர் ஆன் இவ்வாறு பேசுகின்றது:
‘நிச்சயமாக (நபியே) நீங்கள் நற்குணமுடையவர்களாகவே இருக்கிறீர்கள்’. (68:4)
இந்த நற்பண்புகளே மக்கள் நபியவரின் மீது நெருக்கத்தையும், விருப்பத்தையும் ஏற்படுத்திட காரணமாக அமைந்தது. இன்னும் அவர்களை உள்ளம் கவரும் உயரிய தலைவராக திகழச்செய்தது.
முரண்டு பிடித்த சமுதாய மக்களின் உள்ளங்களை பணிய வைத்தது. மக்களை கூட்டம் கூட்டமாக இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் கொண்டு வந்து சேர்ந்தது.
இத்தகைய உயரிய நற்பண்புகள் கொண்ட நபிகளார் ஏகத்துவ பிரசாரம் மேற்கொண்ட போது பல்வேறு விதமாக கஷ்டங்களையும், சிரமங்களையும் எதிர் கொண்டார்கள். ‘இறைவன் ஒருவனே’ என்ற சத்தியத்தை சொன்னதால் அவர்களுக்கு கிடைத்த இன்னல்கள் பல.
அவர் மீது குப்பையை கொட்டினார்கள். நடக்கும் பாதையில் முள்ளை நட்டார்கள். புழுதி மண்ணை மேனியில் வீசினார்கள். கல்லால் அடித்தார்கள், கடும் சொல்லால் வதைத்தார்கள். ஊரை விட்டே போகும்படி செய்தார்கள்.
ஊரைவிட்டு சென்ற பின்பு அவர்கள் மீது போரை திணித்தார்கள். எல்லா கொடுமைகளையும் தாங்கி நின்று தனது சத்தியத்தாலும், நற்குணத்தாலும், பொறுமையினாலும் மூட பழக்க வழக்கங்களை ஜெயித்து நிறைவானதோர் இஸ்லாம் மார்க்கத்தை இந்த உலகிற்கு தந்து என்றும் அழியாத புகழை இறைவன் அருளால் பெற்றுக் கொண்டார்கள் நமது நாயகம் நபிகள் அவர்கள்.
அவர் புகழைப்போற்றுவோம். அவர் காட்டிய வழியில் நாம் அனைவரும் வாழ்ந்து இறைவனின் திருப்பொருத்தத்தை அடைவோம், ஆமீன்.
–மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, திருநெல்வேலி மாவட்டம்.
Related Tags :
Next Story