பக்தியை பாதுகாக்க இறைவன் தரும் ஆயுதம்
உலகத்தில் ஒவ்வொருவரையும் அவர்களின் குணநலன்களை வைத்தே தரம் பிரிக்கிறோம். அதற்கேற்றபடி அவர்களுடனான பழக்கத்தை ஏற்படுத்துகிறோம்.
பக்தனும் அவனது பக்திக்கான குணங்களின் மூலமே உலகத்தால் அடையாளம் காணப்படுகிறான். வெறும் வெளிஅடையாளங்கள் மட்டுமே பக்தியை வெளிப்படுத்துவதில்லை. இயல்பு குணங்களுடன் வாழ்பவரையும், பக்தி குணங்களுடன் வாழ்பவரையும் இனம் பிரிப்பது அவர்களின் அன்றாட நடத்தைதான்.
பக்தி நிறைந்த குணங்களுடன் உலகில் வாழ்வது மிகப்பெரிய சவால்தான். அதுவும் இயேசு குறிப்பிட்டுள்ள பக்திக்கான குணங்களை பின்பற்றுவதற்கு இறைவனின் பலம் கிடைக்காவிட்டால் அது முடியாமல் போய்விடும்.
வேதத்தில் இயேசு கூறியுள்ள ஜெபம் போன்ற தனிப்பட்ட ஒழுக்கங்களை முழுமனதுடன் பின்பற்றாவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக பக்தி நிலையில் இருந்து விலகும் நிலைக்கு பக்தன் தள்ளப்பட்டுவிடுவான். இந்த நிலை உடனே தெரிவதில்லை.
உதாரணமாக, உண்மை பக்திமார்க்கத்தில் இருக்கும் ஒருவனை, இறைவனின் எதிரியாக கருதப்படும் சாத்தான் திடீரென்று கொடும் பாவங் களில் வீழ்த்திவிடுவது மிகவும் கடினம். ஆனால் மிகநுண்ணிய அளவில் இச்சைகளை அவனது மனதுக்குள் நுழையச் செய்துவிட்டு, அதை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கி, கொடிய பாவங்களை நோக்கி பக்தனை அவனால் தள்ளிச்செல்ல முடியும்.
இந்தத் தந்திரத்தை பயன்படுத்தி மிகப்பெரிய பக்தனையும் ஒரு கட்டத்தில் சாத்தான் வீழ்த்தி விடுகிறான். அதற்கென்று ஒரு காலஅளவை அவன் நிர்ணயித்துக்கொள்கிறான். உலகில் அப்படி இச்சையிலும், பொருளாதார ரீதியிலும் அவன் வீழ்த்திய பக்தர்களின் எண்ணிக்கை அனேகம். நுண்ணளவில்கூட இச்சைக்கு இடம் கொடுக்காத பக்தர்களை அவனால் ஒன்றும் செய்ய இயலாது.
பக்தியின் ஆரம்பகட்டத்தில் பாவத்தை எதிர்ப்பதில் பக்தன் மிகத்தீவிரம் காட்டுகிறான். ஆனால் பொருளாதார தேவைகள் எழும்போது அநீதியான பணத்தை தவிர்ப்பதில் பக்தர்கள் பலர் சோர்ந்துபோகிறார்கள். அநீதியான பணவரவு தேவையில்லை என்று ஒரேயடியாக முடிவு எடுக்கும் பக்தனிடம் சாத்தான் செயல்பட முடியாது.
ஆனால் அதை ஏற்பதா, தவிர்ப்பதா என்ற இரண்டுங்கெட்டான் மனநிலை எழும்போதுதான், ஆசையையும், தேவையையும் காட்டி சாத்தான் நெருக்கடி கொடுக்கிறான். இந்த நெருக்கடியை எதிர்கொள்வதில்தான் பக்தர்கள், இறைப்பணியாளர்கள் பலர் சோர்ந்து போகிறார்கள்.
விளைவு, முதலில் கொஞ்சமாக அவர்கள் அனுமதிக்கும் அநீதியான சம்பாத்தியம், பின்னர் அதையே நம்பி இருக்கும் அளவுக்கு அவர்களை சாத்தான் இழுத்துச் சென்றுவிடுகிறான்.
அதுபோலத்தான் இச்சையைத் தூண்டும் படங்கள், பாடல்கள், காட்சிகளை பக்தியின் ஆரம்பத்தில் கடுமையாக எதிர்க்கும் பக்தன், போகப்போக பக்திக்கான தனிப்பட்ட ஒழுங்குகளை பின்பற்றுவதில் சற்று தொய்வடையும் நிலைக்கு தள்ளப்படுகிறான். அந்த காலகட்டத்தில் லேசாக அவற்றின் பக்கம் பார்வையைத் திருப்புகிறான்.
உடனே அவை அவனது மனதில் பதிந்துகொண்டு சிந்தனைக்குள் நுழைகிறது. பின்னர் சிந்தனை தூண்டப்படுவதும், அந்த சிந்தனைக்கு இரை போடுவதற்காக மீண்டும் கவர்ச்சிக் காட்சிகளை நோக்கி கண் போவதும் நிகழ்கிறது.
இப்படி இச்சை ரீதியான பார்வை, பேச்சு, சிந்தனை ஆகியவற்றை விலக்க முடியாத அளவுக்கு பக்தன் போய்விடுகிறான். இப்படி ஒவ்வொரு குணத்திலும் பக்தனுக்கு வீழ்ச்சி நேரிடும் சூழல் வருகிறது.
ஆனால் இப்படிப்பட்ட வீழும் நிலையை ஆரம்பத்திலேயே உணர்ந்துகொள்ளும் பக்தனே ஞானவான். அவன் அதில் நீடிக்காமல் மீண்டும் தன்னை சீர்படுத்திக்கொள்வதற்கு கடும் போராட்டத்தை மேற்கொள்கிறான்.
உபவாசம், ஜெபம் என பல்வேறு பக்திக்கான சுயகட்டுப்பாடுகளை தனக்கென்று நியமித்து மெல்ல மெல்ல மேலேறுவான்.
ஆனால் பலர் அதை உணருவதில்லை. பாதிப்புகள் தொடர்ந்து விடுவதால் பக்தர்கள், இறைப்பணியாளர்கள் பலர் நெடுகச்சென்று அநீதிக்குள் சிக்கிவிடுகின்றனர். பின்னர் அதிலிருந்து மீளமுடியாமல் போய்விடுவதால், அநியாய சம்பாத்தியம், மனதளவிலான இச்சைகள் ஆகியவற்றை தனக்குத்தானே நியாயப்படுத்தும் நிலைக்கு அவர்கள் போய்விடுகிறார்கள்.
இதுதான் பக்தியில் இருந்து அவர்கள் முழுமையாக வீழ்வதற்கான தொடக்கமாக அமைந்து விடுகிறது. பாவம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதை பக்தன் முழுமனதோடு எதிர்த்தால், அதற்குத் துணையாக இறைவன் அளிக்கும் பலம் கிடைக்கிறது.
ஆனால் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அந்தப் பாவத்தை நியாயப்படுத்திவிட்டால், அதை எதிர்ப்பதற்கு பக்தனின் சுயபலம்கூட துணைக்கு வராது. எனவேதான் படிப்படியாக அவனை அறியாமலேயே அதைப் பின்தொடர்ந்து ஒரு கட்டத்தில் இச்சையை சரீர ரீதியாகவும் நிறைவேற்றும் சூழ் நிலைக்குள் தள்ளப்பட்டுவிடுகிறான். இதற்காக சாத்தான் ஆங்காங்கே கண்ணிகளை தயாராக வைத்திருக்கிறான்.
‘பிசாசின் கண்ணியில் விழாதபடிக்கு’ என்று எச்சரிக்கும் வேதம் (1 தீமோ.3:7), ‘நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்’ என்றும் (எபே.6:11) கூறுகிறது.
பாவங்களை அண்டாமல் வெற்றி கொள்ளக் கூடிய ஆவியின் பட்டயங்களையே, இறைவன் தரக்கூடிய ஆயுதங்கள் என்று வேதம் கூறுகிறது.
‘நம்பிக்கை, விசுவாசம், அன்பு ஆகியவற்றை மார்புக்கவசம், தலைக்கவசம் என்று வேதம் வர்ணிக்கிறது’ (1 தெச.5:8). இவையெல்லாம் தடுப்பு ஆயுதங்கள்.
கிறிஸ்தவ பக்திக்குள் வரும் ஒவ்வொருவரும் சோதனை போன்ற கடின பாதையை கடந்து செல்வது அவசியம் என்றாலும், எந்தக்கட்டத்திலும் பக்திக்கான சுயஒழுக்க நிலையில் இருந்து மாறுவதை கொஞ்சமும் அனுமதித்துவிடக்கூடாது.
மிகச்சிறிய பொய், கவர்ச்சியானவற்றின் மீது சின்னப்பார்வை, சிறிய வெகுமதிகளையும் பெறும் ஆசை உள்ளிட்ட சிறிய பாவங்களைக்கூட அனுமதிக்கமாட்டேன் என்று பக்தியை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் சுயஒழுக்க முறையும், பாவத்தை ஜெயிப்பதற்கு இறைவன் தரும் தடுப்பு ஆயுதங் களில் ஒன்றுதான்.
சின்னப்பாவத்தையும் நியாயப்படுத்தினோம் என்றால், அதை வெல்வதற்கு இறைவன் தரும் ஆயுதங்களால் பயனில்லாமல் போய்விடும். பின்னர் பெரிய பாவங்களை எதிர்கொள்ளும்போது நிராயுதபாணியாகி, அதனிடம் சரணடைந்து, பக்தியை தொலைக்க வேண்டியதாகிவிடும்.
சிந்திப்போம், எச்சரிக்கை அடைவோம்.
Related Tags :
Next Story