29. பெண்களுக்குள் ஆசி பெற்றவர்


29. பெண்களுக்குள் ஆசி பெற்றவர்
x
தினத்தந்தி 12 Sep 2017 12:15 AM GMT (Updated: 11 Sep 2017 1:08 PM GMT)

புனித லூக்கா என்ற நற்செய்தியாளர் எழுதிய இந்த நற்செய்தியைப் பற்றி சிந்திப்போம்.

நற்செய்தி சிந்தனை

- செம்பை சேவியர்


புனித லூக்கா என்ற நற்செய்தியாளர் எழுதிய இந்த நற்செய்தியைப் பற்றி சிந்திப்போம்.

அந்நாட்களில் மரியா, ‘யுதேயா’ என்ற மலை நாட்டில் உள்ள, ஓர் ஊருக்கு வேகமாகச் சென்றார். அங்கிருந்த சக்கரியாசின் வீட்டை அடைந்தார். ‘எலிசபெத்’ என்ற பெண்மணியை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத் கேட்டார். அப்பொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை, ‘அக்களிப்பால் (மகிழ்ச்சியால்) துள்ளியது’. அந்நேரம், எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார்.

அப்பொழுது எலிசபெத், மரியாவைப் பார்த்து, ‘‘பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். உம்முடைய வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே. என் ஆண்டவரின் அன்னை, என்னிடம் வர ‘நான்  யார்?’. உம் வாழ்த்துரை, என் காதில் விழுந்ததும், என் வயிற்றினுள்ளே குழந்தை பெரு மகிழ்வால் துள்ளியது. ஆண்டவர், உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிக் கொண்டிருக்கும் நீர்,  பேறு பெற்றவர்’’ என்றார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த மரியா, பின் வருமாறு கூறுகிறார்:

‘‘ஆண்டவரை எனது உள்ளமானது, போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என்னுடைய மீட்பராக இருக்கக் கூடிய கடவுளை எண்ணி, என் மனம் பேருவுவகை கொள்கின்றது. ஏனென்றால், அவர் தம் அடிமையின் தாழ்ந்த நிலையைக் கண்ணோக்கினார். இது முதல், எல்லாத் தலைமுறையைச் சார்ந்தவர்களும், என்னைப் பேறு பெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராக இருக்கக்கூடிய கடவுள், எனக்கு அரும்பெரும் செயல்களைச் செய்துள்ளார். ‘தூயவர்’ என்பதே, அவரின் பெயராகிறது. அவருக்குப் பயந்து நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய், அவர் தன் இரக்கத்தைக் காட்டி வருகிறார். அவர் தன்னுடைய தோள் வலிமையைக் காட்டியுள்ளார். மனதில் செருக்குடன் இருப்பவரைச் சிதறடித்து வருகிறார்.

வலிமை உடையவர்களை, அரியணையில் இருந்து தூக்கி எறிந்துள்ளார். தாழ்ந்த நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை பல்வேறு நலன் களால் நிரப்பியுள்ளார். செல்வந்தர்களை வெறுங்கையராக அனுப்பி விடுகிறார். தம் மூதாதையருக்குச் சொல்லியபடியே, அவர் ஆபிரகாமையும், அவர் தம் வழி மரபினரையும், என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் வைத்துள்ளார். தம் ஊழியராகிய இஸ்ரவேலுக்கு என்றும் துணையாக இருந்து வருகிறார்’’.

மரியா மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பிறகு, தன் வீடு திரும்பினார்.

நீண்டதொரு நற்செய்தியைப் படிக் கின்றபொழுது, நம் கண் முன்னே, மரியாளின் தாழ்ச்சியைக் காண முடி கிறது.

இயேசுபிரானையே கருத்தாங்கி இருக்கும் ‘மரியாள்’, ‘எல்லாமே இறைவனின் சித்தம்’ என்பதை உணர்ந்தவராய்ச் செயல்படுகிறார்.

ஆம்! தன் உறவினரும், தோழியுமான ‘எலிசபெத்’தைச் சந்திக்கச் செல்லும்பொழுது, இருவருமே கருத்தாங்கி இருக்கின்றனர்.

ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கின்ற பொழுது, ‘இருவர் வயிற்றிலும் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது’ என்று படிக்கிறோம்.

முதல் வாழ்த்து, மரியாளிடம் இருந்து வருகிறது. அதற்குப் பதில் வாழ்த்தாக, ‘பெண்களுக்குள் ஆசி பெற்றவர்’ என்ற வாழ்த்தை, எலிசபெத் மூலம் மரியா பெறுகிறார். அதோடு மட்டும் அவர் நின்று  விடாமல், ‘உம்முடைய வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே’ என்ற கருத்தைப் பதித்து விட்டு, ‘என் ஆண்டவரின் அன்னை என்னிடம் வர நான் யார்?’ என்ற கேள்வியைத் தனக்குள்ளே எலிசபெத் கேட்டுக்கொள்கிறார்.

மரியாள், எலிசபெத்தை வாழ்த்தியவுடன், எலிசபெத்தின் வயிற்றில் உள்ள குழந்தை, மகிழ்ச்சியால் துள்ளியதாக எலிசபெத் கூறுகிறார்.

அதோடு மட்டும் அல்லாமல், மரியாளின் அடக்கத்தையும், நம்பிக்கையையும் அவரிடமே எலிசபெத் எடுத்துரைக் கிறார்.

ஆம்! இயேசு பிரான் தன் வயிற்றில் இருந்து வெளிப்படப் போகிறார் என்ற செய்தியைக் கேட்ட அன்னை மரியாள், ‘இதோ, நான் ஆண்டவரின் அடிமை. அவர் சித்தப்படியே ஆகட்டும்’ என்று  தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார் என்பது செய்தி.

அதனால்தான் இந்தச் சந்திப்பின்போது, எலிசபெத், ‘ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும்’ என்கிறார். அதோடு மட்டும் நின்று விடவில்லை. ‘நீர் பேறு பெற்றவர்’ என்ற வார்த்தையையும் கூறுகிறார்.

மரியாளின் அடக்கமும், பணிவும் நற்செய்தியின் இறுதிப்பத்தியில் வெளிப்படுவதைக் காண்போம்.

‘ஆண்டவரின் அடிமையான என்னை, அவர் தேர்ந்தெடுத்ததால், இனி வரக் கூடிய எல்லாத் தலைமுறையினரும், என்னைப் பேறு பெற்றவள் என்பர்’ என்கிறார்.

அதோடு ஆண்டவரின் செயல்பாடு களையும் விளக்கமாக எடுத்துரைக் கிறார்.

‘வலிமை உடையவர்களை அரியணையில் இருந்து தூக்கி எறிந்துள்ளார். தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை உயர்த்துகிறார். செல்வரை வெறுங்கைய ராகவும், பசித்தோரை, நலன்களால் நிரப்பியும் அனுப்புகிறார்’ என்கிறார்.

இப்படியாக, ஆண்டவரின் வலிமை என்ன? அவரிடம் யார், யார், எப்படி, எப்படியெல்லாம் நன்மைகளை அடைகின்றனர். யார் யார், எப்படி எப்படியெல்லாம் பெற முடியாத நிலையில் இருக்கின்றனர் என்றெல்லாம் விரித்துரைக்கப்படு கிறது.

இந்த நற்செய்தியை உன்னிப்பாகக் கவனித்துப் பாருங்கள்.

எலிசபெத் என்பவர் நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தபோது, வயது முதிர்ந்த சக்கரியாசுக்கு, குழந்தைப் பேற்றை ஆண்டவர் அருளியிருக்கிறார்.

இருவரும் இறைவனுடைய சித்தப் படியே நடப்பவர்கள். அவர்களுடைய நம்பிக்கையும், விசுவாசமும், தாழ்ச்சியும் அவர்களை, ஆண்டவரின் பார்வையில் நிலைநிறுத்தி விடுகிறது.

நற்செய்தி நமக்குக் காட்டும் இந்தச் செய்திகள், நம்மிடமும் இப்பண்புகள் வளர வேண்டும் என்பதைச் சுட்டுகிறது. நாமும் அன்பிலும், பண்பிலும், தாழ்ச்சியிலும், பொறுமையிலும் சிறந்து வாழ முற்படுவோம்.

(நற்செய்திகள் தொடரும்)

Next Story