படி அளந்தால் படியளக்கும் பெருமாள்


படி அளந்தால் படியளக்கும் பெருமாள்
x
தினத்தந்தி 12 Sep 2017 1:00 AM GMT (Updated: 11 Sep 2017 1:14 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியை, அகத்திய முனிவர் திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் அமைந்துள்ள அழகர் சுந்தரராஜருக்காக அருளினார்.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியை, அகத்திய முனிவர் திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் அமைந்துள்ள அழகர் சுந்தரராஜருக்காக அருளினார். மாதம் மும்மாரி மழை பொழிந்து தாமிரபரணி ஆற்றினால் வளம் பெற்ற ஊர்கள் ஏராளம். இந்த நதிக்கரையில் அமைந்து உள்ள சீவலப்பேரி அழகர் சுந்தரராஜருக்கு ஒரு விசே‌ஷம் உண்டு.

அது என்னவென்றால், ஆண்டு தோறும் தை மாத கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த கோவிலில் உள்ள விநாயகருக்கு மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜை நடைபெறும். இந்த பூஜை முடிந்த பின்னர் இங்குள்ள அழகருக்கு படி அளக்க வேண்டும். அதாவது அழகர் கோவில் கொடி மரம் முன்பு பெருமாளுக்கு அந்த வருடத்தில் விளைந்த பொருட்களை அவரவர் வசதிப்படி படி அளப்பு செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் விநாயகர் அருளாலும், அழகரின் திருவருளாலும் வருகிற வருடம் முழுவதும் அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை அழகர் அவர்களுக்கு படியளப்பதாக ஐதீகம். படி அளந்தால் படியளக்கும் அழகரின் பெருமைகளை உணர்ந்தவர்கள் ஏராளம்.

அழகருடைய காவல் தெய்வங்களுக் கும், பரிவார தேவதைகளுக்கும் கூட இது பொருந்தும். தினமும் காலை அழகரின் பிரசாதத்துக்கு தேவையான அரிசியும், கருவறை தீபத்துக்கு தேவையான எண்ணெய்யும் அருகில் உள்ள சுடலைமாட சுவாமியின் கோவிலில் இருந்து சுடலைமாட சுவாமியின் மேற்பார்வையில் பூசாரி ஒருவர் கொண்டு வருவார். அதன்பிறகே அழகருக்கு நைவேத்தியம் தயார் செய்யும் பணியும், கருவறை தீபமும் ஏற்றப்படுகிறது.

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அழகருக்கு ராஜபரிபாலன உற்சவம் நடைபெறும். இந்த உற்சவம் மிகவும் விசே‌ஷமானது. அன்றைய தினம் ராஜ அலங்காரத்தில் அழகர் கம்பீரமாக ஊரை வலம் வந்து கொலுமண்டபத்தில் அமர்வார். அவர்(அழகர்) முன்பு கோவில் கணக்காளர், அந்த வருடத்தின் கணக்கு வழக்குகள், மாதா மாதம் நடந்த விசே‌ஷங்கள், படி அளந்தவர்கள், மழை விவரம், விளைச்சல் போன்ற முக்கியமான தகவல்களை மிகவும் பவ்யமாக படிப்பார்.

பின்னர் அந்த ஊருக்கு தேவையான வி‌ஷயங்கள், குறைகள் போன்றவற்றை பகவானிடம்(அழகரிடம்) கூறுவார்கள். கோவிலுக்கு திருப்பணிக்கு உதவியவர்களுக்கு மரியாதை செய்யப்படும். அத்துடன் அந்த வருட கணக்கு முடிக்கப்படும்.

இந்த உற்சவத்தினால்(ராஜ பரிபாலன உற்சவம்) அழகர் மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி பண்ணுவதாக ஐதீகம். எனவே நமது முன்னோர்கள் வகுத்தளித்த பூஜை முறைகளை பின்பற்றி நாமும் உயர்வோமாக!.

சீவலப்பேரி பெயர்க்காரணம் உடைய ஊர். பொதிகை மலையில் உள்ள பெருமாளை அகத்திய மகரிஷி இங்கே பிரதிஷ்டை செய்து சிவபெருமானின் தலையில் உள்ள கங்கையில் இருந்து ஒரு கையில் நீர் முகந்து அழகருக்காக தாமிர பரணி நதியையும் உருவாக்கினார். பெருமாள் இங்கு வந்தவுடன் ஸ்ரீதேவியான மகாலட்சுமியும் இங்கு வருகிறாள். இந்த ஊரில் ஓடுகின்ற தாமிரபரணியால் செழித்து திகழும் இந்த பிரதேசத்தை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு நன் நாதனான அழகரையும், ஊரையும் மூன்று முறை வலம் வந்து அவருடன் இணைகிறாள். இதனால் இந்த பிரதேசம் ஸ்ரீவலம்வந்த பேரி என்றானது. தற்போது சீவலப்பேரி என்று அழைக்கப்படுகிறது.

மகாலட்சுமியின் அருளால் ஒருகாலத்தில் சீவலப்பேரி பட்டினம், மிகப்பெரிய வியாபார தலமாக திகழ்ந்தது. சந்தைகள், நீர்வழி விய£பாரம் என்று செழித்து இருந்தது. தலைநகரமாகவும் விளங்கியது. இந்த தகவல்கள் அழகர் கோவில் கருவறையை சுற்றி உள்ள கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வருகிறது.

– நெல்லை வேலவன்

Next Story