போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து


போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
x
தினத்தந்தி 12 Sep 2017 12:00 AM GMT (Updated: 11 Sep 2017 1:33 PM GMT)

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு என்றைக்காவது சென்றிருக்கின்றீர்களா..? புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் அங்கு எவ்வாறு வாழ்வைக் கடத்துகின்றார்கள் என்று என்றைக்காவது கண்ணால் கண்டதுண்டா..?

னநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு என்றைக்காவது சென்றிருக்கின்றீர்களா..? புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் அங்கு எவ்வாறு வாழ்வைக் கடத்துகின்றார்கள் என்று என்றைக்காவது கண்ணால் கண்டதுண்டா..?

எதற்காக அந்த மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும்?  நல்ல மனோநிலையில்தான் நாம் இருக்கின்றோமா என்பதை பரிசோதிப்பதற்காகவா..?  இல்லை இல்லை..! இறைவன் நமக்குத் தந்திருக்கும் அருட்கொடைகளை எண்ணிப் பார்ப்பதற்காக. இறைவன் வழங்கியிருக்கும் எண்ணிலடங்கா அருட்பேறுகளை நினைத்துப் பார்ப்பதற்காக. வாழ்நாளில் ஒருதடவையேனும் அங்கு கண்டிப்பாகச் சென்று வரவேண்டும். கண்ணால் காண்பதைப் போன்று வாழ்க்கைப் பாடத்தை வேறெதுவும் கற்றுத்தர முடியாதல்லவா.

தன் உடலை தானே கை களால் கீறிக்கொள்ளும் சிலர். சுவரில் தலையால் முட்டி மண்டையில் இருந்து ரத்தம் வழிந்தோடும் நிலையில் சிலர். ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை காக்கை வலிப்பு போன்று தொடர்ந்து கை கால்களை இழுத்து இழுத்து பாதிக்கப்பட்ட நிலையில் சிலர். என்ன பேசுகின்றோம், எதற்காக சிரிக்கின்றோம் என்று அறியாமலேயே சுற்றித் திரியும் சிலர். தினமும் எத்தனை முறை ஆடை அணிவித்தாலும் ஒவ்வொரு முறையும் ஆடையைக் களைந்து நிர்வாணமாக நிற்கும் பணக்கார முதியவர். தூங்கும் இடத்திலேயே மலஜலம் கழிக்கும் சிலர். அப்பப்பா.. சொன்னால் சொல்லி முடிக்க முடியாது. அந்த அளவுக்கு மனதை ரணப்படுத்தும் சோகக் காட்சிகள் இழைந்தோடும்.

இதுபோன்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அனேகமானவர்கள் பெரும் பணக்காரர்கள். ஆம், வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள். ஆயினும் ஏதோ ஒரு நெருக்கடியில் அல்லது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனநலம் குன்றியவர்களாக மாறியவர்கள். தன்னை மறந்து தன் சுற்றத்தை மறந்து என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று எதுவும் தெரியாமல் வாழ்க்கையை நகர்த்தும் துர்பாக்கியவான்கள். இவர்களைப் பார்க்கும்போதுதான் நாம் எவ்வளவு பாக்கியவான்கள் என்பது தெரியவரும்.

எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவர்களைப் போன்று இருக்கும் இவர்களை சந்திக்கும்போதுதான் அந்த ஆண்டவனுக்கு ஆயிரம் தடவை நன்றி கூறவேண்டும் என்ற உண்மையான எண்ணம் தோன்றுகிறது. அதுவும் ஒன்றல்ல இரண்டு, பத்து, இருபது வருடங்களாக மனோநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது என்பது எவ்வளவு கொடுமை..?!

இறைவன் நமக்கு அனேகமானவற்றைத் தந்துள்ளான். அவன் நமக்கு எதையெல்லாம் தரவில்லை என்று எண்ணிப்பார்த்து கவலைப்படுவதைவிட, எதையெல்லாம் தந்திருக்கின்றான் என்பதை எண்ணி அவனுக்கு நன்றி செலுத்தும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்வதே நல்ல மனிதனுக்கு அடையாளம்.

செல்வம் இல்லையா.. ஆரோக்கியம் இருக்கிறதே என்று ஆறுதல் கொள்ளுங்கள். ஆரோக்கியம் இல்லையா.. அறிவு இருக்கிறதே என்று ஆறுதல் கொள்ளுங்கள். பேரறிவும் இல்லையா.. யாருக்கும் தீங்கிழைக்காத நல்ல மனிதனாக இருக்கின்றேனே என்று நிம்மதிப் பெருமூச்சு விடுங்கள். ஏனெனில் நல்ல மனிதனாக இருத்தல் என்பதே இன்றைய பொழுதில் பெரும் அருட்கொடைதான். எனவே இருப்பவற்றை வைத்து போதுமாக்கி அவற்றுக்கு நன்றி செலுத்தும் மனோபாவம் வளர்ப்போம்.

நபித்தோழர்களைப் பாருங்கள். அடுத்தவரிடம் என்ன இருக்கிறது என்று அலசி ஆராய்ந்து பின்னர் அதை நினைத்துக் கவலைப்படுபவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை. ஒன்றைப் பெறவேண்டுமென்றால் முடிந்தவரை முயற்சி செய்வார்கள். கிடைக்கவில்லையா.. மூலையில் முடங்கிப்போக மாட்டார்கள். கிடைத்ததைப் பொருந்திக்கொள்வார்கள். இல்லாததை நினைத்துக் கவலைப்படாமல்.. இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடைபவர்களாகவே நபித்தோழர்கள் இருந்துள்ளனர்.

தாதுஸ் ஸலாசில் எனும் போருக்காக அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களுடைய தலைமையில் ஒரு படையை நபி (ஸல்) சிரியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். எதிரிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதை அங்கு சென்றபின்னரே முஸ்லிம்கள் அறிகின்றனர். உதவி கோரி அல்லாஹ்வின் தூதருக்கு தூது அனுப்பினார்கள்.

அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அந்தப் படையில் அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

படையினர் விடை பெறும் வேளையில் அபூ உபைதா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நீங்கள் இருவரும் (நீங்களும் அம்ர் பின் அல்ஆஸ் அவர்களும்) கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்’’.

படை சிரியா வந்து சேர்ந்தது. உதவிக்கு வந்து சேர்ந்த படையை வரவேற்ற பின்னர் அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அபூ உபைதா (ரலி) அவர்களிடம் கூறினார்: ‘‘நீங்கள் எனக்கு உதவியாகவே வந்துள்ளீர்கள். ஆகவே நான்தான் இங்கு பொறுப்புதாரி’’.

அபூ உபைதா (ரலி) கூறினார்: ‘‘இல்லை. என்னுடன் வந்த படையினருக்கு நான் பொறுப்புதாரி. உங்களுடன் இருக்கும் படைக்கு நீங்கள் பொறுப்புதாரியாக இருங்கள்’’.

பொதுவாக அபூ உபைதா (ரலி) மென்மையான சுபாவம் கொண்டவர். உலக விவகாரங்கள் குறித்து அவ்வளவாக அலட்டிக்கொள்ளமாட்டார். எனவே அமீராகவும் பொறுப்புதாரியாகவும் இருக்க வேண்டும் என்பதில் அவர் ஒருபோதும் ஆசை கொண்டதில்லை. என்றாலும் தம்மோடுவந்த படையினருக்கு தாம்தானே பொறுப்பாளராக இருக்க முடியும் என்பதற்காகவே அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களிடம் அவ்வாறு கூறினார்.

அம்ர் (ரலி): ‘‘இல்லை. நீங்கள் எனக்கு உதவியாகவே வந்துள்ளீர்கள். ஆகவே நான் தான் பொறுப்புதாரி’’ என்று மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.

அபூஉபைதா (ரலி): ‘‘அம்ரே! நாங்கள் இங்கு புறப்பட்டு வரும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்’ என்று என்னிடம் உபதேசித்தார்கள். ஆகவே உங்களோடு நான் கருத்து வேறுபாடு கொள்ள மாட்டேன். நமக்கிடையே கருத்து மோதல் வேண்டாம். உங்களுக்கு நிச்சயம் நான் கட்டுப்படுவேன்’’.

மீண்டும் அம்ர் (ரலி) அவர்கள்: ‘‘அவ்வாறெனில் நான் தான் அமீர். நீங்கள் எனக்கு உதவி செய்வதற்காக வந்தவர்கள்’’.

ஒப்புக்கொண்டார் அபூ உபைதா (ரலி). போர் முடிந்தது. போர்களத்தில் இருந்து மக்கள் மதீனாவுக்குத் திரும்பினர். அவர்களில் ஆரம்பமாக மதீனாவை வந்தடைந்தவர் அவ்ஃப் பின் மாலிக் (ரலி) ஆவார். வந்தவர் நேரடியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து சிரியாவில் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் விவரித்தார்.

அனைத்தையும் செவியுற்ற பின்னர்.. பதவியின் மீது பேராசை கொள்ளாத.. கிடைத்ததைப் பொருந்திக்கொண்ட அபூ உபைதாவைக் குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் பெருமிதம் கொண்டார்கள். பின்னர் அருகில் இருந்த தோழர்களிடம் கூறினார்கள்: ‘‘அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் அருள் பாலிப்பானாக! அல்லாஹ் அவருக்கு அருள் பாலிப்பானாக!. அவர் எப்போதும் நன்மையை நாடக் கூடியவராகவே இருந்துள்ளார்’’.

ஆம். தளபதியாக இருந்தால் என்ன.. சாதாரண படைவீரனாக இருந்தால் என்ன.. அல்லாஹ்வின் பாதையில் போராடத்தானே வந்துள்ளோம். எனவே பொறுப்புதாரியாக இருந்துதான் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றல்லவே. இதுதான் அபூ உபைதா (ரலி) அவர்கள் வழிமுறை.

வாழ்வின் இருளான பகுதிகளைப் பார்ப்பதற்கு முன்னர் வெளிச்சப் பகுதிகளைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் மனநிறைவு ஏற்படும். இல்லையேல் மனநிம்மதி நம்மைவிட்டு தொலைந்துவிடும்.

ஆகவேதான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்’. (புகாரி)

பணம் அதிகமாக இருப்பதைக் கொண்டு ஒருவரின் செல்வ நிலையைத் தீர்மானிக்கலாகாது. ஏனெனில், எத்தனையோ பணக்காரர்கள் நிறையப் பணம் இருந்தும் மனக்குறை உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். போதுமென்ற மனம் இல்லாமல், மென்மேலும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இவர்களின் பேராசையைப் பார்க்கும்போது இவர்களை ஏழைகள் என்றே சொல்லத் தோன்றும். ஆகவே உண்மையில் செல்வம் என்பது போதுமென்ற மனமே ஆகும். இருப்பதைக் கொண்டு நிறைவு செய்து, இல்லாதவற்றின் மீது பேராசை கொள்ளாமல் இருப்பவனே செல்வன் ஆவான்.

மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

Next Story