விஞ்ஞானப் பார்வையில் ஷாமனிஸம்!


விஞ்ஞானப் பார்வையில் ஷாமனிஸம்!
x
தினத்தந்தி 12 Sep 2017 1:00 AM GMT (Updated: 11 Sep 2017 2:07 PM GMT)

இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை, பல ஆன்மிக முறைகளில் ஒன்றாகவோ அல்லது காட்டுமிராண்டித்தனமான அணுகுமுறையாகவோ மட்டுமே அறிவுமிக்க மக்களால் ஷாமனிஸம் பார்க்கப்பட்டு வந்தது.

ருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை, பல ஆன்மிக முறைகளில் ஒன்றாகவோ அல்லது காட்டுமிராண்டித்தனமான அணுகுமுறையாகவோ மட்டுமே அறிவுமிக்க மக்களால் ஷாமனிஸம் பார்க்கப்பட்டு வந்தது. விஞ்ஞானிகள் ஷாமன்களை மனப்பிறழ்வு அடைந்த ஆசாமிகளாகவும், அவர்கள் சடங்குகளின் உச்சத்தில் அடையும் நிலைகளை வலிப்புக்கு நிகரான நோய்ப் பிரச்சினைகளாகவுமே கண்டார்கள். ஆனால்  இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானிகளின் கவனத்தைச் சிறிது சிறிதாக ஷாமனிஸம் ஈர்க்க ஆரம்பித்தது. ஷாமனிஸ முறைகளில் ஆழமான மனோதத்துவ அணுகுமுறைகளும், அதற்கும் மேம்பட்ட அம்சங்களும் இருக்கின்றன என்பதை முதலில் கவனித்தவர், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற மனோதத்துவ மேதையான கார்ல் ஜங்க்.

இவர் தான் மனிதனின் ஆழ்மனம் பலவிதங்களில் அவனுடைய நலத்திலும், உயர்விலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை முதலில் கண்டவர். அவர் ஷாமனிஸ முறைகளுக்கும், நவீன மனோதத்துவ முறைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். ஷாமன்கள் தங்கள் சடங்குகளின் முடிவில் அரை மயக்க நிலையில் நுணுக்கமான உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்வதும், மனோதத்துவச் சிகிச்சைகளில் ஹிப்னாடிசம் முதலான வழிகளில் சிகிச்சைக்கு உட்படுத்தும் மனிதனை ஆழ்மன நிலைகளுக்கும் அழைத்துச் செல்வதும் கிட்டத்தட்ட ஒரே விதமாக இருப்பதைக் கண்டுபிடித்து அவர் சொன்னார். உடனே இருபதாம் நூற்றாண்டின் மனோதத்துவ மேதைகள் கவனம் ஷாமனிஸம் மீது வர ஆரம்பித்தது. அவர்கள் விஞ்ஞான முறைப்படி ஷாமனிஸ முறைகளை ஆராய ஆரம்பித்தார்கள்.

முக்கியமாக ஷாமனிஸத்தில் ஷாமன் உயர் உணர்வு நிலையை அடையும் போது, அவன் மூளையில் ஏற்படும் மாற்றங்களை   electroencephalography   (EEG) என்று சொல்லப்படும் மூளை மின் அலை வரைவுக் கருவிகளால் அளக்க ஆரம்பித்தார்கள். இந்த ஆராய்ச்சிகளின் போது உண்மையான மயக்கம் எதுவும் வராமல் உணர்வு நிலைகளும் மாறாமல் மாறியது போல் நடித்த பல போலி ஷாமன்கள் பற்றியும் தெரிய வந்தது. இப்படியெல்லாம் விஞ்ஞானக்  கருவிகள் கண்டுபிடிக்கின்றன என்று தெரிந்த பின் போலிகள் ஆராய்ச்சிக்கு வராமல் ஒதுங்கிக் கொண்டார்கள் என்றாலும் உண்மையான ஷாமன்கள் ஆராய்ச்சிக்கு அச்சமில்லாமல் வந்தார்கள். அவர்கள் உயர் உணர்வு நிலை பெறும் நேரத்தில் அவர்களது மூளைகளில் மின்காந்த அலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை (EEG)  என்னும் மூளை மின் அலை வரைவுக் கருவிகளை வைத்து அளந்தார்கள். அவர்கள் மூளையில் ஒரு வினாடிக்கு எத்தனை அலைகள் ஏற்படுகின்றன என்பதை    CPS  (Cycles per second)    என்ற குறியீடுகள் வைத்து அவர்கள் அளந்தார்கள்.

இந்த அலைகள், அதன் வகைகள் குறித்து என் ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூலில் விரிவாக எழுதியுள்ளேன். இப்போதைக்கு இங்கு சம்பந்தப்படும் முதலிரண்டு வகை களான பீட்டா மற்றும் ஆல்பா அலைகள் பற்றிப் பார்ப்போம். பொதுவாக ஒரு விழிப்புணர்வுள்ள சாதாரண மனிதனின் மூளையில் 14–க்கும் மேற்பட்ட சிபிஎஸ் அலைகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். அதை பீட்டா அலைகள் என்று அழைப்பார்கள். அவன் உறங்க ஆரம்பிக்கும் போது, அரைத் தூக்க நிலைகளுக்குச் செல்ல ஆரம்பிக்கும் போது, 8 முதல் 13 வரை தான் சிபிஎஸ் அலைகள் இருக்கும். அதை ‘ஆல்பா அலைகள்’ என்று சொல்வார்கள். உண்மையாகவே மயக்கம் அடைந்து உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்லும் ஷாமன்கள் மூளை அலைகள், ஆல்பா அலைகளாக இருந்தன. இந்த ஆல்பா அலைகள் தான் விஞ்ஞானிகள் முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஆழ்ந்திருக்கும் போதும், தியானங்களில் திபெத்திய லாமாக்கள் போன்ற வல்லுனர்கள் ஆழ்ந்திருக்கும் போதும் வெளிப்படுகின்றன என்பது தான் வியக்க வைக்கும் தகவல்.

ஷாமனாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் சில காலம் ஷாமன் பைத்தியம் பிடித்தவனைப் போலவே மாறி விடுவதையும், ஜன்னி அல்லது வலிப்பு வந்தது போல ஷாமன் துடிப்பதையும் குறித்து கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. அப்படிப் பைத்தியம் அல்லது ஜன்னியால் துன்புறுவது தான் ஷாமனாவதற்கான அறிவார்ந்த வழியா என விமர்சகர்கள் கேட்பதுண்டு. அதற்கு ஷாமனிஸத்தை மிக ஆழமாக ஆராய்ந்த   Mircea Eliade     என்ற அறிஞர், பைத்தியம் பிடித்தது போலவும், வலிப்பு வந்தது போலவும் துடிக்கும் ஷாமன் தானாக அந்த நிலைக்குள் நுழைந்து தானாக அதிலிருந்து வெளிவர முடிந்தவனாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். ஆனால் உண்மையாகவே பைத்தியம் பிடித்தவர்களும், ஜன்னி வந்தவர்களும் தானாக அப்படி ஆவதுமில்லை, பாதிக்கப்பட்டவர்கள் பின் சிகிச்சை இல்லாமல் தானாக குணமாவதுமில்லை என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார். மேலும் ஷாமனாக மாறுபவன் பிறகு நீண்ட காலம் உயர் உணர்வு நிலைகளுக்குப் போக முடிந்தவனாக இருக்க முடிவதையும் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்லாமல் ஷாமனாகப் போகிறவன் சோதிக்கப்படும் காலத்தில் படும் கஷ்டங்கள், குழப்பமான மனநிலைகள், பயங்கள் எல்லாம் அவனை ஆழமாக சுயபரிசோதனைகளுக்கு உட்படுத்தி குறைபாடுகள் நீங்கி மிகத் தெளிவாக மீண்டு வருவதும் ஆத்மபரிசோதனை முறையே என்றும் கூறுகிறார்.

  David Grove    என்ற உளவியல் அறிஞர் ஷாமனிஸ சடங்குகளில் ஷாமன் வேறு உலகங்களுக்குச் செல்வது போல சொல்லப்படுவது உணர்வுநிலை மாற்றங்கள் மூலமாக மனிதன் ஆன்மிகப் பயணத்தில் பல பரிமாணங்களைக் காண்பதாகவே இருக்கின்றது என்கிறார். அது மட்டுமல்லாமல் மூளை நரம்பியல் ப்ரோ கிராம்கள் (neurolinguistic programming)  மற்றும் ஹிப்னாசிஸ் (hypnosis) சிகிச்சை முறைகள் ஷாமனிஸ அம்சங்களை ஒட்டி இருப்பதாகவும் கூறுகிறார்.   Jeannette M. Gagan    என்ற உளவியல் அறிஞர் இன்னும் ஒருபடி மேலே சென்று நவீன உளவியல் மருத்துவத்தில் உபயோகிக்கும் பல சிகிச்சைகள் அறிந்தோ அறியாமலோ ஷாமனிஸ அடிப்படைகளில் இருந்து எடுக்கப்பட்டவையே என்று கூறு கிறார்.

Michael Winkelman   என்ற அறிஞர் ஷாமனிஸ சடங்குகளின் போது ஷாமனின் உடல் பாகங்களில், குறிப்பாக மூளையின் நரம்பு மண்டலங்களில், ஏற்படும் மாற்றங்களை மிக விரிவாக ஆராய்ந்துள்ளார். அவர் ஷாமனிஸ சடங்குகளில் உயர் உணர்வு நிலைகளின் போது ஷாமனின் உடலின் முக்கிய பாகங்கள் ஓய்வு நிலைக்குச் சென்று விடுகின்றன என்றும் மூளையில் செய்திகள் அனுப்பவும், பெறவும் காரணமான பகுதிகளில் மட்டும் மிக அதிக செயல்பாடுகள் தெரிகின்றன என்றும் கூறுகிறார். பிரச்சினைகளைச் சொல்லி மேலான உலகங்களில் இருந்து தகவல்கள் பெற்றுத் தருவதாக ஷாமனிஸம் சொல்வது கற்பனை அல்ல விஞ்ஞானமே என்பதற்கு இதை விட வேறென்ன உதாரணம் சொல்ல முடியும்?

விளையனூர் எஸ். ராமச்சந்திரன்   Vilayanur S. Ramachandran   என்ற அறிஞர் தமிழ் நாட்டில் பிறந்து அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மூளை நரம்பியல் பேராசிரியர் ஆக இருப்பவர். மூளை சம்பந்தமான பல புத்தகங்களை எழுதியிருக்கும் அவர் பல பல்கலைக்கழகங்களிலும், விஞ்ஞான அமைப்புகளிலும் தொடர்ந்து சிறப்புரைகளாற்றிக் கொண்டிருப்பவர். அவர் மனித மூளையின் நரம்பு மண்டலங்களில் ஆன்மிக சிந்தனைகள், ஆன்மிகச் சின்னங்கள் போன்றவை ஷாமன்கள் போன்ற குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே கூடுதலான உணர்வுகளையும், தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்று கூறுகிறார். சாதாரண மனிதர்கள் எப்போதாவது பிரபஞ்ச ரகசியங்களைத் தற்செயலாக அறியும் போது, உண்மையான ஷாமன்களைப் போன்ற ஆன்மிகவாதிகள் அடிக்கடி இறைவனின் சித்தத்தை அறிய முடிந்த வல்லவர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார்.

இவற்றை எல்லாம் படிக்கும் போது ஷாமனைத் தேர்ந் தெடுப்பதற்கு முன்பான சோதனைக்காலத்தில் அவனது அனுபவங்களிலும், ஷாமன் சடங்குகளைச் செய்து உயர் உணர்வு நிலைகளை அடையும் அனுபவங்களிலும் ஷாமனின் உடலிலும், மூளை அலைகளிலும் ஏற்படும் மாற்றங்கள் உண்மையானவை என்றே ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல அவை விஞ்ஞானக் கருவிகளில் அளக்க முடிந்தவையாகவும் இருக்கின்றன. ஷாமனிஸம் அந்த நேரங்களில் உடலை விட்டு வெளியேறி மேல் உலகத்திற்கோ, பாதாள உலகத்திற்கோ செல்ல முடிவதாகச் சொல்லுவது உணர்வு நிலைகளின் மாற்றங்களை ஆதி மனிதன் அர்த்தப்படுத்திக் கொண்ட முறையாகவே தோன்றுகிறது.

இனி நிகழ் காலத்தின் ஷாமனிஸம் பற்றிய சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போமா?

–தொடரும்.

Next Story